Published:Updated:

'5 சதவிகிதத்துக்குள் தினகரனை அடக்க வேண்டும்!' - எடப்பாடியிடம் அச்சம் தெரிவித்த எம்.பி-க்கள்

'5 சதவிகிதத்துக்குள் தினகரனை அடக்க வேண்டும்!' - எடப்பாடியிடம் அச்சம் தெரிவித்த எம்.பி-க்கள்
'5 சதவிகிதத்துக்குள் தினகரனை அடக்க வேண்டும்!' - எடப்பாடியிடம் அச்சம் தெரிவித்த எம்.பி-க்கள்

'சந்திரசேகர ராவும் இந்த அடிப்படையில்தான் வெற்றி பெற்றிருக்கிறார். தனித்துப் போட்டியிடுவதே நமக்கு நல்லது. நாளைக்கு டெல்லியில் எந்த ஆட்சி அமைந்தாலும், அதைப் பொறுத்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும்' எனத் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க-பா.ஜ.க இடையே கூட்டணி அமையும் முயற்சி நடப்பதாகப் பேட்டியளித்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். `ஜெயலலிதா பாணியில் தனித்துப் போட்டியிட்டால், மத்தியில் அடுத்து அமையப் போகும் அரசால் நமக்குப் பாதிப்பு நேராது' என எடப்பாடி பழனிசாமியுடம் தெரிவித்துள்ளனர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர். 

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார் ஸ்டாலின். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசியவர், `பிரதமர் நரேந்திர மோடி, அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்கு முயற்சி செய்வதாக எனக்குத் தகவல் வந்த வண்ணம் இருக்கிறது. அது கொள்கைக் கூட்டணியா, அல்லது கொள்ளைக் கூட்டணியா என்பதுதான் எனது கேள்வி. ஓ.பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் சேர்த்து வைத்தது யார் மோடி தானே!' எனக் கூறியிருந்தார். இதற்குப் பதில் கொடுத்த தமிழிசை, `தமிழகத்தில் பா.ஜ.க-வை ஒழித்துவிட்டாராம் ஸ்டாலின். இனி மற்ற இடங்களில் ஒழிக்கப் போகிறாராம். ஸ்டாலினால் அது முடியாது. தமிழகத்தில் இனிதான் பா.ஜ.க விஸ்வரூபம் எடுக்கப்போகிறது. நீங்களா நாங்களா என்று பார்த்துவிடத்தான் போகிறோம். தமிழ்நாட்டிலே உங்களால் யாரையும் எதிர்கொள்ள முடியவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 19.5 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளோம். `சாடிஸ்ட் பிரதமர்' என்று நீங்கள் சொல்லிக்கொள்ளலாம். மக்கள் அப்படி நினைக்கவில்லை' என்றார் கொதிப்புடன். 

`ஸ்டாலின் கூறியபடியே, அ.தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதா?' என்ற கேள்வியை அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். ``இன்னமும் அதற்கான முயற்சிகள் எதுவும் தொடங்கவில்லை. கூட்டணியா...தனித்துப் போட்டியா... என்பதிலேயே நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. சில எம்.பிக்களிடம், `உங்களுக்கு மீண்டும் சீட் கொடுப்பதில் எந்தவித சிரமமும் இருக்காது' எனக் கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், கூட்டணி விஷயத்தில் என்ன நடக்கும் எனத் தெரியாமல் பெரும்பாலான எம்.பி-க்கள் பதறுகின்றனர். கூட்டணிக்குள் பா.ஜ.க வருகிறது, பா.ம.க வரப்போகிறது எனத் தகவல்கள் வெளியாவதுதான் அச்சத்துக்குக் காரணம். பா.ஜ.கவோடு கூட்டணி உருவாவதை கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் விரும்பவில்லை. இதைப் பற்றிப் பேசிய தம்பிதுரையோ, `கரூரில் ஒரு லட்சம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். பா.ஜ.க-வோடு நாம் கூட்டணி வைத்தால் இந்த ஓட்டுக்கள் எதுவும் நமக்கு வந்து சேராது. செந்தில்பாலாஜி ஜெயித்துவிடுவார்' எனக் கூறியிருக்கிறார். 

இதையும் மீறி பா.ஜ.க கூட்டணிக்குப் போனால் சிட்டிங் எம்.பிக்கள் பலரும் வேறு கட்சிகளுக்குச் சென்றுவிடுவார்கள் அல்லது அ.ம.மு.கவுக்குப் போய்விடுவார்கள். இந்த அபாயத்தை எடப்பாடி பழனிசாமியும் உணர்ந்து வைத்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா பாணியில் தனித்துப் போட்டியிடுவோம் எனப் பேசத் தொடங்கியுள்ளனர் சில நிர்வாகிகள். இதுதொடர்பாக எடப்பாடிக்குப் பதில் கொடுத்த நிர்வாகிகள் சிலர், `சந்திரசேகர ராவும் இந்த அடிப்படையில்தான் வெற்றி பெற்றிருக்கிறார். தனித்துப் போட்டியிடுவதே நமக்கு நல்லது. நாளைக்கு டெல்லியில் எந்த ஆட்சி அமைந்தாலும், அதைப் பொறுத்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவும் முடியும். பா.ஜ.க-வோடு சேர்ந்தால் கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகள் அனைத்தும் தி.மு.க பக்கம் போய்விடும். தவிர, நம்முடைய வாக்குகளும் தினகரன் பக்கம் போய்விடக் கூடிய சூழல் இருக்கிறது' எனக் கூறியுள்ளனர். 

இதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமியோ, `ஸ்டாலினைத் தோற்கடிக்க வேண்டும். தேர்தலில் நமக்கும் அவருக்கும்தான் போட்டி. இந்தத் தேர்தலில் தினகரனின் செல்வாக்கு என்பது 5 சதவிகிதத்துக்குள்தான் இருக்க வேண்டும். விஜயகாந்தைப் போல 10 சதவிகித வாக்குகளுக்குள் அவர் போய்விடக் கூடாது. ஸ்டாலின்தான் நமக்குப் பிரதான எதிரி. ஆர்.கே.நகரில் 27 சதவீத வாக்குகளை வாங்கினோம். வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலையைப் பயன்படுத்தி 35 சதவீத வாக்குகளை எடுக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய வியூகமாக இருக்க வேண்டும். தெற்கிலும் மேற்கிலும் 15 தொகுதிகளுக்கு மேல் நம்மால் வெற்றி பெற முடியும். அதை நோக்கித் தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்துவோம்' எனக் கூறியிருக்கிறார். தனித்துப் போட்டி என்ற சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது அ.தி.மு.க. தேர்தல் நெருக்கத்தில் ஏதாவது மாற்றம் ஏற்படலாம்" என்றார் விரிவாக. 

கூட்டணி தொடர்பாக பா.ஜ.கவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் கேட்டோம். ``தமிழகத்தில் கூட்டணி தொடர்பாக இன்னும் எந்தப் பேச்சுவார்த்தைகளும் தொடங்கவில்லை. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியைத் தவிர்த்து, அந்தக் கூட்டணிக்குள் செல்லாத அத்தனை அரசியல் கட்சிகளும் எதாவது ஒரு நிலைப்பாட்டை எடுத்துத்தான் ஆக வேண்டும். அவர்களோடு நாங்கள் கூட்டணி சேருவதற்கு வாய்ப்புள்ளது. பிரதமராக மோடிக்கு யார் ஆதரவு தருகிறார்களோ, அவர்களை எல்லாம் நாங்கள் பரிசீலிப்போம். அப்படி வரக்கூடிய கட்சிகளை எல்லாம் பா.ஜ.க ஒருங்கிணைக்கும்" என்றதோடு முடித்துக் கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு