Published:Updated:

`என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை!'  - பன்னீர்செல்வத்தைப் பதறவைத்த டெல்லி சந்திப்பு

`என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை!'  - பன்னீர்செல்வத்தைப் பதறவைத்த டெல்லி சந்திப்பு
`என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை!'  - பன்னீர்செல்வத்தைப் பதறவைத்த டெல்லி சந்திப்பு

ஜெட்லிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் எந்தவித தகராறுகளும் இல்லை. அப்படியிருக்கும்போது, இப்படியொரு திடீர் சந்திப்பை ஓ.பி.எஸ் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. 

த்திய அமைச்சர் அருண் ஜெட்லியை இன்று சந்தித்துப் பேச இருக்கிறார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. "நிதித்துறை அமைச்சராக பன்னீர்செல்வம் செய்ய வேண்டிய விஷயங்களை கொங்கு அமைச்சர்கள் முன்னெடுக்கின்றனர். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என ஆதரவாளர்களிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் ஓ.பி.எஸ்" என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

டெல்லியில் நேற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணியும், தங்கமணியும். இந்தச் சந்திப்புக்குப் பிறகு பேட்டியளித்த அமைச்சர் தங்கமணியிடம், `நிதி தொடர்பான கோரிக்கைகளை வைக்க நிதித்துறை அமைச்சர் இருக்கும்போது, ராணுவ மந்திரியை சந்திக்க காரணம் என்ன?' எனக் கேள்வி எழுப்பியபோது, `உங்கள் கண்ணோட்டமே தவறு. நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். கஜா புயலால் தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால், தேவையான நிதியைப் பெற்றுத்தருமாறு தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற முறையில் அவரை சந்தித்தோம். இதில் என்ன தவறு இருக்கிறது?' என்றார்.

``அவரது பதிலில் கொஞ்சம் நியாயம் இருந்தாலும் இதன் பின்னணியில் கூட்டணி தொடர்பான பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன" என விவரித்த டெல்லி பா.ஜ.க பிரமுகர் ஒருவர், ``நிர்மலா சீதாராமனுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் சரியான நட்புறவு இல்லை. எனவே, இந்தச் சந்திப்பில் அவர் புறக்கணிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். இன்று அருண் ஜெட்லியை சந்தித்துப் பேச இருக்கிறார் வேலுமணி. ஜெட்லிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் இடையில் எந்தவித தகராறுகளும் இல்லை. அப்படியிருக்கும்போது, இப்படியொரு திடீர் சந்திப்பை ஓ.பி.எஸ் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. 

இதையடுத்து, தனக்கு வேண்டிய டெல்லி சோர்ஸ்களிடம் பேசிய பன்னீர்செல்வம், 'எதற்காக 2 பேரும் டெல்லி சென்றார்கள்...என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இந்தச் சந்திப்பில் என்னவெல்லாம் பேசப்பட்டது?' என விசாரித்திருக்கிறார். நேற்று இதுதொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசியிருக்கிறார் அருண் ஜெட்லி. அவர் பேசும்போது, `நாளைக்கு என்னையும் பார்க்க வருகிறார்கள். எதாவது கொடுத்து அனுப்ப வேண்டும் (கஜா நிவாரணம் பற்றிச் சொல்கிறார்). தேர்தலில் 15 சீட்டுகளை எதிர்பார்க்கிறோம். அவர்கள் என்ன பைனல் செய்வார்கள் எனத் தெரியவில்லை' எனக் கூறியிருக்கிறார்" என்றவர்... 

"தமிழகத்தில் அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இன்னும் கூட்டணி அமையவில்லை. `மோடி பிரதமர்' என்பதை ஏற்றுக் கொண்டு ஒத்து வரக் கூடிய கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்துப் போட்டியிடும் முடிவில் தலைமை இருக்கிறது. அ.தி.மு.க அரசை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியான ரெய்டுகள் நடந்து கொண்டிருந்தாலும், தேர்தல் கூட்டணிக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அ.தி.மு.க-வினரைப் பணியவைக்கும் விதமாகவே இந்தச் சோதனைகள் நடைபெற்றன. அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. இன்று நடக்கும் அருண் ஜெட்லியுடனான சந்திப்பில் ரெய்டு உள்பட சில விஷயங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படலாம்" என்றார் விரிவாக. 

ஆனால், பா.ஜ.க-வுடன் கூட்டணி உருவாவதை தம்பிதுரை உள்ளிட்ட சீனியர்கள் விரும்பவில்லை. "2014, 2016 ஆகிய ஆண்டுகளில் தனித்துத்தான் தேர்தலை சந்தித்தார் ஜெயலலிதா. அவரது வழியை நாங்களும் பின்பற்றி வருகிறோம்" என நேற்று பேட்டியளித்தார் தம்பிதுரை. "இதே கருத்தில்தான் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உள்ளனர். பா.ஜ.க-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது என்பது தவறான தகவல். அவர்களோடு நாங்கள் நல்ல அணுகுமுறையில் இருந்திருந்தால் கஜா நிவாரண நிதி சரியான நேரத்தில் வந்து சேர்ந்திருக்கும். மத்திய அரசின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது எனப் பொதுவெளியில் பகிரங்கமாகவே விமர்சனம் செய்கிறோம். இப்படியெல்லாம் பேசிவிட்டு அவர்களோடு இணைந்து தேர்தலை சந்தித்தால் அது பொருந்தாக் கூட்டணியாக மாறிவிடும். இதனால் இழப்பு எங்களுக்குத்தான்" என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள். 

அடுத்த கட்டுரைக்கு