Published:Updated:

இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி?

இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி?
பிரீமியம் ஸ்டோரி
இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி?

இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி?

இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி?

இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி?

Published:Updated:
இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி?
பிரீமியம் ஸ்டோரி
இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி?

‘‘20 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்குத் தயார்’’ என்கிறார் ஸ்டாலின்; என்கிறார் டி.டி.வி.தினகரன். 20 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களையே நியமித்துவிட்டார்கள் எடப்பாடியும் பன்னீரும். ‘ஏதோ தேர்தல் ஆணையம்தான் தேர்தலை நடத்தாமல் சதி செய்கிறதோ’ என தமிழக மக்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள்.

இன்றைய சூழலில் இந்த 20 தொகுதிகளில் தேர்தல் நடந்தால் ஜெயிக்கப்போவது யார்? அதற்குமுன் ஒரு சின்னக் கணக்கு... இப்போது 97 எம்.எல்.ஏ-க்கள் பலத்துடன் இருக்கும் தி.மு.க கூட்டணி, ஒருவேளை இந்த 20 தொகுதிகளிலும் ஜெயித்தால், மெஜாரிட்டிக்கு ஓர் இடம் குறைந்தாலும் ஆட்சியைப் பிடிக்கலாம். சபாநாயகருடன் சேர்த்து 110 எம்.எல்.ஏ-க்கள் பலத்துடன் இருக்கும் எடப்பாடி அரசுக்கு, தன் பெரும்பான்மையைத் தக்கவைத்துக்கொள்ள ஒன்பது இடங்களில் வெற்றி தேவை.

எனவே, இந்த இடைத்தேர்தல் ஆட்சியையே மாற்றும் வல்லமை பெற்ற தேர்தல். இதில் மக்கள் விருப்பம் என்னவாக இருக்கிறது? காலியாக இருக்கும் 20 தொகுதிகளிலும் களம் இறங்கியது ஜூ.வி டீம். பத்து தொகுதி நிலவரங்கள் இந்த இதழில். மீதி பத்து தொகுதிகள் அடுத்த இதழில்...

இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி?

திருப்பரங்குன்றம்:

2016 சட்டமன்றத் தேர்தலில் இங்கு வெற்றிபெற்ற அ.தி.மு.க-வின் சீனிவேல், தேர்தல் முடிவுகளை அறியாமலே மரணித்ததுதான் சோகம். அடுத்து நடந்த இடைத்தேர்தலில் வென்ற அ.தி.மு.க-வின் ஏ.கே.போஸ், 2018, ஆகஸ்ட் மாதம் மரணமடைந்தார். உடனடியாக அங்கு களம் இறங்கிய தினகரன் அணியினர், சுறுசுறுப்பாக வேலை பார்க்கத் தொடங்கினார்கள். ஆனால், இடையே வந்திருக்கும் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்குத் தீர்ப்பு, அவர்களைச் சுணங்க வைத்துள்ளது. மாறாக, அ.தி.மு.க தொகுதியில் இறங்கிப் பட்டையைக் கிளப்புகிறது. 15 அமைச்சர்கள் தொகுதிக்குப்  பொறுப்பேற்றுள்ள நிலையில் இலவச வீட்டுமனைப் பட்டா, ஆதரவற்றோர் உதவித் தொகை, ஸ்கூட்டர் மானியம் என கேட்டுக் கேட்டுக் கவனிக்கிறார்கள். தீபாவளிக்குச் சிறப்பு கவனிப்பும் உண்டாம். தி.மு.க-வோ ‘தேர்தல் தேதியை அறிவித்ததும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று காத்திருக்கிறது. இன்றைய தேதியில் பட்டாசு வெடிக்கப்போவது அ.தி.மு.க. இரண்டாம் இடத்தில் இருக்கிறது அ.ம.மு.க.

பெரியகுளம்:

இங்கு ஓ.பி.எஸ் ஆதரவில் வெற்றிபெற்றார் கதிர்காமு. துணை முதல்வரின் சொந்த ஊரில் அவரது தயவு இல்லாமல் கதிர்காமு எதுவும் செய்ய முடியாத நிலை. அதிருப்தியில் இருந்தவரை அள்ளிக்கொண்டு போனார் தினகரன். கதிர்காமு தகுதிநீக்கம் செய்யப்பட்டதிலிருந்து பணிகள் எதுவும் நடக்காமல் தேங்கிநிற்கிறது பெரியகுளம். இதனால் ஆளும்கட்சிமீது அதிருப்தி அதிகம் உள்ளது. இதை அ.ம.மு.க பயன்படுத்திக்கொள்ளும். அதேநேரத்தில் கதிர்காமுக்கு பதிலாக வேறு வேட்பாளரை நிறுத்தக்கேட்டு அ.ம.மு.க-வில் குரல்கள் எழுகின்றன. துணை முதல்வரின் சொந்த ஊர் என்றாலும் தொகுதியில் எந்தவித வளர்ச்சியும் இல்லை. அ.தி.மு.க வெற்றி கேள்விக்குறியே. அ.ம.மு.க., தி.மு.க இடையேதான் போட்டி நிலவுகிறது.

இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி?

நிலக்கோட்டை:

கடந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பாக வெற்றி பெற்றவர் தங்கதுரை. அவரை தகுதிநீக்கம் செய்துவிட்டதால் தொகுதிக்குள் எந்தத் திட்டமும் வரவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. இடைத்தேர்தலுக்காக இப்போது ராமுத்தேவரை முன்னிலைப்படுத்துகிறது தினகரன் தரப்பு. ‘‘இதற்காகவா நான் அணிமாறி வந்தேன்’’ எனக் கொந்தளிக்கிறார் தங்கதுரை. அவர் தரப்புக்கும் ராமுத்தேவர் தரப்புக்கும் அடிதடியே நிகழ்ந்திருக்கிறது. இடைத்தேர்தலிலும் இது எதிரொலிக்கக்கூடும். அ.தி.மு.க எம்.பி உதயகுமார் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர்தான். அவர்மீதான அதிருப்தியும் கோஷ்டித் தகராறும் சேர்ந்துகொள்ள ஆளும்கட்சியின் ஓட்டுகள் பிரியும். கொஞ்சம் மெனக்கெட்டால் தி.மு.க ஜெயிக்க முடிகிற தொகுதி இது.

பரமக்குடி:

பலமுறை கைநழுவிப் போன எம்.எல்.ஏ வாய்ப்பு கடந்த தேர்தலில்தான் டாக்டர் முத்தையாவுக்குக் கைகூடியது. தினகரன் பக்கம் சென்றதால் அதையும் இழந்து தவிக்கிறார். இவருக்கு எதிராக அ.தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர் சுந்தர்ராஜும், தி.மு.க-வில் திசைவீரனும் களம் காணும் வாய்ப்புள்ளது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆதரவு கொடுப்பது நெசவாளர்களின் வாக்குகளை தி.மு.க-வுக்குக் கொண்டுசேர்க்கும். தற்போது கட்சி பிளவுபட்டிருப்பதால் அ.தி.மு.க-வுக்கு சேதம் அதிகமாகலாம். கடந்த தேர்தலில் அலட்சியத்தால் தி.மு.க பறிகொடுத்த தொகுதி பரமக்குடி. இம்முறை அலட்சியத்தை விட்டொழித்தால் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.

 சோளிங்கர்:

ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் சோளிங்கர் சி.கோபாலின் மகன் பார்த்திபன். அந்தத் தகுதிக்காகவே பார்த்திபனுக்கு வாய்ப்பளித்தார் ஜெயலலிதா. பார்த்திபன் வெற்றியும் பெற்றார். தி.மு.க கூட்டணியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஏ.எம்.முனிரத்தினம் பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இப்போது தொகுதியில் அ.தி.மு.க., அ.ம.மு.க இரண்டு கட்சிகள்மீதும் அதிருப்தி நிலவுகிறது. தி.மு.க-வும் காங்கிரஸும் ஒற்றுமையுடன் செயலாற்றினால் எளிதாக வெற்றி பெறலாம் என்பதே களநிலவரம்.

இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி?

திருவாரூர்:

திருவாரூரின் தேரோடும் வீதிகளில் கருணாநிதியின் அரசியல் சுவடுகள் அழியாமல் இருப்பது தி.மு.க-வுக்குப் பலம். வெளியூரிலிருந்து அழைத்துவந்த பார்வையாளர்கள் கூட்டத்தின் நடுவே ‘‘திருவாரூர் மக்கள் விரும்பினால் போட்டியிடுவேன்’’ என்று மு.க.அழகிரி அறிவித்திருப்பதைத் தொகுதி மக்கள் ரசிக்கவில்லை. தி.மு.க வேட்பாளராகப் பேசப்படும் ஒரே நபர், மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன். ஆனால் சாதி அரசியல், பஞ்சாயத்து சர்ச்சைகள் ஆகியவற்றில் பெயர் அடிபடுவதால் மக்கள் யோசிக்கிறார்கள். திருவாரூரைக் கைப்பற்ற, ‘ஆர்.கே. நகர் ஃபார்முலா’வை பயன்படுத்த நினைக்கிறது தினகரன் தரப்பு. அ.ம.மு.க சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் பெயர் அடிபடுகிறது. இன்னொரு பக்கம் ஆளும்கட்சித் தரப்பில் உதவிகள் வரிசைகட்டுகின்றன. எல்லாவற்றையும் தாண்டி கருணாநிதியின் செல்வாக்கால் தி.மு.க-வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

குடியாத்தம்:

அ.தி.மு.க சார்பில் கடந்த 2016 தேர்தலில் ஜெயந்தி வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் தி.மு.க-வினரின் அலட்சியமே ஜெயந்தியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. ஜெயந்தி எம்.எல்.ஏ-வாக இருந்தவரை குடியாத்தம் நகராட்சிக்கு ஒரு கோடி ரூபாய் மின் கட்டணப் பாக்கியைப் பெற்றுத் தந்தது, மருத்துவமனை, பள்ளிகளுக்கு மினரல் வாட்டர் மெஷின் அமைத்துக்கொடுத்தது என செயல்பட்டார். எனவே, அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஜெயந்தி கடும் போட்டியாக இருப்பார் என்கிறார்கள். ஜெயிப்பதற்கு தி.மு.க நன்கு இறங்கி வேலை பார்க்க வேண்டும் என்கிறார்கள் தொகுதி மக்கள்.

இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி?

அரவக்குறிச்சி:

பணப்பட்டுவாடா புகாரில் சிக்கி, தேர்தல் ஆணையத்தால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட தொகுதி அரவக்குறிச்சி. தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி இப்போது அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். ‘என் தொகுதியில் எந்தத் திட்டங்களையும் இந்த அரசு நிறைவேற்றுவதில்லை’ என்பது அடிக்கடி இவர் வைக்கும் குற்றச்சாட்டு. தொகுதிக்குள் செந்தில்பாலாஜிக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. அ.தி.மு.க-வில் எம்.பி தம்பிதுரை ஒன்றும் செய்யவில்லை என்ற அதிருப்திதான் மக்களிடம் உள்ளது. கடந்த தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.சி.பழனிச்சாமி ஒருவர்தான் செந்தில்பாலாஜிக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வேட்பாளர். அவர் இப்போது தொழிலில் நஷ்டம் அடைந்து கடன் பிரச்னையில் தத்தளிக்கிறார். செந்தில்பாலாஜி தனது வெற்றிக்காக ‘வெயிட்’டாக களம் இறங்கத் தயாராக இருக்கிறார். சாதி ஓட்டுகள், பணபலம், அ.தி.மு.க., தி.மு.க-வில் சரியான வேட்பாளர்கள் இல்லாதது எல்லாம் செந்தில்பாலாஜிக்கே சாதகமாக இருக்கிறது.

தஞ்சாவூர்:

தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ ரெங்கசாமி அ.ம.மு.க சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார். ‘வெற்றிக்குப் பிறகு நன்றி தெரிவிக்கக்கூட இவர் வரவில்லை; எப்போதும் தினகரன் பின்னாலேயே சுற்றுகிறார்’ என்பது தொகுதி மக்கள் இவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. மாவட்ட அமைச்சர் துரைக்கண்ணு இந்தத் தொகுதிக்கு அடிக்கடி வந்து கவனித்துக் கொள்கிறார். வைத்திலிங்கத்தையும் ஆளும்கட்சி களமிறக்க உள்ளது. தி.மு.க சார்பில் தொகுதியைக் கைப்பற்ற பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஸ்டாலின் அடிக்கடி தஞ்சாவூருக்கு விசிட் அடிப்பது தி.மு.க-வினரை உற்்சாகம் கொள்ளவைத்துள்ளது. கோஷ்டிப் பூசலை மட்டும் சரிசெய்து விட்டால் தி.மு.க-வே இங்கு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்.

இடைத்தேர்தலுக்குப் பிறகு தி.மு.க ஆட்சி?

ஆம்பூர்:

சசிகலா ஆதரவில் வேட்பாளராகி, ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ ஆனார் பாலசுப்பிரமணி. எம்.எல்.ஏ ஆன சில நாள்களிலேயே சட்டமன்றத்தில் பேசித் தனது தொகுதிக்குள் மாதனுரில் அரசு கலைக் கல்லூரியைக் கொண்டுவந்து விட்டார். அதன்பின் அவருக்கு மாவட்ட அமைச்சர் வீரமணியுடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. கட்சி பிளவுபடவே, ‘‘எனக்கு சீட் வாங்கித் தந்தவர் சசிகலாதான். அதனால் நான் அவர் பக்கமே செல்கிறேன்’’ என்று வந்துவிட்டார். சசிகலாவைப் பார்க்க டி.டி.வி.தினகரன் பெங்களூரு சென்றால், வழியில் பாலசுப்பிரமணி ஆம்பூரில் கொடுக்கும் பிரியாணி விருந்தை ஒரு கை பார்த்துவிட்டுத்தான் செல்வார். பலமுறை அழைத்தும் அ.தி.மு.க-வுக்கு வர மறுத்த பாலசுப்பிரமணி மீது அமைச்சர் வீரமணி ஏக கடுப்பில் இருக்கிறார். எப்படியும் அவரைத் தோற்கடிப்பது என்ற நோக்கத்தில் இப்போதே அதற்காக பல திட்டங்களைத் தீட்டி வருகிறார். கடந்தமுறை தி.மு.க கூட்டணியில் இந்தத் தொகுதி மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இம்முறை தி.மு.க கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் மக்கள்.

ஒட்டப்பிடாரம்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித் தொகுதியான ஒட்டப்பிடாரத்தின் தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதில் ஸ்டெர்லைட் விவகாரம் முக்கியப் பங்கு வகிக்கும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஐந்தாவது முறையாகப் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியைவிட வெறும் 493 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் அ.தி.மு.க-வின் சுந்தரராஜ். தினகரன் அணி தனியாகப் பிரிந்ததும், அ.ம.மு.க-வின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளராக சுந்தரராஜ் அறிவிக்கப்பட்டார். குமரெட்டியாபுரம் கிராமத்தில் தொடங்கி பல கிராமங்களில் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்ந்தபோது அனைத்துக் கட்சியினரும் ஆஜரான நிலையில் தொகுதி எம்.எல்.ஏ-வான இவர் ஒருநாள் கூட எட்டிப்பார்க்கவில்லை. தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பால் அ.தி.மு.க வேட்பாளருக்கும் வெற்றி வாய்ப்புகள் இல்லை. கடந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பி.ஜே.பி ஆதரவுடன் களம் இறங்க காத்திருக்கிறார்.  ஆனால், ஸ்டெர்லைட் போராட்டத்தில் இவர் பி.ஜே.பி போலவே நிலைப்பாடு எடுத்ததால், இவருக்கும் மக்கள் ஆதரவு இருக்காது என்கிறார்கள். எனவே, சரியான வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.

- ஜூ.வி டீம்
படங்கள்: எல்.ராஜேந்திரன், வீ.சக்திஅருணகிரி,  நா.ராஜமுருகன், ம.அரவிந்த்