Published:Updated:

 2016-ல் இளைஞருக்கு ஹெச்.ஐ.வி இருப்பதை மறைத்தது ஏன்?- சந்தேகம் எழுப்பும் ராமதாஸ்

 2016-ல் இளைஞருக்கு ஹெச்.ஐ.வி இருப்பதை மறைத்தது ஏன்?- சந்தேகம் எழுப்பும் ராமதாஸ்
 2016-ல் இளைஞருக்கு ஹெச்.ஐ.வி இருப்பதை மறைத்தது ஏன்?- சந்தேகம் எழுப்பும் ராமதாஸ்

சிவகாசி அரசு குருதி வங்கியில் பணியாற்றிய தற்காலிகப் பணியாளர்கள் மூவரைப் பணி நீக்கம் செய்ததுடன், கருவுற்ற பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி கிருமிகள் கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட பிரச்னையை முடித்துவிட அரசு முயல்கிறது என்று குற்றம்சாட்டியுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், இத்தகைய குற்றங்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், அத்துறையின்  உயர் அதிகாரிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கருவுற்ற பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி கிருமிகள் கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. தமிழ்நாட்டில், அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதற்கு இதுவே அவலமான உதாரணமாகும். இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

'குருதிக் கொடை பெறும்போதும், கொடையாகப் பெறப்பட்ட குருதியை நோயாளிகளுக்குச் செலுத்தும்போதும் கடைப்பிடிக்கவேண்டிய எந்த நடைமுறைகளையும் அரசு மருத்துவமனைகள் பின்பற்றுவதில்லை' என்ற உண்மையை சாத்தூர் நிகழ்வு படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. மருத்துவர்களும், குருதி வங்கிப் பணியாளர்களும் இந்த விஷயத்தில் காட்டிய அலட்சியத்தால், ஒரு பாவமும் செய்யாத இளம்பெண் உயிர்க்கொல்லி நோயை வாங்கியிருக்கிறார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் வாழ்க்கையையும், நிம்மதியையும் முழுமையாக இழந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை நரகமாகியுள்ளது.

'பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதலில் மதுரை அரசு மருத்துவமனையிலும், தேவைப்பட்டால் பின்னர் தனியார் மருத்துவமனையிலும் உயர்தர கூட்டு மருத்துவம் வழங்கப்படும்' என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படியே அப்பெண்ணுக்கு மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பெண்ணுக்கு இந்த நிலை ஏற்பட்டதற்குக் காரணமானவர்களுக்கு என்ன தண்டனை. சிவகாசி அரசு குருதி வங்கியில் பணியாற்றிய தற்காலிகப் பணியாளர்கள் மூவரைப் பணிநீக்கம் செய்ததுடன், இந்தப் பிரச்னையை முடித்துவிட அரசு முயல்கிறது. இது ஏற்கத்தக்கதல்ல.

கருவுற்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்ட குருதியைக் கொடையாக வழங்கிய இளைஞர், 2016-ம் ஆண்டு முதலே குருதிக் கொடை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது. அப்போதே, அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், ஏதோ காரணங்களால் அதை அவருக்கு மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை. அதனால்தான், கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி, தமது உறவினருக்குச் செலுத்தப்பட்ட குருதிக்கு ஈடாகத் தனது குருதியை அவர் கொடையாக வழங்கியுள்ளார்.  இம்மாதம் 3-ம் தேதி, அந்தக் குருதிதான் கருவுற்ற பெண்ணுக்குச் செலுத்தப்பட்டுள்ளது

அதன்பின், கடந்த 6-ம் தேதி வெளிநாட்டு வேலைக்காக சம்பந்தப்பட்ட இளைஞருக்கு குருதி ஆய்வு செய்யப்பட்டபோதுதான், அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர், சிவகாசி அரசு குருதி வங்கிக்குத் தகவல் தெரிவித்த போதிலும், அதற்கு சில நாள்கள் முன்பாக அவரது குருதி கருவுற்ற பெண்ணுக்கு செலுத்தப்பட்டுவிட்டதால் ஆபத்தைத் தடுக்க முடியாமல் போய்விட்டது. இதனால், குற்றஉணர்ச்சிக்கு ஆளான அந்த இளைஞர், தற்கொலை செய்துகொள்ள முயன்று, அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.

ஒருவரிடமிருந்து கொடையாகப் பெறப்பட்ட குருதி, 5 வகையான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஹெச்.ஐ.வி தொற்று உள்ள இளைஞரிடமிருந்து பெறப்பட்ட குருதி அத்தகைய ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவில்லை. ``கொடையாகப் பெறப்படும் குருதியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது தங்களுக்குத் தெரியாது. அதுகுறித்து அதிகாரிகள் எவரும் தங்களுக்குத் தெரிவிக்கவில்லை. அதற்கான பயிற்சியும் தங்களுக்கு அளிக்கப்படவில்லை’’ என்று பணிநீக்கம் செய்யப்பட்ட குருதி வங்கியின் தற்காலிகப் பணியாளர் வளர்மதி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி, குருதி வங்கிகளில் நிரந்தரப் பணியாளர்களை அமர்த்தாமல், தற்காலிகப் பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, முறையாகப் பயிற்சிகள் வழங்கப்படுவதில்லை என்பதுதான் இத்தகைய விபரீதங்களுக்குக் காரணமாகும். கொலைக்குத் துணை போவதற்கு இணையான இத்தகைய குற்றங்களுக்கு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், அத்துறையின் உயர் அதிகாரிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும்.

சாத்தூரில் நடந்த நிகழ்வு மன்னிக்க முடியாத தவறு என்று கூறுவதன் மூலமும், தற்காலிக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதன் மூலமும் இந்தக் குற்றத்திலிருந்து சுகாதாரத்துறை அமைச்சரும், செயலாளரும் தப்பிவிட முடியாது. மருத்துவ உலகில் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயரை வாங்கிக்கொடுத்துள்ள இந்த குற்றத்துக்குப் பொறுப்பேற்று, அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும். இந்தக் கொடுமைக்குக் காரணமான சுகாதாரத்துறை அதிகாரிகள் எவரும் மன்னிக்கப்படக் கூடாது. இனியும் இத்தகைய விபரீதம் நிகழாதவாறு குருதிக் கொடை நடைமுறையில் தணிக்கை வலுப்படுத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.