Published:Updated:

பூஞ்சை நோயால் கடும் பாதிப்பு -நெற்பயிர்களுடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்

பூஞ்சை நோயால் கடும் பாதிப்பு -நெற்பயிர்களுடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்
பூஞ்சை நோயால் கடும் பாதிப்பு -நெற்பயிர்களுடன் மனு அளிக்க வந்த விவசாயிகள்

ஈரோட்டில், பூஞ்சை நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களைக் கையில் ஏந்தியபடி, விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். 

ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகா சுண்டக்காம்பாளையம், உக்கரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 10-க்கும் மேற்பட்டோர், பூஞ்சை நோய்த் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களோடு கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர். ‘சமீபத்தில், கோமாரி நோய் தாக்குதலால் எங்களுடைய கால்நடைகள் எல்லாம் இறந்துபோக, அதில் இருந்தே இன்னும் மீளாமல் இருக்கிறோம். இதற்கிடையே விவசாயிகள் ஏக்கர் கணக்கில் பயிரிட்டிருந்த நெற்பயிர்களுக்கு பூஞ்சை நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக’க் கண்ணீர் வடித்தனர்.

இதுகுறித்து புகார் அளிக்க வந்த மணியன் என்ற விவசாயி, “எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலரும் ஏக்கர் கணக்கில் நெல் பயிரிட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு, திடீரென நெற்கதிர்களில் பூஞ்சான் நோய் மற்றும் புகையான் நோய்த் தாக்குதல் ஏற்பட்டது. இதனால், நெற்கதிர்களில் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டு, பயிர்கள் கருமையாக மாற ஆரம்பித்துவிட்டன. விவசாயத் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தைத் தெளித்தும் நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அறுவடை சமயத்தில் நெற்பயிருக்கு இப்படி பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதால், விவசாயிகள் பலரும் நொறுங்கிப் போய்க் கிடக்கின்றனர். கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டிருக்கிறார்கள். வங்கிகளில் கடன் வாங்கித்தான், ஒரு ஏக்கருக்கு கிட்டத்தட்ட 40 ஆயிரம் ரூபாய் வரை செலவுசெய்திருக்கிறோம். 'தை பொறந்தா வழி பொறக்கும்'னு சொல்லுவாங்க. ஆனா இப்போ, நாங்க வாங்குன கடனை எப்படி அடைக்கிறதென்று வழி தெரியாமல் நொறுங்கிப் போய் கிடக்கிறோம். எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து, தகுந்த இழப்பீட்டுத் தொகையை அளித்தால்தான் விவசாயிகள் நிம்மதியாய்த் தூங்குவார்கள்” என்றார்.