Published:Updated:

`வருந்தினார்; சேர்த்துக்கொண்டோம்’ - அ.தி.மு.க-வில் மீண்டும் ஓ.ராஜா!

`வருந்தினார்; சேர்த்துக்கொண்டோம்’ - அ.தி.மு.க-வில் மீண்டும் ஓ.ராஜா!
`வருந்தினார்; சேர்த்துக்கொண்டோம்’ - அ.தி.மு.க-வில் மீண்டும் ஓ.ராஜா!

பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருமான ஓ.ராஜா அண்மையில் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து மீண்டும் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.


கழகத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ளதாகக் கடந்த 19-ம் தேதி அக்கட்சியிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பாக அப்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ``அண்ணனா இருந்தாலும், தம்பியாக இருந்தாலும் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டால் நடவடிக்கை உறுதி' எனத் தெரிவித்திருந்தார். மேலும் ஓ.ராஜா நீக்கப்பட்டதுக்கு பின்னணியில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் இருந்ததாகக் கூறப்பட்டது. மதுரை மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவராக ஓ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் சிலர் தயாராகி வந்தனர். தவிர, ஆவின் விவகாரத்துக்குள் ராஜா நுழைவதைக் கூட்டுறவுத்துறை அமைச்சரும் வருவாய்த்துறை அமைச்சரும் விரும்பவில்லை.

இந்தச் சூழலில், மதுரையிலிருந்து கோட்டைக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஓ.ராஜா நீக்கப்பட்டார் என்ற தகவலும் மாவட்டத்தில் வலம் வந்தது. இந்த நீக்கம் ஓ.பன்னீர்செல்வம் மீதான எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கத்தைப் பிரதிபலிப்பதாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஓ.ராஜா மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்க்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ``தனது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் வருத்தம் தெரிவித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொள்ள வேண்டிக் கேட்டுக்கொண்டதால் இன்று முதல் உறுப்பினராகக் கழகத்தில் இணைக்கப்படுகிறார்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேனி மாவட்டத்தில், `முறைகேடு மூலம் ஓ.ராஜா ஆவின் தலைவர் பதவியைக் கைப்பற்றினார் என்ற குற்றச்சாட்டால்தான் அவரைக் கட்சியிலிருந்து நீக்கினார்கள். ஆனால், அவர் தற்போதுவரை ஆவின் தலைவராகத்தான் நீடிக்கிறார். இப்படியிருக்கும்போது அவரைக் கட்சியில் மீண்டும் இணைத்துக்கொள்வது எப்படி நியாயமாகும்? இது வெறும் கண்துடைப்புதான். அரசியல் நாடகம்' எனத் தெரிவித்துள்ளனர்.