Published:Updated:

"இச்சமூகம் பல நன்மைகளைப் பெறக் காரணமானவர்!" - பெரியார் நினைவுதின பகிர்வு

1935-ல்கூட பொதுவுடைமை பிரசாரத்தை நிறுத்துகிறேன் என்று சொன்னாரே தவிர, பொதுவுடைமை தேவை இல்லை என்று கூறவில்லை. ``மே தினம் கொண்டாடியாவது பொதுவுடைமையை மக்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள்'' என்றே அறிவுறுத்தினார்.

"இச்சமூகம் பல நன்மைகளைப் பெறக் காரணமானவர்!" - பெரியார் நினைவுதின பகிர்வு
"இச்சமூகம் பல நன்மைகளைப் பெறக் காரணமானவர்!" - பெரியார் நினைவுதின பகிர்வு

தன்னுடைய கருத்தியலால் இன்றும் நம் சமூகத்தில் களமாடிக்கொண்டிருப்பவர், தந்தை பெரியார். அவருடைய நினைவு தினம் இன்று. 

சாதியத்தை, சமத்துவம் என்னும் சாட்டையால் அடித்து, அச்சமத்துவத்துக்கு எதிராகச் செயல்படுவோரைத் தன் செயல்பாடுகளால் ஓடஓட விரட்டினார். என் கடவுளை எதிர்த்து யாரும் பேசக் கூடாது என்று தன் கருத்தியல் புனிதம்காத்தோர் மத்தியில், யாராயிருப்பினும் நானாய் இருப்பினும் முரண்படு என்று பகுத்தறிவைப் பரப்பினார். இப்படி எவ்வளவோ விஷயம் இருக்க, அரைகுறை அறிவோடு கணிப்பின் அடிப்படையிலான 50 வார்த்தை அடங்கிய பார்வேர்டு மெசேஜுகளும், அவரைப் பற்றிய பொய்ப் பிரசாரங்களும் பலபேரிடத்தில் ஒரு தவறான பிம்பத்தைத் தோற்றுவித்துள்ளது. அந்தப் பிம்பத்தின் வெளிப்பாடே, 'பெரியார் இல்லை என்றால் சமுக மாற்றமே நிகழ்ந்திருக்காதா?' என்ற கேள்வி. ஆனால், இதைப் பெருபான்மையாய்ப் பயன்படுத்துவோர் ஏதோ ஒருவகையில் பெரியாரின் வாயிலாக ஏற்பட்ட சமூக மாற்றத்தால் பயனடைந்தவரே.

அவர் செய்த விஷயங்களை, அவர்மீதான முரண்கள் சிலவற்றைப் பார்த்தோமேயானால், அவரைப் பற்றிய தெளிவு பிறக்கும். இந்தித் திணிப்பைத் தடுத்ததில் பெரியாரின் பங்கு மிகப்பெரியது. தேவையிருக்கும் பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்ளலாம். தேவையற்ற திணிப்பையே அவர் எதிர்த்தார். இருந்தபோதிலும், நம் மொழி படும்பாடு அனைவரும் அறிந்ததே. நமக்கே இப்படி என்றால், ஏற்றுக்கொண்ட வடவர்களின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. அவர்களுடைய போஜ்புரி, அவந்தி ஆகிய சில மொழிகள் அழியும்  தறுவாயில் உள்ளன எனக் கூறப்படுகிறது. ஒரு சமூகம் தன் மண் சார்ந்தவற்றைவிட்டு அந்நியத்தை உள்வாங்கும்போது, அது அந்தச் சமூகத்துக்கு ஒரு பின்னடைவைக் கொடுக்கும். இது, தங்கள் அதிகாரத்தை விரிவுபடுத்த அயலார் எடுக்கும் நகர்வு. மொழியின், வரலாற்றின் முக்கியத்துவம் கருதியே மொழிசார்ந்த பிரச்னைக்குப் பெரியார் அதிகம் செயலாற்றினார். அக்கட்டுப்படுத்த முடியாத திணிப்பை, தன் தடியால் அடித்து விரட்டியதில் இச்சமூகம் எவ்வளவோ நன்மைகளைப் பெற்றுள்ளது.

வர்ணபேதங்களை வளர்க்கிற குலதொழில் முறையைக் கடுமையாக எதிர்த்தார். பேதங்களை, தீண்டாமையைத் திணித்து அதன்வாயிலாக ஒரு சமூகம் மட்டும் ஆதாயமடைகிறது என அவர் நம்பினார். 1951-ம் ஆண்டு ராஜாஜி ஆட்சிக்கு வந்தவுடனேயே, அரைநாள் தந்தையின் தொழிலைப் பயில வேண்டும் என்கிற `புதுக் கல்வித் திட்ட'த்தை அமல்படுத்தினார். இதை பயங்கரமாக பெரியார் சாடினார். `குலத்தொழில் முறையை ராஜாஜி அரசு ஊக்குவிக்கிறது' என அதை எதிர்த்து, பல போராட்டங்களை நடத்தினார். இதையடுத்து, ராஜாஜி தன் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், முதல்வரான காமராஜர், அந்தத் திட்டத்தையே ரத்து செய்தார். 

பொதுவுடைமை பற்றி ஆரம்பகாலத்தில் பேசியவர்களில் தோழர் சிங்காரவேலர், தோழர் ஜீவானந்தம் போன்றே பெரியாரும் முக்கியமானவர். அவரின் பொதுவுடைமைப் பிரசாரங்கள் அனைவரும் அறிந்ததே. முக்கியமாகத் தனது குடியரசு இதழில் ஜீவானந்தத்தை வைத்து, `கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை' வெளியிட்டதைக் கூறலாம். பொதுவுடைமை சார்ந்து அவர்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை உற்றுப் பார்த்தோமேயானால், அவை பெரும்பாலும் குழப்பமான ஒன்றாகவே கையாளப்படுகிறது. அவற்றில் முக்கியமானது, அவர் வர்க்கபேதங்கள் குறித்து அதிகம் செயலாற்றவில்லை என்பதே ஆகும். சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைக்கு முக்கியத்துவம் தந்தாரே தவிர, பொதுவுடைமையை அவர் ஒருபோதும் புறந்தள்ளவில்லை. 1935-ல்கூட பொதுவுடைமை பிரசாரத்தை நிறுத்துகிறேன் என்று சொன்னாரே தவிர, பொதுவுடைமை தேவையில்லை என்று கூறவில்லை. ``மே தினம் கொண்டாடியாவது பொதுவுடைமையை மக்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள்'' என்றே அறிவுறுத்தினார்.

இப்படி, அவரால் இந்தச் சமூகம் மேன்மையடைந்தது எவ்வளவோ இருக்கிறது. எனவே, அவர்மீதான போலி பிம்பத்தை உடைக்கவேண்டும். பெரியாரின் கருத்தியல், ஒரு விதை; அதை முடிந்த அளவு மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்து, பகுத்தறிவைப் படரச் செய்வதே அவருக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.