Published:Updated:

‘இதுதான் ஜெயலலிதா ஆட்சியா?’- தமிழக அரசை சாடும் கொங்கு ஈஸ்வரன்

‘இதுதான் ஜெயலலிதா ஆட்சியா?’- தமிழக அரசை சாடும் கொங்கு ஈஸ்வரன்
‘இதுதான் ஜெயலலிதா ஆட்சியா?’- தமிழக அரசை சாடும் கொங்கு ஈஸ்வரன்

நாமக்கல் அருகே உள்ள பொம்மைகுட்டை மேட்டில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கினார்.

நாமக்கல்லில் நடைபெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில செயற்குழுகூட்டத்தில், 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம் தேதி நாமக்கல்லில் நடைபெற உள்ள 2-ம் உலக கொங்கு தமிழர் மாநாட்டுக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஈஸ்வரன் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் , ``நாமக்கல்லில் நடைபெற உள்ள 2-ம் உலக கொங்கு தமிழர் மாநாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி 26 நாடுகளில் உள்ள கொங்கு நாட்டைச் சேர்ந்த மக்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே, அது உலக கொங்கு தமிழர் மாநாடாக நிச்சயம் இருக்கும். மின்சார வாரியம் மின் கோபுரங்களை அமைப்பதால் விவசாய நிலங்களை எடுக்க முயற்சி செய்கிறது. அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிபோக வாய்ப்பு உள்ளது. 

அதற்காக விவசாயிகள் ஒன்றிணைந்து கொங்கு நாட்டில் 8 இடங்களில் காத்திருப்பு போராட்டங்களை நடத்தினர். தற்போது உண்ணாவிரதப் போராட்டமாக அதை மாற்றி உள்ளனர். கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடந்த காத்திருப்புப் போராட்டத்துக்கு நான் நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்துள்ளேன். தொடர்ந்து மற்ற இடங்களில் நடக்கும் போராட்டங்களுக்கும் நேரில் சென்று ஆதரவு தெரிவிக்க உள்ளோம்.

நில மதிப்பீட்டில் 15 சதவிகிதம் இழப்பீடு தருவதாக அரசு சொல்கிறது. ஆனால், மின்கோபுரம் அமைக்கப்படும் இடத்தின் அருகே உள்ள 5 ஏக்கர் நிலத்தின் மதிப்பு போய்விடும். உலகத்தில் எங்குமே நிலத்துக்கு அடியில் உயர்மின் அழுத்த மின்சார வடங்களை எடுத்துச் செல்லவில்லை என அமைச்சர் சொல்கிறார். ஆனால், கேரள மாநிலத்தில் நிலத்துக்கு அடியில் கொண்டு சென்று உள்ளனர். அதை விவசாய சங்கத்தினர் படம் எடுத்து வந்து ‘வாட்ஸ்அப்’ குழுவில் பரப்பி வருகின்றனர்.

பக்கத்து மாநிலத்தில் செய்யும்போது ஏன் இங்கே முடியாது. 2½ மடங்கு செலவு செய்து நிலத்துக்கு அடியில் அதை அமைத்தால் என்ன தவறு. வார்த்தைக்கு வார்த்தை ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாகச் சொல்கிறார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது எரிவாயு குழாய் பிரச்னை வந்தது. அப்போது அவர் விவசாயிகளின் பக்கம் நின்றார். மத்திய அரசு எரிவாயு குழாய் பதிப்பதை விடமாட்டோம் என்று  சொன்னார்.

கேரளாவில் நிலத்துக்கு அடியில் மின்சார வடங்கள் எடுத்துச் செல்லப்படுவதை காண்பித்துவிட்டால் அமைச்சர் முடிவை மாற்றிக் கொள்வாரா வருகிற ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிக்கப்பட வேண்டும்" என்றார்.