சினிமா
Published:Updated:

மீண்டும் ராஜபக்சே... என்ன ஆகும் இலங்கை?

மீண்டும் ராஜபக்சே... என்ன ஆகும் இலங்கை?
பிரீமியம் ஸ்டோரி
News
மீண்டும் ராஜபக்சே... என்ன ஆகும் இலங்கை?

சோமிதரன்

கிந்த ராஜபக்சேவின் இந்த திடீர் ஆட்சிக் கைப்பற்றல் பற்றி சிங்கள நண்பர் ஒருவரிடம் கேட்டபோது சொன்னார், “இலங்கையில் இரண்டு தலைவர்கள் இருந்தார்கள், ஒருவர் தமிழர்களிடம் செல்வாக்குடன் விளங்கிய பிரபாகரன்; இன்னொருவர் சிங்களர்களிடம் செல்வாக்கு பெற்ற மகிந்த ராஜபக்சே. இப்போது மகிந்த மட்டுமே இருக்கிறார்” என்றார். மகிந்த இன்னமும் பெரும் பிம்பமாகவே இலங்கையில் இருக்கிறார்.

மீண்டும் ராஜபக்சே... என்ன ஆகும் இலங்கை?

ராஜபக்‌சே இலங்கையின் பிரதமராக சிறிசேனாவால் அறிவிக்கப்பட்டதையொட்டி, அவரின் ஆதரவாளர்கள் நடத்திய கொண்டாட்டங்கள் பல இடங்களில் வன்முறையாக மாறியிருக்கிறது. சிலர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். மகிந்த பதவியேற்ற சில மணிநேரத்திலேயே இலங்கையின் அரச தொலைக்காட்சி, வானொலி நிலையங்களில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள்  மகிந்த ஆதரவாளர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். உடனடியாகவே காவல்துறை மகிந்தவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ராணுவமும் மகிந்தவின் உத்தரவுக்குக் கட்டுப்படும் நிலையில்தான் இருக்கிறது. 

பெரும்பான்மைப் பலம் மிக்க அரசு ஒன்றின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் போது புதிய பிரதமராக மகிந்த பதவியேற்றுக் கொண்டார்.  அதன்பின்னரே ரணில் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக இலங்கை அதிபர் அறிவித்தார். ரகசியமாக நடந்த பதவியேற்பு முடிந்த பின்னரே நாட்டு மக்களுக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இந்தச் சேதி தெரிந்தது.

இலங்கையைப் பொறுத்தவரையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் சர்வ அதிகாரம் படைத்தவர்.  ஆனால், புதிதாக ஏற்படுத்தப்பட்ட 19-வது திருத்தச் சட்டம் முன்னைய அதிபர்களின் அதிகாரங்களைவிடக் குறைவான அதிகாரங்களையே இப்போது உள்ள அதிபருக்கு வழங்கியிருக்கிறது. அதன்படி பிரதமரைப் பதவி விலக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என்று கூறிய ரணில் விக்கிரமசிங்க ``நானே இன்னமும் பிரதமர்” என அறிவித்தார்.  “ரணிலே பிரதமராக நீடிப்பார்” என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா கூறியிருக்கிறார். ஆனால், சட்டப்படியே செயல் பட்டதாக அதிபர் சிறிசேனா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

 சென்ற தேர்தல் முடிவுகளின்படி ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி. இப்போதுள்ள சூழலின்படி, மகிந்த மற்றும் அதிபர் மைத்திரி அணியினருக்கு 96 உறுப்பினர்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 16 உறுப்பினர்களும் ஜேவிபிக்கு 6 உறுப்பினர்களும் இருக்கிறார்கள். ஜேவிபி யாருக்கும் ஆதரவு இல்லையென அறிவித்து விட்டது. ஆகவே உடனடியாக நாடாளு மன்றத்தைக் கூட்டினால் வெற்றிபெற்றுவிடலாம் என்று ரணில் கணக்குப் போடுகிறார். ஆனால் அதிபர் மைத்திரியோ, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுவதற்குத் தடை போட்டு விட்டார். தமிழகத்தின் அண்மைய உதாரணமான கூவத்தூர் ஃபார்முலாவுக்கு இதன்மூலம் அதிபர் வழிவகுத்துக் கொடுத்துவிட்டார். இனி, பேரம் படிந்ததும் நாடாளுமன்றம் கூடும்.

மீண்டும் ராஜபக்சே... என்ன ஆகும் இலங்கை?

மகிந்த  பிரதமராகப் பதவியேற்ற இரவிலேயே ரணில் கட்சியிலிருந்து இருவர் தாவிவிட்டார்கள். இந்தியாவில் இருப்பதுபோல் கடுமையான கட்சித் தாவல் சட்டங்களும் இலங்கையில் இல்லை. ஆகவே, அடுத்துவரும் நாள்களில் மகிந்தவுக்கு ஆதரவு பெருக வாய்ப்பிருக்கிறது. இதற்கிடையில் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் அறிக்கை வெளியிட்ட மகிந்த, விரைவில் தேர்தலைச் சந்திக்கப்போவதாகக் கூறியிருக்கிறார். இப்போது உள்ள நிலையில் தேர்தலைச் சந்திப்பது மகிந்தவுக்குச் சாதகமாகவே இருக்கிறது.  ஆனால் முஸ்லிம் அமைப்புகள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எனப் பல கட்சிகளில் உள்ள எம்.பி-க்கள் உடனடியாகத் தேர்தல் நடப்பதை விரும்ப வில்லை. ஆகவே பதவியும் பெரும் தொகையும் கிடைத்தால்  ராஜபக்சே அணிக்குத் தாவுவதற்குத் தயாராகவே இருக்கிறார்கள்.

 தமிழ் எம்.பி-க்களைப் பொறுத்தவரையில் மலையகத்தில் தொண்டமான் தலைமையிலான தொழிலாளர் காங்கிரசும், யாழ்ப்பாண எம்.பி-யான டக்ளஸ் தேவானந்தாவும் ஏற்கெனவே மகிந்தவுடன் இருக்கிறார்கள். முஸ்லிம் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-கள் இப்போது ரணில் பக்கம் இருந்தாலும் அவர்கள் இறுதி நேரத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளோர் பக்கமே சாய்வார்கள்.

இந்த நிலையில் தமிழ்க் கட்சிகளில் அதிக இடங்களை வைத்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கப்போகும் நிலைப்பாடு இன்றைய அரசியல் நெருக்கடியில் முக்கியமானது.  ரணில் தலைமையிலான அரசுடன் தமிழர்கள் உரிமைகள் தொடர்பாகவும் அரசியல் கைதிகள் விடுதலை, போரில் காணாமற்போனவர்கள் தொடர்பான உண்மை நிலை குறித்தும் பல முறை பேச்சுகளை நடத்தியி ருந்தாலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இப்போது உள்ள நிலையில் மகிந்த மற்றும் ரணிலோடு பேசி, தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கப் போவதாகவும் அதன் பின்னரே முடிவெடுக்கப்போவதாகவும் சம்பந்தன் கூறியிருக்கிறார். ஆனால், இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னரும், இப்படி அரசுகளை ஆதரித்து பின்னர் தீர்வு எதனையும் தராமல் கழுத்தறுத்த முன்னுதாரணங் களும் உள்ளன.

தமிழ்மக்களைப் பொறுத்த வரையில் மகிந்தவின் கொடூரமான பழைய காலத்தை மறக்கவில்லை. மீண்டும் அப்படியொரு கொடும் காலம் வந்துவிடக் கூடாது என்ற அச்ச உணர்வு இருக்கிறது. அதற்கு வலுச்சேர்ப்பதுபோல மகிந்த பதவியேற்ற அரை மணி நேரத்தில் மகிந்தவைச் சந்தித்த இலங்கைக் காவல்துறைத் தலைவர், போர்க்குற்றங்களின் சூத்திரதாரி என்று பலரும் குற்றஞ்சாட்டும் மகிந்தவின் தம்பி கோத்தபாயவைப் பார்த்து சல்யூட் வைக்கிறார். இதுவரை வடக்கிலிருந்து ராணுவம் வெளியேற வில்லை. ராணுவப் புலனாய்வுக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படவில்லை. 

மீண்டும் ராஜபக்சே... என்ன ஆகும் இலங்கை?

பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே காலப் பகுதியில் உக்கிரமான போர் நடந்து கொண்டி ருந்தது. உலக நாடுகள் அனைத்தையும் தன் பக்கம் வைத்துக்கொண்டு போரை நடத்தினார் மகிந்த. தமிழகத்தில் இருந்து வந்த எதிர்ப்பைக் கருத்தில் எடுக்க முடியாதபடி ராஜபக்சேவை ஆதரிக்க வேண்டிய நிர்பந்தமான வெளியுறவுக் கொள்கையை வைத்திருந்தது இந்தியா.  ‘சீனாவோடு இலங்கை நெருக்கமாகிவிடும். ஆகவேதான் இலங்கைக்கு உதவுகிறோம்’ என்று விளக்கம் கொடுத்தார்கள் இந்திய ராஜதந்திரிகள். ஆனால், போர் முடிந்ததும் இந்தியாவை முற்றாகப் புறந்தள்ளி சீனாவோடு நெருக்கமானார் ராஜபக்சே.

 இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே கட்சி உடைக்கப்பட்டு, ஆட்சி கவிழ்க்கப்பட்டு எதிர் அணியினர் ஒன்றிணைக்கப்பட்டு அதிபராக மைத்திரிபால தேர்தலைச் சந்தித்தார். அதைச் சாத்தியப்படுத்தியதில் இந்தியாவுக்குப் பங்கிருந்ததாகச் சொல்லப்பட்டது. மைத்திரி இந்தியாவுக்கு நெருக்கமானவராகவும் ரணில் அமெரிக்காவுக்கு நெருக்கமானவராகவும் சொல்லப்பட்டனர்.

 இந்த நிலையில் இப்போது மகிந்த பிரதமராகப் பதவியேற்றதும் அதுகுறித்து உடனடியாக இந்தியா கருத்து எதுவும் சொல்லாத நிலையில் சீனாவின் தூதுவர் வெளிப்படையாக மகிந்தவைச் சந்தித்துப் பேசினார். இந்த நெருக்கடிக்கு ஒருவாரம் முன்பு இந்தியா வந்திருந்த ரணில் விக்கிரமசிங்கே இந்தியப் பிரதமரைச் சந்தித்தார். அப்போது, இந்தியா இலங்கையில் முன்னெடுக்கும் வேலைகளுக்குப் போதிய ஒத்துழைப்பு இல்லையென பிரதமர் மோடி குறைப்பட்டதாக ரணில் ஊடகங்களிடம் சொன்னார்.

போருக்குப் பிறகான மீள்கட்டுமானம் என்ற பெயரால் நடைபெறும் பணிகளை இந்தியாவும் சீனாவும் பங்கு போட்டுச் செய்துவருகின்றன.இன்றைய இலங்கையின் அரசியல் நெருக்கடி வெறும் உள்நாட்டுச் சிக்கலா, இல்லை, இலங்கையின் மீதான ஆதிக்கம் யாருக்கு அதிகம் என்ற போட்டியுடன் சேர்ந்தே பார்க்கப்பட வேண்டியதா என்கிற கேள்வி முக்கியமானது.

இலங்கை அதிபர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, இலங்கை மிகப் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. பிரதமர் ரணில் பொருளாதாரத்தைச் சீர் செய்யவில்லை, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்கிறார். சீனாவோடு நெருக்கமான மகிந்த வருவதன் மூலம் மீண்டும் சீனாவிலிருந்து பெரும் முதலீடுகள் இலங்கையை நோக்கி வரும் என்று நம்புகிறார்கள்.

இந்தச் சூழலில் அடுத்துவரும் நாள்களில் பல நூறு கோடிகள் புரளும்; எம்.பி-க்களுக்கான ஏலம் சூடுபிடிக்கும். அதே நேரம் ராஜபக்சே என்பது ராஜபக்சே என்ற ஒருவர் அல்ல; அது ஒரு பெரும் குடும்பம். அந்தக் குடும்பத்தின் ஆதிக்கத்துக்குள் மீண்டும் இலங்கை சிக்கும் அபாயம்தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது.