Published:Updated:

`ரகசியங்களை வெளியிடத் தயங்க மாட்டேன்!'  - ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்ட பின்னணி

கட்சிக்குள் மீண்டும் ஓ.ராஜா சேர்த்துக்கொள்ளப்பட்டதில் பல்வேறு விவகாரங்கள் இருக்கின்றன. தேனி மாவட்டத்தில் ராஜா இல்லாமல் பன்னீர்செல்வத்தால் எதையும் சமாளிக்க முடியாது. அந்தளவுக்கு அவர் அதிரடியாகச் செயல்படக்கூடியவர்.

`ரகசியங்களை வெளியிடத் தயங்க மாட்டேன்!'  - ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்ட பின்னணி
`ரகசியங்களை வெளியிடத் தயங்க மாட்டேன்!'  - ஓ.ராஜா மீண்டும் சேர்க்கப்பட்ட பின்னணி

அ.தி.மு.க-வில் இருந்து அவசர கதியில் கட்டம் கட்டப்பட்டு, அதே அவசர கதியில் மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்பட்டிருக்கிறார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா. ` குடும்ப விவகாரங்கள் வெளியில் கசியலாம்' என்ற அச்சத்தின் காரணமாகவே தம்பியை மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக்கொண்டார் பன்னீர்செல்வம் என்கின்றனர், தேனி மாவட்ட அ.தி.மு.க-வினர். 

அண்ணா தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமியும், கடந்த 19-ம் தேதி மாலை அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தனர். அந்த அறிவிப்பில், `கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் வகையில் நடந்துகொண்டதாலும் பெரியகுளம் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஓ.ராஜா, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்' எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த அறிவிப்பு வெளியான அன்று காலைதான், மதுரை மாவட்ட ஆவின் தலைவர் பதவிக்கு ஓ.ராஜா தேர்வுசெய்யப்பட்டிருந்தார். தேர்தல் விதிகளை மீறி அவர் தேர்வுசெய்யப்பட்டதாகவும், இதனால் தேனி மாவட்டத்தில் பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு சரிந்ததாகவும் தகவல் வெளியானது. இதன் தொடர்ச்சியாக, `சொந்தத் தம்பியை கட்சியை விட்டே நீக்கிவிட்டார் பன்னீர்செல்வம்' என ரத்தத்தின் ரத்தங்கள் பேசிவந்தனர். 

இந்நிலையில், நேற்று அ.தி.மு.க-விலிருந்து வெளியான அறிவிப்பு ஒன்றில், `தனது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் வருத்தம் தெரிவித்து, தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக்கொள்ள வேண்டிக் கேட்டுக்கொண்டதால், இன்று முதல் உறுப்பினராகக் கழகத்தில் இணைக்கப்படுகிறார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

`ஆறே நாளில் எப்படி இந்த அதிசயிக்கத்தக்க மாற்றம் நிகழ்ந்தது?' என தேனி மாவட்ட அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். `` கட்சிக்குள் மீண்டும் ஓ.ராஜா சேர்த்துக்கொள்ளப்பட்டதில் பல்வேறு விவகாரங்கள் இருக்கின்றன. தேனி மாவட்டத்தில், ராஜா இல்லாமல் பன்னீர்செல்வத்தால் எதையும் சமாளிக்க முடியாது. அந்தளவுக்கு அவர் அதிரடியாகச் செயல்படக்கூடியவர். 2001-ம் ஆண்டில் பன்னீர்செல்வம் லைம் லைட்டுக்கு வந்த நாளிலிருந்தே, அதிகாரத்தில் மறைமுகமாக கோலோச்சத் தொடங்கிவிட்டார் ராஜா. தொடக்கத்தில் மணல் விவகாரங்களை அவர்தான் கவனித்துவந்தார். ஒருகட்டத்தில், ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் தலையெடுத்த பிறகு, ராஜாவின் முக்கியத்துவம் சரியத் தொடங்கியது. தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த மகன், மருமகன், சம்பந்தி ஆகியோருக்கு மட்டுமே பதவிகளை வாங்கிக்கொடுப்பதில் ஆர்வம் காட்டினார் பன்னீர்செல்வம். இதை ராஜா தரப்பினர் ரசிக்கவில்லை. அவருக்குள் இருந்த நீண்டநாள் கனவு, ஆவின் தலைவர் ஆக வேண்டும் என்பதுதான். இதே பதவியை தேனி மாவட்டப் பொருளாளர் செல்லமுத்துவும் விரும்பினார். ஆனால், தேர்தலில் ராஜாவை வெற்றிபெறவைத்தார் பன்னீர்செல்வம். இதனால் செல்லமுத்து தரப்பினர் கொந்தளித்தனர். அவர்களை சமாதானப்படுத்தவே தம்பியைக் கட்சியிலிருந்தே நீக்கினார்" என விவரித்தவர், 

``கட்சியிலிருந்து நீக்கினாலும் ஆவின் தலைவர் பதவியில் நீடித்தார் ராஜா. `மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும்' என அவர் கூறியபோது, `கொஞ்சநாள் போகட்டும்' எனக் கூறிவிட்டார் பன்னீர்செல்வம். இதை ஏற்காத ராஜா, `என்னுடைய நீக்கத்தை ரத்துசெய்யாவிட்டால், குடும்ப ரகசியங்களை வெளியில் விடுவேன்' என மிரட்டியதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இந்தப் பிரச்னையில் தேவையற்ற விஷயங்கள் வெளியில் கசிவதை பன்னீர்செல்வம் விரும்பவில்லை. தவிர, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதால், மாற்றுக் கட்சிக்கு ராஜா போய்விட்டால், அது பன்னீர்செல்வத்தின் செல்வாக்கில் பெரும் சரிவை ஏற்படுத்திவிடும். தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி சென்றதற்கே, `தினகரன் முகாம் கலகலத்துவிட்டது' என்றார்கள். அப்படியிருக்கும்போது, ஓ.பி.எஸ் குடும்பத்திலிருந்தே ஒருவர் வேறு கட்சிக்குப் போனால், அது கட்சிரீதியாக பன்னீர்செல்வத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதையெல்லாம் அலசிப் பார்த்துத்தான் மீண்டும் தம்பியை கட்சிக்குள் சேர்த்துக்கொண்டார். மொத்தத்தில் நீக்கமும் அவசர கதியில் நடந்தது, இணைப்பும் அவசர கதியில் நடந்தது. இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டுள்ள `சீனியர்' செல்லமுத்துவுக்கு என்ன பதவி கொடுக்கப்போகிறார்கள் என்பதைப் பொறுத்து, அடுத்தகட்ட சம்பவங்கள் அரங்கேறலாம்" என்றார் விரிவாக.