Published:Updated:

`இந்திரா முதல் ராகுல் வரை!' - இன்றும் கழுவப்படாத 1984 படுகொலையின் ரத்தம்! #VikatanInfographics

`இந்திரா முதல் ராகுல் வரை!' - இன்றும் கழுவப்படாத 1984 படுகொலையின் ரத்தம்! #VikatanInfographics
`இந்திரா முதல் ராகுல் வரை!' - இன்றும் கழுவப்படாத 1984 படுகொலையின் ரத்தம்! #VikatanInfographics

1984 டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த படுகொலையை ஒட்டுமொத்த தேசத்தின் வலியாக உணர வேண்டும்.

'பெரிய மரம் தரையில் விழும்போது, பூமி சிறிதளவு அதிரும்' என்று 1984-ம் ஆண்டு சீக்கியர் படுகொலைகளுக்குப் பிறகு கூறினார் அன்றைய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி. இந்தியாவின் சிறுபான்மை சமூகம் ஒன்றுக்கு எதிரான மாபெரும் வன்முறைக்குப் பிறகு, இந்தியாவின் பிரதமரிடம் இருந்து வெளிப்பட்ட அலட்சியமான வார்த்தைகள் இவை.

கடந்த 1984-ம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறையின் வேர், 1973-ம் ஆண்டிலேயே தொடங்குகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மத்திய அரசு, மாநில உரிமைகளைப் பறிப்பதாக மாநிலக் கட்சியான அகாலி தளம் குற்றம்சாட்டியது. மாநில உரிமைகளாக, பல்வேறு கோரிக்கைகளை ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு அனுப்பியது அகாலி தளம். ஆனால், காங்கிரஸ் கட்சி அந்தக் கோரிக்கைகள் பிரிவினையைத் தூண்டுவதாகக் கூறி நிராகரித்தது. அந்த நிராகரிப்பு, `பிந்த்ரன் வாலே' என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பு தோன்றக் காரணமாக அமைந்தது. `பிந்தரன் வாலே' அமைப்பு, பஞ்சாப் மாநிலத்தைத் தனி நாடாக, `காலிஸ்தான்' என்ற பெயரில் அமைப்பதைத் தங்கள் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது.

பிந்தரன் வாலே தலைமையிலான அமைப்பு உருவான பின், பஞ்சாப் மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை மிகவும் சீர்கேடு அடைந்தது. ஏராளமான இளைஞர்கள், தங்களை பிந்தரன் வாலே அமைப்பில் இணைத்துக்கொண்டு, அதன் கீழ் பணியாற்றத் தொடங்கினர். இந்த அமைப்பின் தலைமையகமாக அமிர்தசரஸ் பொற்கோயில் செயல்பட்டது. 

ஆபரேஷன் ப்ளூஸ்டார்

பிந்தரன் வாலே அமைப்பை ஒடுக்குவதற்காக, 1984-ம் ஆண்டு ஜூன் 01-ம் தேதி அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி `ஆபரேஷன் ப்ளூஸ்டார்' என்ற ராணுவத் தாக்குதல் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டார். அமிர்தசரஸ் பொற்கோயில் இந்தியப் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. மூன்று நாள்கள் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, பொற்கோயில் பாதுகாப்புப் படையினரின் கைவசம் வந்தது. இருபக்கமும் உயிர்ப்பலிகள் நிகழ்ந்தன. பொற்கோயில் கட்டடம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் உலகம் முழுவதும் வாழும் சீக்கியர்களால் கண்டனத்துக்கு உள்ளானது. தங்கள் மத நம்பிக்கையின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகச் சீக்கியர்கள் அந்தத் தாக்குதலைப் பார்க்கத் தொடங்கினர். 

4 மாதங்கள் கழித்து, 1984-ம் ஆண்டு அக்டோபர் 31 அன்று, டெல்லியில் பிரதமர் இல்லத்திலிருந்து தன் பாதுகாவலர்கள் இருவருடன் வெளியே நடந்து வந்தார் இந்திரா காந்தி. அப்போது பாதுகாவலர்களாக இருந்த சத்வந்த் சிங், பீன்ட் சிங் ஆகிய இருவரும் இந்திரா காந்தியை தங்களின் இயந்திரத் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். உடலில் 30 துப்பாக்கிக் குண்டுகள் துளைக்க, இந்திரா காந்தி பரிதாபமாகக் கொலை செய்யப்பட்டார். 

சீக்கியப் பாதுகாவலர்களால் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டது நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்காரர்களைச் சீக்கியர்களுக்கு எதிராகத் திருப்பியது. இந்திரா காந்தியின் படுகொலைக்குக் காரணம் என ஒரு சிறுபான்மை சமூகமே குற்றம் சாட்டப்பட்டு, வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தியின் உடலைப் பார்வையிட வந்த அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த நான்கு நாள்களும் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீக்கியர்களைத் தேடித் தேடிக் கொன்றனர் காங்கிரஸ் கட்சியினர். பெண்கள் பலர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டனர்; உடைமைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.  

Photo: AFP Photo/Gabriel Duval

1984-ம் ஆண்டு, நவம்பர் 1 முதல் 4-ம் தேதி வரை நிகழ்ந்த வன்முறையில் ஏறத்தாழ 2,700 சீக்கியர்கள் டெல்லியில் மட்டும் கொல்லப்பட்டதாகவும், இந்தியா முழுவதும் அந்த எண்ணிக்கை 3,300 எனவும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. எனினும் மனித உரிமை அமைப்புகள் அரசின் இந்த எண்ணிக்கையை மறுப்பதோடு, இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைத் தாண்டும் எனவும் கூறுகின்றன. 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சஜ்ஜன் குமார், கமல்நாத் ஆகியோரை வன்முறையாளர்கள் மத்தியில் கண்டதாகப் பல்வேறு சாட்சிகள் தெரிவித்தனர். வாக்காளர் பட்டியல்களின் உதவியுடன் சீக்கியர்களின் வீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன; கண்டுபிடிக்கப்பட்ட வீடுகள் அடையாளப்படுத்தப்பட்டன. வன்முறையாளர்களுக்கு ஆயுதங்களும் பணமும் வழங்கப்பட்டன. மிகப்பெரிய இனப்படுகொலை ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு நிகழ்த்தப்பட்டது. 

காவல்துறையினர் சாலைகளில் சென்றுகொண்டிருந்த சீக்கியர்களைச் சோதனையிட்டு, தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதங்களைப் பறித்தனர். காவல்துறையில் இருந்த சீக்கியர்கள், பணி விடுமுறை அளிக்கப்பட்டு, வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர். காவல்துறையினரின் பணி, வன்முறையாளர்களுக்கு உதவுவதாக இருந்தது. இறந்த சீக்கியர்களின் உடல்களை அப்புறப்படுத்தும் பணியையும் காவல்துறையினர் செய்துகொண்டிருந்தனர். 

1984-ம் ஆண்டு, நவம்பர் ஐந்தாம் தேதி டெல்லி முழுவதும் கடைகள் திறக்கப்பட்டன. வன்முறை நிறுத்தப்பட்டது. பல்வேறு மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் தனிநபர் ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைத்தது. ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் ``காங்கிரஸ் கட்சிக்கும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று அறிக்கை அளித்தது.

ரங்கநாத் மிஸ்ரா பிற்காலத்தில் இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியானார்; 1998-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில், ரங்கநாத் மிஸ்ரா மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 

வன்முறையில் காவல்துறையின் பங்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட அப்போதைய கூடுதல் காவல் ஆணையர் வேத் மர்வாவின் விசாரணை மத்திய அரசால் நிறுத்தப்பட்டது. வேத் மர்வா பிற்காலத்தில் டெல்லி காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டதோடு, மணிப்பூர், மிசோரம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகவும் செயல்பட்டார். 

பல்வேறு ஆணையங்கள் 1988 முதல் அமைக்கப்பட்டாலும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக்கு நீதி அளிக்கும் வகையில் எந்த ஆணையமும் செயல்படவில்லை. தேர்தல் அரசியல் அரங்கிற்குள் பாரதிய ஜனதா கட்சி நுழைந்த பிறகு, சீக்கியர்களுக்கு எதிரான படுகொலை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. 2000-ம் ஆண்டு பி.ஜே.பி அரசு, நானாவதி ஆணையத்துக்கு `1984 சீக்கியர் கலவரங்களை' விசாரிக்க உத்தரவிடப்பட்டது. நானாவதி ஆணையம் காவல்துறை முடித்து வைத்த 241 வழக்குகளில், 4 வழக்குகளை விசாரிக்கவும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யவும் கோரியது. 

சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, பி.ஜே.பி.யின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-க்கும் பங்கு இருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் முதலானோர் குற்றம் சாட்டியுள்ளனர். 2005-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, 1984-ம் ஆண்டு நிகழ்ந்த வன்முறைகளுக்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்.

மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, சி.பி.ஐ விசாரணையில் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் சீக்கியர் படுகொலைகளில் தொடர்பு இல்லாதவர் என அறிவிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு சீக்கிய ஊடகவியலாளர் ஜர்னைல் சிங், இந்த நடவடிக்கையைக் கண்டித்து, அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது தன் ஷூவை எறிந்து, கோபத்தை வெளிப்படுத்தினார்.

2014-ம் ஆண்டு பி.ஜே.பி ஆட்சியில், `1984 சீக்கியர் கலவரங்கள்' கோப்புகள் மீண்டும் திறக்கப்பட்டன. சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, 293 வழக்குகளில் விசாரணை தொடங்கப்பட்டது. 

1984 டெல்லியில் நிகழ்ந்த வன்முறையில் கொல்லப்பட்ட ஹர்தேவ் சிங்கின் சகோதரர் சந்தோக் சிங் சிறப்புப் புலனாய்வுக் குழுவைச் சந்தித்து புகாரளித்தார். அதன் அடிப்படையில் நரேஷ் ஷெராவத், யஷ்பால் சிங் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் கடந்த நவம்பர் 20 அன்று, யஷ்பால் சிங்குக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மற்றொரு வழக்கு விசாரணையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. வன்முறை நிகழ்ந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் பிரமுகர் ஒருவருக்குத் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கப்பட வேண்டியது என்றாலும், வன்முறையில் தொடர்புடையதாகக் கூறப்படும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் கமல்நாத், அண்மையில் மத்தியப் பிரதேச முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது சீக்கியர் சமூகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த டிசம்பர் 21 அன்று, டெல்லி சட்டமன்றத்தில் `1984-ம் ஆண்டும் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறையை இனப்படுகொலை' எனவும், `பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்' எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் ராஜீவ் காந்தியின் பெயரையே பதிவு செய்யாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகச் சீக்கிய அமைப்புகள் விமர்சித்திருப்பதோடு, ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்டிருக்கும் பாரத ரத்னா விருதினைத் திரும்பப் பெறப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

சஜ்ஜன் குமாருக்கு எதிராகத் தீர்ப்பளித்த டெல்லி உயர்நீதிமன்றம், ``1984 டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நிகழ்ந்த படுகொலையை ஒட்டுமொத்த தேசத்தின் வலியாக உணர வேண்டும். ஆனால் இதே பாணியில் இஸ்லாமியர்கள் மீது 1993-ம் ஆண்டு மும்பையிலும், 2002-ம் ஆண்டு குஜராத்திலும், 2013-ம் ஆண்டு முசாபர்நகரிலும் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன; 2008-ம் ஆண்டு ஒடிசாவின் கந்தமால் பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது இதே மாதிரியான படுகொலை நிகழ்த்தப்பட்டன" என 1984-ம் ஆண்டுக்குப் பின் நிகழ்ந்த இனப்படுகொலைகளைச் சுட்டிக் காட்டியுள்ளது.

மேலும் அந்தத் தீர்ப்பில் ``சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான மாபெரும் குற்றங்கள் அரசியல் அதிகாரம் தரும் வலிமையுடனும், அரசு எந்திரங்களின் உதவியுடனும் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இத்தகைய குற்றங்களைச் செய்யும் கிரிமினல்கள் தொடர்ந்து அரசுப் பதவிகளை அனுபவித்து வருகிறார்கள். இவர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவது, மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. மானுடத்துக்கு எதிரான இத்தகைய இனப்படுகொலைகளைக் களைவதற்கான இடத்தை அரசியலமைப்புச் சட்டத்தில் விரைவில் கொண்டு வர வேண்டும்" எனவும் கூறியுள்ளது. 

ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு 34 ஆண்டுகளுக்குப் பிறகு, சொற்ப எண்ணிக்கையிலான குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். டெல்லி உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கும் மற்ற படுகொலைகள் மீதான நியாயமான தீர்ப்புக்கு பாதிக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்கள் இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதையே இந்தத் தீர்ப்பு குறிக்கிறது.  

அடுத்த கட்டுரைக்கு