Published:Updated:

``ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது!” -பொன்.ராதாகிருஷ்ணன்

``ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது!” -பொன்.ராதாகிருஷ்ணன்
``ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது!” -பொன்.ராதாகிருஷ்ணன்

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம். யாருடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள மத்திய அமைச்சர் முகாம் அலுவலகத்தில் வாஜ்பாய் உருவப்படத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மேக்கே தாட்டு அணை பிரச்னை தொடர்பாகக் கர்நாடகாவில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற முறையில் அவர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அது பற்றிப் பேசும் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் விடுதலைச் சிறுத்தைக் கட்சிகள் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அக்கட்சிகளின் கிளைகளைக் கலைத்துவிடுவார்களா? தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தில் இப்போது உள்ள பல்வேறு பிரச்னைகளுக்கு கழக ஆட்சியே காரணம். முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னைகளில் கடந்த 50 ஆண்டுகளில் தி.மு.க, காங்கிரஸ் செய்த துரோகத்தை மக்கள் மறந்துவிடமாட்டார்கள். இது தொடர்பாக விவாதம் நடத்த நான் தயார், அவர்கள் தயாரா? கடந்த 1999-ம் ஆண்டில் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தது. அப்போது தி.மு.க-வுக்கு பா.ஜ.க தேவைப்பட்டது. இப்போது பா.ஜ.க-வை தமிழகத்தைவிட்டு விரட்டி அடிப்போம் என்று தி.மு.க தலைவர் கூறுகிறார். அவரது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. தமிழகத்தில் இருந்து யார் விரட்டி அடிக்கப்படுவார்கள் என்பது தேர்தலுக்குப் பிறகு தெரியவரும். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம். யாருடன் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும்.

தமிழகத்தில் விளை நிலங்களில் உயர் கோபுரம் அமைப்பது தொடர்பாக அந்தத் துறை மந்திரியுடன் பேசியுள்ளேன். கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு ரஜினி வராதது பற்றி நான் எதுவும் கூற முடியாது. ஒப்பாரி வைக்கும் இடத்தில் அரசியல் செய்யக் கூடாது. குமரி மாவட்டத்தில், கோட்டாறு, ஒழுகினசேரி, தக்கலை ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டுமானத்துக்கு சுமார் 1,300 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது" என்றார்.