
‘‘ஓயாத போக்குவரத்து நெரிசல்... ஓய்வெடுக்கும் எம்.பி!’’
#EnnaSeitharMP
#MyMPsScore
“உங்கள் துன்பங்கள் தீரும், துயரங்களிலிருந்து விடுதலை கிடைக்கும்’’ - கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்ரீபெரும்புதூரில் கே.என்.ராமச்சந்திரனுக்காக ஜெயலலிதா இப்படி முழங்கியபோது ஏதோ குருப்பெயர்ச்சி பலன்களை வாசிப்பதுபோலவே இருந்தது. அந்தத் தேர்தலில் தி.மு.க-வின் ஜெகத்ரட்சகனை ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்ற கே.என்.ராமச்சந்திரன், வாக்களித்தவர்களின் துயரங்களைப் போக்கினாரா? தொகுதியைச் சுற்றி வந்தோம்.
சென்னை மாநகரின் நுழைவாயில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி. தமிழகத்திலேயே அதிக அளவில் பன்னாட்டுத் தொழிற்சாலைகள் இங்கு நிறைந்திருக்கின்றன. சென்னை புறநகரில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புத் தருவது இந்தத் தொகுதிதான். அம்பத்தூர் தொழிற்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், தாம்பரம் மெப்ஸ் ஏற்றுமதி வளாகம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், ராஜீவ்காந்தி நினைவிடம், ஆதிமக்கள் வாழ்ந்த பல்லாவரம் என பல முக்கியமான இடங்கள் இந்தத் தொகுதியில்தான் இருக்கின்றன.
கே.என்.ராமச்சந்திரன் தத்தெடுத்திருந்த வல்லக்கோட்டை கிராமத்துக்கு முதலில் சென்றோம். பெரும்பாலான தெருக்கள் கான்க்ரீட் சாலைகளாக மாறியிருந்தன. தரமான ஆரம்பப் பள்ளி, நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருந்தன. ‘‘இதையெல்லாம் உங்க எம்.பி செய்து கொடுத்தாரா?’’ என அப்பகுதியினரிடம் கேட்டதும், ‘‘இந்த ஊருக்கு எல்லாத்தையும் செய்யுறது கம்பெனிகாரங்கதான். எம்.பி-யை நாங்க பார்த்ததே கிடையாது’’ என்றனர் கோபமாக.

வல்லக்கோட்டையைச் சேர்ந்த சந்திரகுமார், ‘‘வல்லக்கோட்டை முருகனின் தீவிரப் பக்தர் கே.என்.ராமச்சந்திரன். அதனால் எங்களுக்கு அவர்மீது மிகுந்த மரியாதை இருந்தது. எனவேதான், வேட்புமனு தாக்கலின்போது, கட்சி பேதம் பார்க்காமல் ஊர் மக்கள் அனைவரும் அவரோடு சென்றோம். எம்.பி ஆனவுடன் இங்குதான் முதல் கூட்டம் போட்டார். எங்க ஊரைத் தத்தெடுத்துள்ளதாக அறிவித்தார். கோரிக்கை மனுக்களைக் கேட்டுப் பெற்றார். அதன்பிறகு இங்கு அவர் தலைகாட்டவில்லை. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து கழிவறை, சிமென்ட் சாலை என ஓரளவுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கிறார்கள். எம்.பி ஆவதற்கு முன்பெல்லாம் மாதம்தோறும் கிருத்திகைக்கு வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்கு வந்து விடுவார். எம்.பி ஆன பிறகு அவரைப் பார்க்கவே முடியவில்லை’’ என்றார்.
தாம்பரம் தி.மு.க எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் பேசினோம். “தொகுதிப் பக்கம் வந்தால்தானே அவரின் நிறை குறைகளைச் சொல்ல முடியும். அவர் எங்கே இருக்கிறார் என்று மக்களுக்கும் தெரியவில்லை. கட்சிக்காரர்களுக்கும் தெரியவில்லை. சில வாரங்களுக்கு முன்பு வெள்ள முன்னேற்பாடு தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மீட்டிங் போட்டார்கள். அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என எல்லோரும் கலந்து கொண்டார்கள். அதில்கூட எம்.பி பங்கேற்கவில்லை. இந்த அளவுக்குத்தான் அவரின் செயல்பாடுகள் உள்ளன’’ என்றார்.
‘‘முக்கியமான விழாக்களில் மட்டும் எம்.பி தலைகாட்டுவார். கட்சி வேலையை அவரின் மகன்தான் பார்த்துக்கொள்கிறார். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அதிக கம்பெனிகள் இருப்பதால் சிலரோடு சேர்ந்து ஸ்க்ராப் பிசினஸில் இறங்கிவிட்டார்” என சொந்தக் கட்சியினரே புலம்புகிறார்கள்.
“ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்ட நோகியா தொழிற்சாலை கடந்த ஆறு வருடங்களாக மூடிக்கிடக்கிறது. இதனால் முப்பதாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். அதுபோல் ராயல் என்ஃபீல்டு, யமஹா உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எம்.பி எந்த விஷயத்திலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்கிறார்கள் தொழிலாளர்கள்.
அம்பத்தூர் வியாபாரிகள், பொதுமக்களிடம் பேசினோம். ‘‘தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரியது அம்பத்தூர் தொழிற்பேட்டை. சுமார் 1,250 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்தத் தொழிற்பேட்டையில் ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல்ஸ், இன்ஜினீயரிங் என மொத்தம் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான கம்பெனிகள் உள்ளன. பல ஆயிரம் குடும்பங்கள் இந்தத் தொழிற்சாலைகளை நம்பியுள்ளன. நாளுக்குநாள் நலிந்துகொண்டிருக்கும் இந்தத் தொழிற்பேட்டையை, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் வளம் பெறச் செய்திருக்கலாம். அம்பத்தூர் பகுதி மக்கள் விபத்து உள்ளிட்ட அவசரக் காலச் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை. இதனால் ஏற்படும் காலதாமதத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இங்கே ‘மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வருவோம்’ என்பது ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதி எதிரொலிக்கும். அது இந்த முறையும் புஸ்வாணமாகிவிட்டது.
அரசு மேல்நிலைப் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள் இல்லை. உயர்கல்விக்காக சென்னை செல்ல வேண்டிய அவல நிலை. அம்பத்தூர் பாதாளச் சாக்கடைத்திட்டம் 10 வருடங்களாகக் கிடப்பில்தான் உள்ளது. கொரட்டூர் சந்திப்பு முதல் அம்பத்தூர் வரை சி.டி.எச் சாலையை அகலப்படுத்தாமல் விட்டதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல். அம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தும் பணியைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். மெட்ரோ ரயில் சேவையை அண்ணாநகர் வழியாக அம்பத்தூருக்குக் கொண்டு வர வேண்டும். இப்படி எந்த விஷயத்திலும் எம்.பி அக்கறை காட்டவில்லை’’ என்றனர்.
சமூக செயற்பாட்டாளர் மதுரவாயல் கணேசன், ‘‘சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2009-ல் தொடங்கி 35 சதவிகிதப் பணிகள் முடிந்த நிலையில் அரசியல் மோதலால், பணிகள் முடங்கின. திட்டத்தை மீண்டும் தூசு தட்டினார்கள். ஆனாலும், இத்திட்டம் இன்னும் தொடங்கிய இடத்திலேயே உள்ளது. பறக்கும் சாலைக்கு அமைக்கப்பட்ட தூண்கள், சென்னை-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அடிக்கடி உயிர்களைக் காவு வாங்கிக் கொண்டிருக்கின்றன. மதுரவாயலில் பாதாளச் சாக்கடைத் திட்டம், சாலை வசதி, ஆக்கிரமிப்புகள் அகற்றம் எல்லாம் வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது’’ என வேதனைகளைக் கொட்டினார்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த நலச் சம்மேளனத் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம், “பன்னாட்டு நிறுவனங்களுக்காக தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை மட்டும் போட்டுள்ளார்கள். கிராமப்பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கின்றன. மேம்பாலப் பணிகளுக்காக பல இடங்களில் பல ஆண்டுகளாகத் தடுப்பு வைத்து இருக்கிறார்கள். இதனால், செங்கல்பட்டு- பெருங்களத்தூர், கோயம்பேடு- ஸ்ரீபெரும்புதூர் சாலைகள் போக்கு வரத்து நெரிசலால் தினமும் திக்குமுக்காடுகின்றன. பண்டிகை நாள்களில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்கும்.
தாம்பரம் ரயில் நிலையத்தைச் சென்னையின் மூன்றாவது ரயில் முனையம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால், நடைமுறையில் எந்த முன்னேற்றமும் இல்லை. நடைமேம்பாலம், மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு பேட்டரி கார், எஸ்கலேட்டர் வசதிகள் என தேவைகள் அதிகம் உள்ளது. ராமச்சந்திரன் தன் எம்.பி பதவியைப் பயன்படுத்தி, சொந்தத் தொழில்களை அபிவிருத்தி செய்வதில்தான் கவனம் செலுத்துகிறார்’’ என்றார்.
அ.ம.மு.க ஜெயலலிதா பேரவை மாநிலத் துணைச் செயலாளரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தாம்பரம் நாராயணன், ‘‘ஸ்ரீபெரும்புதூரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்றன. நிலம் கொடுத்த 5,000 பேருக்கு, ‘வீட்டுக்கு ஒருவருக்கு வேலை’ என்று கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றித் தரவில்லை. ஆலந்தூரையும் ஆதம்பாக்கத்தையும் இணைக்கும் சாலையில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ரயில்வே கேட்டை மூடிவிட்டு, சுரங்கப்பாதை பணியை ஆரம்பித்தார்கள். தொழில்நுட்பக் கோளாறு என்று சாக்குபோக்குச் சொல்லி, அந்தப் பணியை ஐந்து ஆண்டுகளாக முடக்கி விட்டார்கள். வேளச்சேரி-ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் பணியும் பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது.
அடையாறு கால்வாய் ஆக்கிரமிப்புகளை 2015-ம் ஆண்டு பெருமழையின்போது அவசர அவசரமாக அகற்றியதோடு சரி, அதன்பிறகுக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அப்படியே விட்டு விட்டார்கள். பம்மல், நாகல்கேணி பகுதியில் தோல் தொழிற்சாலை கழிவுநீர், அடையாறில் கலக்கிறது. இதனால், இந்தப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர் பாழாகிவிட்டது. அனகாபுத்தூர் - தரப்பாக்கம் இடையே அடையாறின் குறுக்கே, 2008-ம் ஆண்டு ரூ.4.75 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி, 80 சதவிகிதம் பணிகள் முடிந்துவிட்டன. பாலம் கட்டும் இடத்தில் ஆயிரம் சதுர அடி இடம் இந்திய விமானப் படைக்குச் சொந்தமானது என்ற பிரச்னையால், கடந்த ஏழு ஆண்டுகளாக மேம்பாலப் பணி நடைபெறாமல் தடைபட்டு நிற்கிறது. இதை முடிக்க, ஒரு துரும்பைக்கூட ராமச்சந்திரன் கிள்ளிப்போடவில்லை’’ என்றார் வேதனையுடன்.
இறுதியாக கே.என்.ராமச்சந்திரனை சந்தித்தோம். ‘‘பல ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த போரூர் மேம்பாலத்தைக் கட்டி முடித்துள்ளேன். கொரட்டூர் ரயில்வே மேம்பால பணிகள் ஒரு மாதத்தில் முடிந்துவிடும். அம்பத்தூர் ரயில்வே சுரங்கப் பாதைக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் ரயில்வே சப்வே வேலைகள் முடிந்து விட்டன. 200 படுக்கை வசதி கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்ட ஸ்ரீபெரும்புதூரில் இடம் பார்க்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் ஜங்ஷனில் கத்திபாரா மேம்பாலம் போன்று பாலம் கட்ட திட்ட அறிக்கை தயாராகி வருகிறது. அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஏலகிரி, சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து படிப்படியாக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும்.
‘மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் பயணிகளுக்காக அனைத்து ரயில்களும் திரிசூலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்’ என நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். தொகுதி மக்களுக்காக சுற்றிச் சுழன்று பணியாற்றி இருக்கிறேன்’’ என்றார்.
உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
- எஸ்.முத்துகிருஷ்ணன், பா.ஜெயவேல்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?
வண்டலூரில் உள்ள தன் வீட்டின் முன்பகுதியையே எம்.பி அலுவலகத்தை வைத்திருக்கிறார் ராமச்சந்திரன். மூன்று பேர் பணிபுரிகிறார்கள். வருகிறவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்து, மனுக்களைப் பெறுகிறார்கள். ‘கொரட்டூரில் ரயில்வே சுரங்கப் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அம்பத்தூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லவேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகள் கொண்ட மனுவை கொரட்டூர் கணேசன் என்பவர் மூலமாகப் பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தோம். ‘மதுரவாயலில் உள்ள அயனம்பாக்கம் பகுதியில் பொதுச் சுகாதார வளாகம், சமூக நலக்கூடம், அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும்’ என்கிற கோரிக்கைகளுடன் அயனம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தன் மூலமாகவும் மனு அனுப்பப்பட்டது. இந்த மனுக்களுக்கு எந்தப் பதிலும் இல்லை. எம்.பி அலுவலகத்துக்கு போன் செய்தோம். மனுக்கள் வந்துள்ளதாகச் சொன்னவர்கள், வேறு எந்தப் பதிலும் சொல்லவில்லை.



