Published:Updated:

``என் குரலை அடக்குவதால் மட்டும் எதை மாற்றிவிடுவார்கள்?!'' - உமர் காலித்

``என் குரலை அடக்குவதால் மட்டும் எதை மாற்றிவிடுவார்கள்?!'' - உமர் காலித்
``என் குரலை அடக்குவதால் மட்டும் எதை மாற்றிவிடுவார்கள்?!'' - உமர் காலித்

``பாஜக அரசுக்கு, யாரையாவது தேச துரோக நிழலில் காட்டி உண்மையான பிரச்னைகளை திசை திருப்ப வேண்டும். மக்களுக்குக் கற்பனையான எதிரிகளை உருவாக்குவதுதான் இவர்களது உத்தி" - உமர் காலித்

ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் கன்னையா குமார், மாணவர் தலைவர் உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோரின் மீது தேசத்துரோக வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான இறுதிக்கட்ட வேலைகளில் காவல்துறையினர் இருப்பதாக `எக்னாமிக் டைம்ஸ்' தெரிவித்திருக்கிறது.

குற்றப்பத்திரிகையில் எட்டு காஷ்மீரி மாணவர்களின் பெயர்களும் இணைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசியிருக்கும் இடதுசாரி செயற்பாட்டாளரும், மாணவர் தலைவருமான ஷேஹ்லா ரஷீத், ``முந்தைய தேர்தல்களில் பா.ஜ.க பயன்படுத்திய அதே உத்திதான் இது. இதில் புதிதாக எதுவுமில்லை. போராடிய பலரையும் தேசத்துரோகிகளாகச் சித்திரித்து அசாம், உத்தரப்பிரதேசத்தில் வென்றார்கள். இப்போது ஐந்து மாநிலத் தேர்தல்களில் முற்றிலுமாகத் தோல்வியைத் தழுவிய பிறகு, அதே தேசத்துரோகத் துருப்புச்சீட்டை எடுத்து விளையாடுகிறார்கள். பொருளாதாரத்திலும் விவசாயிகள் பிரச்னைகளிலும் ஜீரோவாகச் செயல்பட்டிருப்பதால், இப்போது இதை கையில் எடுத்திருக்கிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் கருத்துரிமை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் மாணவர் தலைவர் உமர் காலித். அந்தக் கூட்டம் சில மாணவர்களின் மனதைப் புண்படுத்தலாம் என்ற காரணத்துக்காக, கடைசி நேரத்தில் ரத்துசெய்யப்பட்டது. அதற்கு கண்டனம் தெரிவித்துப் பேசிய உமர் காலித், `பேச்சுரிமையை அடக்கும் உத்தியை பா.ஜ.க அரசு நாடு முழுவதும் கடைப்பிடிக்கிறது’ என்றார் வட இந்திய ஊடகங்களால் தீவிரவாதியாகச் சித்திரிக்கப்படும் தனக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான கேள்விக்கு இப்போது பதிலளித்திருக்கும் உமர் காலித், ``இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தேர்தல் தோல்விக்குப் பிறகு, அவர்களால் செய்ய முடிவது இதுதான்'' என்றார். தொடர்ந்து சில கேள்விகளுக்கு பதிலளித்தார் உமர்.

``மிகச் சமீபத்தில் உங்களைக் கொல்ல முயற்சி நடந்திருக்கிறது. அதுபற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?''

``பா.ஜ.க அரசுக்கு யாரையாவது தேசத்துரோக நிழலில் காட்டி உண்மையான பிரச்னைகளை திசைதிருப்ப வேண்டும். மக்களுக்கு கற்பனையான எதிரிகளை உருவாக்குவதுதான் இவர்களது உத்தி. அதை வைத்து நிஜமான பிரச்னைகளை திசைதிருப்பலாம் அல்லவா? ஆர்.எஸ்.எஸ்-ஸின் பல தீவிரவாதச் செயல்பாடுகளை, இவர்களால் சத்தமே இல்லாமல் கடந்து போக முடியும். என் மீதான கொலை முயற்சி, எனக்கு அச்சத்தை அளித்திருக்கிறது. நானும் சாதாரண மனிதன்தான். சூப்பர் மேன் அல்ல. என்னை நோக்கி துப்பாக்கி காட்டப்பட்ட அந்த ஒரு நிமிடம், எனக்கு கெளரி லங்கேஷ் பன்சாரி போன்ற இன்னும் பல செயற்பாட்டாளர்களும்தான் மனதில் வந்து போனார்கள். இவர்களுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. மக்களுக்கான ஒற்றைக்குரலை அடக்குவதால் மட்டும் என்ன மாறிவிடப்போகிறது? நான் ஒருவன் கொல்லப்பட்டால் மட்டும் என்ன மாறிவிடப்போகிறது? பாசிசத்துக்கு எதிரான குரலை இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது.''

``நீங்கள் காங்கிரஸை மட்டும் விமர்சிப்பதில்லை என்னும் விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``இது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. காங்கிரஸ் ஆட்சியின்போது கல்வி தனியார்மயத்தையும், ஆபரேஷன் கிரீன் ஹேண்ட், பழங்குடிகளுக்கு எதிரான தாக்குதல்கள் எனப் பலவற்றைப் பேசியிருக்கிறோம். கட்சி பேதமில்லாமல் மக்களுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் எதிர்த்தே வந்திருக்கிறோம். மதவாதத்தால் இந்தியாவைத் துண்டுதுண்டாக மாற்றுவதற்கான செயல்பாடுகளால் பா.ஜ.க-வை மிக அதிகமாக எதிர்க்கிறோம்.''

``தேசத்துரோக வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலாக இருக்கிறது. உங்களது பார்வையில் யாரெல்லாம் தேசவிரோதிகள்?''

``தேசியவாதம் என்பதும், தேசப்பற்று என்பதும் தேசிய வரைபடங்களை மதிக்கும் விஷயமல்ல. மக்களுக்காக, மக்களோடு இணைந்திருப்பவர்கள்தான் தேசப் பற்றாளர்கள். அதைவிடுத்து முதலாளிகளுக்காக நாட்டையும் மக்களையும் விற்பவர்களையும், மதவாதம் செய்பவர்களையும், ஆட்சி செய்கிறேன் என்னும் பெயரில் பொய்களை மட்டுமே பேசிக்கொண்டு இருப்பவர்களையும், சிறுபான்மையினரை ஒடுக்குபவர்களையும், பூர்வகுடி மக்களின் வளங்களைப் பிடுங்கிக்கொண்டு அவர்கள் வயிற்றில் அடிப்பவர்களையுமே நான் தேசவிரோதிகள் என்கிறேன்.''

அடுத்த கட்டுரைக்கு