Published:Updated:

தமிழக மக்கள் மாநிலக் கட்சிகளைத்தான் ஆதரிக்க வேண்டும்! - பா.ஜ.க-வுக்கு எதிராக சீறிய தினகரன்

தேசியக் கட்சிகள் மாநில நலனில் சரியாக செயல்பட முடியாமல் இருக்கிறது. காவிரி பிரச்னை, பெரியார் அணை பிரச்னைகளில் வாக்கு வங்கி அரசியலுக்காக நடுநிலையோடு செயல்படவில்லை என குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

தமிழக மக்கள் மாநிலக் கட்சிகளைத்தான் ஆதரிக்க வேண்டும்! - பா.ஜ.க-வுக்கு எதிராக சீறிய தினகரன்
தமிழக மக்கள் மாநிலக் கட்சிகளைத்தான் ஆதரிக்க வேண்டும்! - பா.ஜ.க-வுக்கு எதிராக சீறிய தினகரன்

`தேசியக் கட்சிகள் மாநில நலனில் சரியாக செயல்பட முடியாமல் இருக்கிறது. காவிரி பிரச்னை, பெரியார் அணை பிரச்னைகளில் வாக்கு வங்கி அரசியலுக்காக நடுநிலையோடு செயல்படவில்லை’ என குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி.தினகரன் பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் நடைபெற்ற 21-வது கிறிஸ்துமஸ் விழாவில் அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி. தினகரன் பேசுகையில், ``தமிழக மக்கள் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் விதமாக ஆர்.கே. நகர் மக்கள் என்னை வெற்றிபெறச் செய்தனர். தமிழக அரசியல் வரலாற்றில் இடைத்தேர்தலில் வரலாற்றுச் சாதனையாக ஒரு சுயேச்சை வேட்பாளரை வெற்றிபெற வைத்தார்கள். உதய சூரியன் சின்னத்தை டெபாசிட் இழக்கச் செய்து, எம்.ஜி.ஆரால் சுட்டிக்காட்டப்பட்ட இரட்டை இலைச் சின்னம் இன்று துரோகிகள் கையில் இருப்பதால் அந்த சின்னத்தையும் தாண்டி வெற்றிபெற்றேன்.

இன்று மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் பிரிவினையை உருவாக்க சில சக்திகள் செயல்பட்டு வருகிறது. தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகிறார்கள். தமிழ்நாட்டை முன்னுக்குக் கொண்டு வரத்தான் நாங்கள் ஆட்சிக்கு வர நினைக்கிறோம். ஆட்சி அதிகாரம் இருந்தால்தான் மாற்றத்தை உருவாக்க முடியும். கன்னியாகுமரி மாவட்ட மக்கள், தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். தேசிய கட்சிகள் மாநில நலனில் சரியாக செயல்பட முடியாமல் இருக்கிறது.

காவிரி பிரச்னை, பெரியார் அணை பிரச்னைகளில் வாக்கு வங்கி அரசியலுக்காக நடுநிலையோடு செயல்படவில்லை. தமிழக மக்கள் மாநில கட்சிகளை ஆதரிக்க வேண்டும். உங்களுக்காக உழைக்கும் நபர்கள் யார் என்று எண்ணி வாக்களிக்க வேண்டும். பிரிவினை செய்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழக மக்கள் அவர்களைப் புறந்தள்ள வேண்டும். தமிழக மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும்" என்றார்