Published:Updated:

`விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் மட்டும் வெற்றியைத் தராது!’ - பா.ஜ.க அரசுக்கு ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ்

`விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் மட்டும் வெற்றியைத் தராது!’ - பா.ஜ.க அரசுக்கு ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ்
`விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்புகள் மட்டும் வெற்றியைத் தராது!’ - பா.ஜ.க அரசுக்கு ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ்

வரப்போகும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பா.ஜ.க அரசுக்கு முக்கிய ஆலோசனைகளைக் கூறியுள்ளது.


 

தேசியவாதிகளால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பான ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) நேரடியாக எந்தத் தேர்தலிலும் பங்கு கொள்ளாது. அமைப்பின் இந்துத்துவா கொள்கைகளுக்கு ஒற்றிருக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்கும். அதன்படி பா.ஜ.க-வுக்கு ஆதரவளித்து வருகிறது. பா.ஜ.க-வுக்கு அவ்வப்போது ஆலோசனைகளையும் ஆர்.எஸ்.எஸ் தலைமை நிர்வாகிகள் கூறுவது வழக்கம். நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் பா.ஜ.க சரிவைச் சந்தித்தது. அதுவும் மூன்று முக்கிய இந்தி பேசும் மாநிலங்களில் தோல்வியைத் தழுவியது. 

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தோல்வி பிரதிபலிக்கக் கூடாது என்பதில் பா.ஜ.க கவனமாகச் செயல்பட்டு வருகிறது. நடுத்தர மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள், விவசாயிகள், சிறுகுறு தொழிலாளர்கள், சுயதொழில் செய்வோர் உள்ளிட்டவர்களைக் கவரும் வகையில் திட்டங்களை முன்மொழிவதில் முழுவீச்சில் இறங்கிவிட்டது. அதேபோன்று பா.ஜ.க நிர்வாகிகள், தொண்டர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க வேண்டிய கட்டாயத்திலும் பா.ஜ.க இருக்கிறது. 


 

இதனிடையே பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகிய செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பா.ஜ.க மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பே பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகத்,   `பணமதிப்பிழப்பிழப்பு நடவடிக்கையால் பாதிப்புக்குள்ளான சிறுகுறு தொழிலாளர்கள் நலனுக்காக ஒரு முழுமையான கொள்கை வரைவை மத்திய அரசு வெளியிட வேண்டும்’ என அந்தச் சமயத்தில் பரிந்துரைத்தார். 2019 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க பா.ஜ.க எந்தெந்த துறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைமை நிர்வாகி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கிறார். 


 

`பா.ஜ.க 2014-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி ராமர் கோயில் எழுப்பவில்லை என்றால் பெருமளவிலான தொண்டர்கள் ஆதரவை இழக்க நேரிடும். பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் அதீத கவனம் செலுத்த வேண்டும். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதில் எதிர்க்கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு அறிவிப்பு வெளியிடுகின்றன. கடன் தள்ளுபடியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. விவசாயிகளின் உண்மையானத் தேவைகள் என்ன என்பதை உணர வேண்டும். தரமான விதைகள், இயற்கை உரங்கள், நீர் மேலாண்மை, தடையற்ற மின்சாரம் உள்ளிட்டவற்றை உறுதி செய்ய வேண்டும். வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் நுழைவதால் சிறிய வங்கிகள் பாதிக்கக்கூடாது. விலைவாசி உயர்வைப் பற்றியும் கவனம் வேண்டும்’ இவ்வாறு பா.ஜ.க-வுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு!