
“பிரதமர் திட்டம் வேஸ்ட்!” - அ.தி.மு.க எம்.பி ஸ்டேட்மென்ட்
#EnnaSeitharMP
#MyMPsScore
திருச்சி மாவட்டத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியது திருச்சி நாடாளுமன்றத் தொகுதி. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்து வழக்கறிஞர் பணிக்காக மாமனார் ஊரான திருச்சிக்கு இடம்பெயர்ந்தவர் குமார். இவருக்கு 2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. அத்தேர்தலில் வெற்றி பெற்று, 37 வயதிலேயே நாடாளுமன்றத்தில் கால்பதித்தார் குமார். 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார் ஜெயலலிதா. அப்போது அவர் பார்வையில் படும்படி ஓடியாடி வேலை பார்த்தார் குமார். போதாக்குறைக்கு ஜெயலலிதாவுக்கு நெருக்கமான சில அதிகாரிகளிடமும் பவ்யம் காட்டினார். அவர்களும் இவரைப் பற்றி நல்லபடியாக ‘நோட்’ போட்டு அனுப்ப... கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் குமாருக்கு அடித்தது யோகம். மீண்டும் வெற்றி பெற்றார். ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் எடுத்து மீண்டும் எம்.பி ஆனவர், தொகுதி மக்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ளாரா?
“புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆரம்பத்துல இருந்தே அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் குமாருக்கும் ஏழாம் பொருத்தம். ஒரு கட்டத்துக்கு மேல விஜயபாஸ்கரை எதிர்த்து ஒண்ணும் பண்ண முடியலை. அதனால், திருச்சிப் பக்கம் கவனத்தைத் திருப்பினார். ஜெயலலிதா இறந்ததுக்கு அப்புறம், திருச்சி லோக்கல் அரசியலில் காய்நகர்த்தி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்கிட்ட இருந்த திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்பைக் கைப்பற்றினார். எம்.பி ஆகுறதுக்கு முன்னாடி இருந்த குமார் வேற, இப்போ இருக்குற குமார் வேற. ஏராளமான சொத்துகளைச் சேர்த்துட்டார். ஆனால், தொகுதிதான் முன்னேறவே இல்லை” என்கிறார்கள் தொகுதிவாசிகள்.

“2011 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘கந்தர்வக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பேன்’னு ஜெயலலிதா வாக்குறுதி தந்தார். அதன்படி, ஆட்சிக்கு வந்ததும் கந்தர்வக்கோட்டைக்குப் பக்கத்துல அக்கச்சிப்பட்டியில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் புது பஸ் ஸ்டாண்டு கட்ட முடிவெடுத்தாங்க. ஆனா, ‘முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியனும் வேறு சிலரும் சேர்ந்து தங்கள் சுயலாபத்துக்காக சுடுகாடு இருக்குற இடத்துல பஸ் ஸ்டாண்டு கட்டுறாங்க’னு மக்கள் போராட்டம் பண்ணுனாங்க. அதைமீறி பிடிவாதமாக அங்கேயே பஸ் ஸ்டாண்டைக் கட்டினாங்க. ஆனா, அது மக்கள் பயன்பாட்டுக்கு வரலை. இப்போ அந்த இடம் ‘குடிமகன்களோட’ கூடாரமாகிடுச்சு. நாடாளுமன்றத் தேர்தல் சமயத்துல, ‘கந்தர்வக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்டையே இரண்டு கோடி ரூபாயில் புதுப்பிக்கிறேன்’னு குமார் வாக்குறுதி கொடுத்தார். ஆனா, அவர் ஜெயிச்சதுக்கு அப்புறம் பஸ் ஸ்டாண்டு மேல்கூரையை மட்டும்தான் மாத்தியிருக்காங்க. பஸ் ஸ்டாண்டு சேறும் சகதியுமாத்தான் இருக்கு” என்று புலம்புகிறார்கள் கந்தர்வக்கோட்டை மக்கள்.
“கந்தர்வக்கோட்டை அதிகளவு முந்திரி விளைந்த பகுதி. இங்கு, முந்திரி மதிப்புக்கூட்டு உற்பத்தி தொடர்பான ஆலைகள், ஏற்றுமதி மையம் அமைக்கணும்னு வருஷக்கணக்கா கோரிக்கை வைத்துவர்றோம். அதுக்கு எந்த முயற்சியும் செய்யலை. முந்திரி விவசாயமே நசிஞ்சுப்போச்சு” என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை பகுதிகளில் மல்லிகைப்பூ சாகுபடி அதிகம். அங்கு சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கை. அதுவும் நடக்கவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செழியன், “2008-ல், தி.மு.க ஆட்சியில் ரூ.3,200 கோடியில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாயனூரில் அணையும் கட்டப்பட்டது. ஆனால், கால்வாய் அமைக்கும் பணி தொடங்கவில்லை. அந்தக் கால்வாய் அமைந்தால் புதுக்கோட்டை, திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மூன்று லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இதற்கான திட்ட மதிப்பீடு, வரைபடம் ஆகியவற்றை மத்திய அரசிடம் தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. பத்து ஆண்டுகளாகக் கிடப்பில் இருக்கும் இந்தத் திட்டத்துக்காக எம்.பி நாடாளுமன்றத்தில் பேசவே இல்லை” என்கிறார்.
“ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா அறிவித்த திருவானைக்காவல் மேம்பாலம் கட்டி முடிக்கப் படாததால், மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், அங்கு பேருந்து நிலையம் அமைக்கவும் எம்.பி முயற்சி எடுக்கவில்லை. ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமானவை என்று கூறப்படும் குடியிருப்புகளைக் கையகப்படுத்தும் அடிமனை பிரச்சினையைத் தீர்த்து, மக்களுக்கே நிலத்தைச் சொந்தமாக்க வேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. அதையும் எம்.பி தீர்த்து வைக்கவில்லை” என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹேமநாதன்.
கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிட்டவரும், திருச்சி மாநகர முன்னாள் மேயருமான சாருபாலா தொண்டைமானிடம் பேசினோம். “மத்திய சிறைச்சாலை அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்படும் என்று சில மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால், சுயலாபங்களுக்காக அங்கே பேருந்து நிலையத்தைக் கட்ட குமார் துடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அந்தத் திட்டமும் கிடப்பில் உள்ளது. இதேபோல், திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகள், அரிஸ்டோ மேம்பாலப் பணிகள் உட்பட ஏராளமான திட்டங்கள் கிடப்பில் உள்ளன. வியாபாரிகளிடம் கருத்துக் கேட்காமல் திருச்சி காய்கறி மார்க்கெட்டை புதிய இடத்தில் கட்டியிருப்பதால், அங்கு வியாபாரிகள் செல்ல மறுக்கிறார்கள். அது திறப்பு விழா செய்யப்பட்டும் பூட்டியே கிடக்கிறது.
புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள் நான்கு எம்.பி தொகுதிகளில் அடங்கியுள்ளன. நான்கு எம்.பி-க்கள் இருந்தும் மாவட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. குமார், புதுக்கோட்டை பக்கம் கவனம் செலுத்துவதில்லை. அவரது பழைய சொத்து மதிப்பையும் இப்போதைய சொத்து மதிப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே அவர் செய்த சாதனைகள் தெரிந்துவிடும்” என்றார் சாருபாலா தொண்டைமான்.
திருச்சி பெல் தொழிற்சங்க நிர்வாகி பிரபு, “மின்வெட்டு, பெல் நிறுவனத்துக்குக் குறைந்துபோன ஆர்டர்கள் ஆகிய பிரச்னைகளால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. சுமார் ஐந்தாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எம்.பி பேசவே இல்லை. திருவெறும்பூர் சர்வீஸ் சாலை, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொண்டயம்பேட்டையில் மேம்பாலம் அமைக்காததால் விபத்துக்களில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இதை எம்.பி நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனாலும் நடவடிக்கை இல்லை” என்றார்.
எம்.பி குமார் திருச்சி மாவட்டம், சோமரசம் பேட்டையை அடுத்த தாயனூரை கடந்த ஆண்டு தத்தெடுத்திருந்தார். இந்த ஆண்டு திருவெறும்பூர் தாலுகாவில் பழங்கனாங்குடி பஞ்சாயத்தைத் தத்தெடுத்திருக்கிறார். அங்கெல்லாம் சென்றோம். “தாயனூர் வாரச்சந்தையை விரிவுபடுத்தணும், ஊருக்குள்ள இருக்குற குறுகலான சாலைகளை விரிவு படுத்தணும், சமுதாயக்கூடம் கட்டிக் கொடுக்கணும், சாக்கடை வசதிகள் ஏற்படுத்தித் தரணும் என நிறைய மனுக்கள் கொடுத்தோம். சாக்கடை மட்டும் வந்துச்சு. மத்த எதுவுமே நடக்கலை” என்றார் தாயனூரைச் சேர்ந்த மூர்த்தி. “பழங்கனாங்குடி பகுதியில்தான் துப்பாக்கித் தொழிற்சாலை உள்ளிட்ட ஆலைகள் இருக்கு. அந்த ஆலைகளின் சி.எஸ்.ஆர் நிதியைக் கேட்டு வாங்கி கிராமங்களுக்கு நிறைய செய்யலாம். ஆனா, உருப்படியா ஒரு வேலையும் செய்யலை. இங்கிருக்குற முத்துமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு வருஷமும் 15 நாளைக்கு திருவிழா களைகட்டும். துவாக்குடி, அசூர், ஏத்தண்டார்பட்டி, இலந்தைப்பட்டி உட்பட பதினஞ்சு கிராம மக்கள் இங்கே வந்து தங்குவாங்க. அங்க பொதுக் கழிப்பிடம் கேக்குறோம். அதைக்கூட அவர் செஞ்சு தரலை” என்றார் பழங்கனாங்குடியைச் சேர்ந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கக் கிளைச் செயலாளர் சித்திரமூர்த்தி.
இது குறித்து எம்.பி குமாரிடம் பேசினோம். “நான் எம்.பி ஆனபோது, திருச்சி விமான நிலையம் உள்நாட்டு விமான நிலையமாக இருந்தது. அதை சர்வதேச விமான நிலையமாக மாற்றியிருக்கிறேன். விமான நிலைய ஆலோசனைக் குழுவின் தலைவர் என்கிற முறையில், 930 கோடி ரூபாய் மதிப்பீட்டில், விமான நிலையத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த ஏற்பாடு செய்திருக்கிறேன்.விமானநிலையம், அரிஸ்டோ மேம்பாலப் பணிகள் நடைபெறும் இடத்துக்குப் பக்கத்துல ராணுவ நிலம் இருக்கு. ராணுவத்துக்கு வேறு இடம் கொடுக்க தமிழக முதல்வரிடம் பேசி, ஒப்புதல் வாங்கியிருக்கேன். மத்திய ராணுவ அமைச்சர், ரயில்வே அமைச்சர் ரெண்டு பேர்கிட்டயும் இதுபற்றி நேரில் பேசியிருக்கேன்.
திருச்சி முழுவதும் குற்றங்களைத் தடுக்க 86.40 லட்சம் ரூபாய் மதிப்பில் சி.சி.டி.வி கேமராக்கள் அமைச்சுக் கொடுத்துருக்கேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருச்சியை இணைத்தது, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையைத் தனியார்மயமாக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தியது ஆகியவற்றில் என் பங்கு முக்கியமானது. பெல் நிறுவனத்துக்கு ஆர்டர்கள் குறைந்தது தொடர்பாக மத்திய அரசிடம் பேசி, டெண்டர்கள் கிடைக்க வழி செய்திருக்கேன். கரூர் - திருச்சி சாலையில் குடமுருட்டி பாலத்தைப் புதுசாக் கட்டி, குடமுருட்டியில இருந்து முக்கொம்பு வரை சாலை அமைக்க 165 கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்துள்ளேன். திருவெறும்பூர் சர்வீஸ் சாலை பணிகள் தொடர்பாகவும் முதல்வரிடம் பேசியிருக்கேன். அதுக்கான பணிகளும் விரைவில் தொடங்கும். கந்தர்வக்கோட்டையில் ஆறரைக் கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைக்க நபார்டு மூலம் ஏற்பாடு பண்ணிருக்கேன். காவிரி - குண்டாறு திட்டம் பற்றி முதல்வரிடம் பேசியிருக்கேன். சீக்கிரம் அதுக்கான அறிவிப்பு வரும். புதுக்கோட்டை மாவட்டத்து அரசியல்ல நான் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் பணிகளைச் செஞ்சுட்டுதான் இருக்கேன்” என்றவரிடம் அவர் தத்தெடுத்த கிராமங்களின் நிலையைச் சொன்னோம்.
“என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க... தாயனூர் பஞ்சாயத்தில் 34 லட்சம் மதிப்பில் சாக்கடை வசதி, சோலார் வசதி, பள்ளிக்கூடக் கட்டடங்கள் அமைச்சிருக்கேன். பழங்கனாங்குடி பஞ்சாயத்துக்கு மூணு கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கியிருக்கேன். தேனேரிப்பட்டியில் ரேஷன் கடை கொண்டுவந்திருக்கேன். உண்மையை சொல்லணும்னா பிரதமர் மோடியோட ‘கிராமங்கள் தத்தெடுப்புத் திட்டம்’ சுத்த வேஸ்ட். இது எங்கேயும் சரியா நடக்கலை. அதுபத்தியும் நான் நாடாளுமன்றத்துல பேசியிருக்கேன். இருந்தாலும் நான் தத்தெடுத்த கிராமங்கள்ல என்னால முடிஞ்ச பணிகளைச் செய்திருக்கேன்” என்றார்.
உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
- ஜி.பிரபு, சி.ய.ஆனந்தகுமார்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி



எப்படி இருக்கிறது எம்.பி ஆபீஸ்?
புதுக்கோட்டை மாவட்டத்தில் எம்.பி-க்கு அலுவலகம் இல்லை. மனு கொடுக்க வேண்டுமென்றால் திருச்சிக்குத்தான் செல்ல வேண்டும். அங்கு திருச்சி - புதுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு வீட்டில் அலுவலகம் அமைத்துள்ளார். சமீபத்தில் அமைக்கப்பட்ட இந்த அலுவலகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். எம்.பி., திருச்சியில் இருந்தால் மட்டுமே அந்த அலுவலகம் களைகட்டுகிறது. மற்ற நேரங்களில் நோ ரெஸ்பான்ஸ். அலுவலகத்துக்கு வரும் மனுக்களை, அவரின் உதவியாளர்கள் பதிவுசெய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவதாகச் சொல்கிறார்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான 24 வயது கணேஷ், எ.புதூரைச் சேர்ந்த அ.தி.மு.க-வின் நீண்டகால உறுப்பினாரான கிருஷ்ணன் ஆகியோருக்கு மருத்துவ உதவிக் கேட்டு மனு கொடுத்தோம். இதுவரை அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.

