Published:Updated:

`இங்கு வியாபாரம் நடக்கல; தி.மு.கவுக்குப் போய்ட்டாரு!'- செந்தில் பாலாஜியை சாடிய எடப்பாடி பழனிசாமி

`இங்கு வியாபாரம் நடக்கல; தி.மு.கவுக்குப் போய்ட்டாரு!'- செந்தில் பாலாஜியை சாடிய எடப்பாடி பழனிசாமி
`இங்கு வியாபாரம் நடக்கல; தி.மு.கவுக்குப் போய்ட்டாரு!'- செந்தில் பாலாஜியை சாடிய எடப்பாடி பழனிசாமி

தி.மு.க-வுக்குச் சென்றுள்ள செந்தில் பாலாஜி கொள்கைப்பிடிப்பில்லாத அரசியல் வியாபாரி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருக்கிறார்.

அ.தி.மு.க-விலிருந்து விலகி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சமீபத்தில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். இதையடுத்து, ஸ்டாலினை வைத்து தனது சொந்த மாவட்டமான கரூரில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க-வில் இணையும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு அவர் ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். 

இந்த நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க-வில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க-வின் அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க-வில் ஐக்கியமான செந்தில் பாலாஜியைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் பேசுகையில், ``பச்சோந்தி கூட கொஞ்சம் நேரம் கழிச்சுதான் நிறம் மாறும். ஆனால், செந்தில் பாலாஜி அப்படியில்லை. 5 கட்சிகளுக்குச் சென்று வந்து, தற்போது எந்தக் கட்சியில் இருந்து வந்தாரோ அந்தக் கட்சிக்கே சென்றுவிட்டார். அவர் ஓர் அரசியல் வியாபாரி. இங்க வந்து வியாபாரத்தைத் தொடங்கினார். முடிச்சிக்கிட்டாரு. அப்புறம் அ.ம.மு.கவுக்குப் போய் தன்னுடைய வியாபாரத்தைத் தொடங்கினார். அங்க சரியா வியாபாரம் நடக்கல. அதனால், இப்போ தி.மு.கவுக்குப் போய்ட்டாரு.

அ.தி.மு.கவை உடைக்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட அ.ம.மு.க என்ற இயக்கத்துக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். ஆனால், இறைவன் அவரை அங்கேயும் விட்டுவைக்கவில்லை. நல்லது செஞ்சா நல்லது நடக்கும். கெட்டது நெனச்சா கெட்டதுதான் நடக்கும். அவர் நினைப்பு போலதான், அவருடைய நிலைமையும் இருக்குது. அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்குச் சென்றவர்கள், திரும்ப வந்திருப்பது அ.தி.மு.க என்ற குடும்பப் பிணைப்பைக் காட்டுகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்சியில் விசுவாசமாக இருந்ததால்தான், எங்களுக்கு உரிய விலாசம் கிடைத்தது’’ என்றார்.