மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி)

என்ன செய்தார் எம்.பி? - பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி)

வாக்குறுதிகள் தாராளம்... நிறைவேறவில்லை ஏராளம்!

#EnnaSeitharMP
#MyMPsScore

‘நலமெல்லாம் பிறர்க்கென்று தேடும் குணம் இனி நாள்தோறும் இருக்கின்ற வரம் கேட்கிறேன்’ - தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணனுக்குப் பிடித்த வரிகள் இவை. பிறரின் நலனில் அக்கறைகொண்ட பொன்.ராதாகிருஷ்ணன், தனக்கு வாக்களித்த கன்னியாகுமரி தொகுதி மக்களின் நலனில் காட்டிய அக்கறை என்ன? 

தமிழகத்தின் ஒரே பி.ஜே.பி எம்.பி என்ற பெருமையைப் பெற்ற இவர், மத்திய இணை அமைச்ச ராகவும் ஆனார். கிராமங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொள்வது, சாலையோரக் கடைகளில் டீ குடிப்பது, ஆட்டோ டிரைவரின் வீட்டில் உணவு அருந்துவது, சாலையோர ஆலமர நிழலில் ஓய்வெடுப்பது என்று தடாலடிகளுக்குப் பஞ்சமில்லாத அரசியல்வாதி. ஆனால் விவசாயிகள், ‘‘விளைபொருட் களுக்கும் மிளகு, கிராம்பு போன்ற பணப் பயிர்களுக்கும் உரிய விலை கிடைக்கவில்லை. ‘ஏ.வி.எம் கால்வாய் சீர்படுத்தப்பட்டுச் சிறந்த முறையில் பராமரிக்கப்படும்’ என்றார். ‘கஸ்தூரிரங்கன் அறிக்கை மற்றும் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு எதிரான அம்சங்கள் நீக்கப்படும்’ என்றார். எதுவுமே நடக்கவில்லை’’ என வேதனைப்பட்டனர்.

விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ், ‘‘அதிகம் படித்தவர்களைக் கொண்ட இந்த மாவட்டத்தில், 42 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு ஐ.டி பார்க் அமைக்க வேண்டும் என்பது நீண்டகாலக் கோரிக்கை. மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மாணவர்களின் விருப்பம். மத்திய அமைச்சராக இருந்தும், இவர் எதையும் செய்யவில்லை. கன்னியாகுமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலை அமைக்கப் படுகிறது. மார்த்தாண்டத்தில் மேம்பாலப் பணி நடக்கிறது. ஓராண்டுக்கும் மேலாக அந்தப் பணிகள் நீடிப்பதால், பொது மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் பாதிப்பாக இருக்கிறது. நவீனத் தொழில்நுட்பம் என்ற பெயரில் மார்த்தாண்டத்தில் தரமற்ற பாலம் அமைக்கப்படுகிறது. பேச்சிப்பாறை அணையை ஆழப்படுத்தவோ, தூர்வாரவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரப்பர் தொழிற்சாலை கொண்டுவந்திருந்தால் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்க முடியும். அதையும் செய்யவில்லை. 

என்ன செய்தார் எம்.பி? - பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி)

இணையம் துறைமுகம் அமைக்க நடந்த முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது. இப்போது மணக்குடியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்க முயன்றுவருகிறார். அதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. யாருக்கும் பிரச்னை இல்லாத இடத்தைத் தேர்வுசெய்யாமல், ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என்று செயல்படுகிறார். ‘இந்து மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வாங்கிக் கொடுப்பேன்’ என்று வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவிட்டார். வாக்களித்த மக்களுக்கு அவர் எதையுமே செய்யவில்லை” என்றார்.

சமூக ஆர்வலரும் மீனவர்நலப் பிரதிநிதியுமான குறும்பனை பெர்லின், ‘‘மீனவர்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளைத் தேர்தலின்போது அவர் அள்ளி வீசினார். ராமேஸ்வரத்தில் நடந்த ‘கடல் தாமரை’ மாநாட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றுவோம் என உறுதியளித்தார். மத்திய மீன்வள நலத்துறை அமைச்சகம் அமைத்துக் கொடுப்பதாகச் சொன்னார். ஆனால், சிறு துரும்பைக்கூட அவர் அசைக்கவில்லை.

மீனவர்களைக் கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சுனாமிக்குப் பின்னர் குமரி மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பாக மாறிவிட்டது. அதனால் வேறு இடங்களிலிருந்தே தண்ணீரைப் பெற வேண்டிய நிலை. குடிநீர் கிடைக்காமல் தவித்த மீனவ மக்கள் மணவாளக்குறிச்சி அருகில் சொந்தமாக நிலம் வாங்கி, அதில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அங்கிருந்து கடியபட்டணம், முட்டம் ஆகிய மீனவ கிராமங்களுக்குத் தண்ணீர் கொண்டு சென்றனர். அதற்கு எதிராகத் தன் கட்சியினரைத் தூண்டிவிட்டு அவர் போராடச் செய்தார். அவரும் அதில் பங்கேற்றார். ஆனால், அங்கேயே அவரின் கட்சியினர் ஆழ்துளைக் கிணறு அமைத்து மீனவ கிராமங்களில் ஒரு குடம் தண்ணீரை ஆறு ரூபாய்க்கு விற்கிறார்கள்.

‘ஒகி’ புயலின்போது ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்களைக் காக்க அவர் எதுவும் செய்யவில்லை. பாதிப்புக்குள்ளான பகுதிக்கு பிரதமரை நேரில் அழைத்து வராமல், அரசு விருந்தினர் மாளிகையில் தங்கவைத்து ஒருசில மீனவர்களை மட்டும் அழைத்துச் சென்றார். குளச்சலில் ரூ.2,500 கோடியில் வர்த்தகத் துறைமுகம் அமைக்கக் கோரினோம். ஆனால், 30,000 கோடி ரூபாயில் சரக்குப் பெட்டக மாற்று முனையத்தை மணக்குடியில் அமைக்க முயற்சி நடக்கிறது. ‘இதற்குக் காரணம் கமிஷன் ஆசையா?’ என மக்கள் கேட்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் திட்டம் இது’’ என்று ஆவேசப்பட்டார்.

தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினரும் கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவருமான ஸ்ரீராம், ‘‘திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் குமரி மாவட்டம் இருப்பதால், தொடர்ந்து புறக்கணிக்கப் படுகிறது. திருவனந்தபுரத்தில் ரயில்களை நிறுத்த இடவசதி இல்லாததால் ஒரு சில ரயில்கள் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டுச் செல்கின்றன. சென்னைக்குச் செல்லக்கூடிய அந்த ரயில்களும் கேரளா வழியாகச் செல்வதால் குமரி மக்களுக்குப் பலன் இல்லை. பொன்.ராதாகிருஷ்ணனின் முயற்சியால் மதுரை-கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதைப் பணிகள் தொடங்கியுள்ளன. ஹைதராபாத் திருவனந்தபுரம் சபரி விரைவு ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்கச் செய்துள்ளார். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் குமரி மாவட்டத்திலிருந்து புதிதாக ஒரு ரயில்கூட இயக்கப்படவில்லை. நாகர்கோவிலிலிருந்து மதுரைக்குத் தினசரி ரயில் இயக்கப்படும் என்றார். குழித்துறை வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இரண்டுமே நடக்கவில்லை’’ என்றார்.

தக்கலை அருகில் உள்ள முத்தலக்குறிச்சி  கிராமத்தை பொன்.ராதாகிருஷ்ணன் தத்தெடுத்தார். சாலை, குடிநீர் வசதி, சுகாதார மேம்பாடு என பிற கிராமங்களைவிட இந்த கிராமம் மேம்பட்டுள்ளது. 50 லட்சம் ரூபாயில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியுள்ள அமைச்சர், கிராமத்துக்கு வந்து மக்களோடு அமர்ந்து பேசி, தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கிறார்.

பத்மநாபபுரம் தி.மு.க எம்.எல்.ஏ மனோ தங்கராஜிடம் பேசினோம். ‘‘மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதைவிட, எந்தத் திட்டத்தில் ஆதாயம் கிடைக்குமோ அதைச் செயல்படுத்துவதிலேயே அமைச்சர் ஆர்வம் காட்டுகிறார். அவரது நிதியில் போடப்பட்ட பல சாலைகள், சில மாதங்களிலேயே சீரழிந்துவிட்டன. ‘விளையாட்டை மேம்படுத்த சாய் சப்-சென்டர் மீண்டும் கொண்டு வருவேன்’ என்ற அவரின் வாக்குறுதி காற்றில் கரைந்துவிட்டது.
முல்லையாற்றிலிருந்து உபரியாகக் கடலில் கலக்கும் தண்ணீரை, அணைகட்டி நெய்யாற்றின் இடது கால்வாயில் திருப்பிவிட வேண்டும் என்கிற கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை. ரப்பர், வாழை சார்ந்த தொழிற்சாலைகளைக் கொண்டுவந்து வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவும் தவறிவிட்டார்’’ என்று படபடத்தார்.

ம.தி.மு.க மாவட்டச் செயலாளரான வழக்கறிஞர் வெற்றிவேல், ‘‘மீனவர்களுக்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைத்தொடர்பு வசதி செய்து கொடுக்கப்படும். பேரிடர் காலங்களில் மீட்புப்பணிக்காக ரேடார் வசதியுடன் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும் என அவர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற வில்லை. தோவாளையில் பூ விளைச்சல் அதிகம். அங்கு சென்ட் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். நாகர்கோவிலிலிருந்து மதுரை வழியாகச் சென்னைக்குக் கூடுதலாக பகல்நேர எக்ஸ்பிரஸ் ரயில் விட்டிருக்கலாம். யாருக்கும் எதுவும் செய்யாமலே ஐந்து வருட காலத்தை வீணடித்து விட்டார்’’ என்றார் கோபமாக.

‘‘சுற்றுலா தொடர்பாக ஏராளமான வாக்குறுதிகளை அளித்தார். ‘கடற்கரை, மலையோர சுற்றுலா மையங்களை மேம்படுத்தி, கன்னியாகுமரி சுற்றுலா மாவட்டமாக அறிவிக்கப்படும்’ என்கிற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ‘இராஜாக்கமங்கலம் தெக்குறிச்சி கடற்கரை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாகத்தரம் உயர்த்தப்படும்; வயக்கலூர் பகுதி சுற்றுலா மையமாக உருவாக்கப்படும்; கல்லுக்கூட்டம் நீர்ச்சுனை சுற்றுலா மையமாக்கப்படும்; பெருஞ்சாணி அணையில் படகு விடப்படும்; மணக்குடி காயலில் படகு போக்குவரத்துடன் சுற்றுலா மையம் அமைக்கப்படும்’ என்று பல வாக்குறுதிகள் பஞ்சராகி விட்டன’’ எனப் புலம்புகிறார்கள் கன்னியாகுமரி மக்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மிக அதிகமான வாக்குறுதிகளை வாரி வழங்கியவர் பொன்.ராதாகிருஷ்ணன்தான். ‘தாய்நாட்டுப்பணியில் பொன்.ராதாகிருஷ்ணன்’ எனப் பெயர் போட்டு வெளியிட்ட அறிக்கையில், 63 வாக்குறுதிகள் கொடுத்திருந்தார். பெரும்பாலான வாக்குறுதிகள் புஸ்வாணம்தான்.

இறுதியாக பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ‘‘ரூ.3,988.43 கோடி மதிப்பீட்டில் மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளைச் சீராக்கும் பணிகள் முடிந்துள்ளன. காவல்கிணறு - களியக்காவிளை சாலை சீர்செய்யப்பட்டுள்ளது.  போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. கிடப்பில் போடப்பட்டிருந்த கன்னியாகுமரி-திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. துறைமுகம் அமைக்க மத்திய அரசால் ரூ.27,000 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. துறைமுகத் திட்டத்துக்கு சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள், அவர்களிடம் பேசிவருகிறோம். 

மதுரை-நாகர்கோவில் இடையே ரூ.2,387 கோடி மதிப்பீட்டில் இரட்டை ரயில்பாதைப் பணிகள் நடந்துவருகின்றன. கன்னியாகுமரி-திருவனந்தபுரம் இடையே ரூ.1,153 கோடியில் இரட்டை ரயில் பாதைப் பணிகள் நடக்கின்றன. சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை அமைக்க நான் வலியுறுத்தியதால், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு ஆய்வுகள் நடைபெறுகின்றன.

நாகர்கோவிலில் பேருந்து முனையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது. இதற்கான இடத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வுசெய்து வருகிறது. நாகர்கோவிலில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. நாகர்கோவிலில் விமான நிலையம் அமைக்க உகந்த இடம் கிடைக்காததால், நெல்லை மாவட்டத்தில் அமைக்க ஆய்வு நடக்கிறது.

சுற்றுலா மேம்பாட்டுக்காக முதல் கட்டமாக ரூ.100 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க வேளிமலை கிராமத்தில் 459 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
மருத்துவ சிகிச்சைக்கு உதவிகேட்டு விண்ணப்பித்த 88 பேருக்கு பிரதமரின் நிவாரண நிதியில் ரூ.92,30,000 பெற்றுக் கொடுத்துள்ளேன். ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்குச் சென்று கத்தார், ஓமன், ஈரான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் கைது செய்யப்பட்ட 235 மீனவர்களை மீட்டுள்ளேன். ஏழை இந்து மாணவர்களுக்கு எனது சம்பளத்தில் கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறேன்’’ என்றார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- பி.ஆண்டனிராஜ், ஆர்.சிந்து
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி)
என்ன செய்தார் எம்.பி? - பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி)
என்ன செய்தார் எம்.பி? - பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

‘க
ன்னியாகுமரி - களியக்காவிளை இடையே நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. அதனால், பொதுமக்கள் நடக்க முடியாத நிலை. வாகன நெரிசலால் விபத்துகளும் நிகழ்கின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்று வலியுறுத்தி எம்.பி அலுவலகத்தில், குமரி மகாசபா தலைவர் ராவின்சனை மனுசெய்ய வைத்தோம். அந்த மனு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து குமரி மகாசபாவுக்குக் கடிதம் வந்தது. அதில், ‘ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன’ என்று இருந்தது. ஆனால், முழுமையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே, நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது குமரி மகாசபா.

என்ன செய்தார் எம்.பி? - பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி)
என்ன செய்தார் எம்.பி? - பொன்.ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி)