Published:Updated:

``94-ஆண்டு வரலாற்றில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செய்தது என்ன?"- இரா. முத்தரசன் பதில்

``94-ஆண்டு வரலாற்றில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செய்தது என்ன?"- இரா. முத்தரசன் பதில்
``94-ஆண்டு வரலாற்றில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செய்தது என்ன?"- இரா. முத்தரசன் பதில்

"தமிழகத்தில் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை அமைத்து, 1952-ல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து இருக்கும். ஆனால், சிலரின் சதியால் அது தடுக்கப்பட்டது. தமிழகத்திற்குக் கிடைத்த நிறைய பயன்களில் சி.பி.ஐ-யின் பங்கு மிக அதிகம்."

ந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு, இப்போது 94-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தியாவில் பொதுவுடைமை சித்தாந்தம், என்னதான் 1,800-களின் இறுதியில் நுழைந்திருந்தாலும், அதன்பின்னர் நிறைய கம்யூனிஸ்ட் கட்சிகள் தோன்றியிருந்தாலும், பொதுவுடைமையை இந்தியாவில் படரச் செய்ததில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு மிகவும் முக்கியமானது எனலாம். நிறைய ஒடுக்குமுறைகளைத் தாண்டியே சி.பி.ஐ., மக்களிடம் பொதுவுடைமைக் கருத்துகளைக் கொண்டு சேர்த்தது.

உதாரணமாக, 1948-ம் ஆண்டு இந்தியாவில் சி.பி.ஐ தடை செய்யப்பட்டதை எடுத்துக்கொள்ளலாம். ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால், ரஷ்யாவில் உள்ள கம்யூனிஸ்ட்களின் வழிகாட்டுதலால் இந்தியாவிலும் புரட்சி செய்வார்கள் என்று தடைக்குக் காரணம் சொல்லப்பட்டது. என்றாலும், 1952-ம் ஆண்டு தேர்தலில்  தலைமறைவாக இருந்துகொண்டே பிரசாரத்துக்குப் போகாமலேயே தோழர் ராமமூர்த்தி மற்றும் சிலர் வெற்றிபெற்றனர். 

கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுபட்டது, சி.பி.ஐ-க்குப் பின்னாளில் மிகப்பெரிய சறுக்கலைத் தந்தது. அதுமட்டுமன்றி, பொதுவுடைமைக் கட்சிகளைச் சாடுவோர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, இந்தப் பிரிவு. அத்தகைய பிளவு ஏற்படக் காரணம், 1962-ல் இந்தியா - சீனா இடையே நடைபெற்ற போர்தான். இந்த விவகாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. ஆனால், அந்த முடிவைத் தோழர்கள், சிலர் ஏற்க மறுத்தனர். அவர்கள், சீனா பொதுவுடைமை நாடு என்பதால், சீனாவை ஆதரித்தால் இந்தியா பொதுவுடைமை நாடாக மாறிவிடும் என்று நம்பினார்கள். அதன் காரணமாக, அவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) என்ற கட்சியை உருவாக்கி சீனாவுக்கு ஆதரவு அளித்தனர். அதன் பின்னர், பல்வேறு தருணங்களில் சி.பி.ஐ-யுடன் இணைந்து சி.பி.எம் செயல்பட்டது வேறு விஷயம். எனவே, அந்தப் பிளவை சண்டை என்றோ, முரண் என்றோ எடுத்துக்கொள்ளாமல் தாங்கள் சார்ந்த கருத்தியலில் கொண்ட பற்று, உறுதி என்ற பார்வையில் பார்க்க வேண்டும்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட நெடிய, இத்தனை ஆண்டுக்கால இந்தியப் பயணத்தில் அந்தக் கட்சியின் செயல்பாடுகள், தமிழ்நாட்டுக்கு எத்தகைய நன்மைகளைப் பெற்றுத் தந்தன என்பன போன்ற கேள்விகளுடன், அந்தக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் பேசினோம்.

சி.பி.ஐ-யின் 94 ஆண்டுக்கால பயணம் குறித்து அவர், ``இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியானது, 1925-ம் ஆண்டில் கான்பூரில் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது. சி.பி.ஐ. தொடங்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் மாநாட்டுக்குச் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தலைமை தாங்கினார். அம்மாநாட்டில் அவர் ஆற்றிய தலைமை உரை கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும். பரிபூரண விடுதலை, சமத்துவம் ஆகிய இரண்டுமே அம்மாநாட்டில் முக்கியமாக முன்மொழியப்பட்டன. வெள்ளைக்கார ஆங்கிலேய அரசை வெளியேற்ற வேண்டுமென்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் எஸ்.ஏ.டாங்கே, ராஜேஸ்வர ராவ், ஜீவானந்தம், ஆர். நல்லகண்ணு உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், எங்கள் கட்சி பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது. அதன்பின், சி.பி.ஐ. தலைவர்கள் தலைமறைவாய் இருந்துகொண்டும் நிறைய போராட்டங்களை நடத்திய வரலாறு உண்டு.

தமிழகத்தில் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை அமைத்து, 1952-ல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து இருக்கும். ஆனால், சிலரின் சதியால் அது தடுக்கப்பட்டது. தமிழகத்துக்குக் கிடைத்த நிறைய பயன்களில் சி.பி.ஐ-யின் பங்கு மிக அதிகம். குறிப்பாக, மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோதும், தமிழ்நாடு என்று பெயர்சூட்டியதிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு மிக அதிகம். குறிப்பாக, தமிழ்நாட்டுக்காக புபேஷ் குப்தா, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை குறிப்பிடத்தக்கது. இந்த உரை பின்னாளில் புத்தகமாகவும் பதிப்பிக்கப்பட்டது" என்று சி.பி.ஐ. ஆற்றிவரும் பணிகளை நம்மிடம் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

ரஷ்யா, சீனா போன்ற உலக நாடுகளில் பொதுவுடைமைக் கட்சிகள் என்னதான் ஆட்சி செய்துகொண்டிருந்தாலும், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி சற்று மந்தமானதாகவே உள்ளது. பல்வேறு ஊழல் புகார்களுடன் வலம்வரும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அப்பழுக்கற்றவர்களாய் அறியப்பட்டாலும் அவர்களின் வளர்ச்சி ஓரளவுக்கு மேல் இருப்பதில்லை. மக்கள் நலன் சார்ந்த ஏராளமான போராட்டங்களை நடத்தி, மக்களுக்கான உரிமைகளை மீட்டுக் கொடுத்தாலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, எந்தவொரு மாநிலத்திலும் ஆட்சி செய்யும் அளவுக்கு வளர்ச்சியடையவில்லை. கேரளாவில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியில்தான், சி.பி.ஐ. உள்ளது. மக்கள் எங்கெல்லாம் துயரப்படுகிறார்களோ, அங்கு அவர்களின் குரலாய் சி.பி.ஐ-யின் குரல் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் பகுத்தறிவும், எதிர்காலத்தை நோக்கிய நுண்ணிய பார்வையும் அதிகளவில் பரவிக்கொண்டிருப்பது, சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற கட்சிகளின் வளர்ச்சிக்கு வித்திடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு