Published:Updated:

`சிறப்பான எதிர்காலம் இருக்கு; நல்லா பண்ணுங்க!’- அ.தி.மு.க நிர்வாகியை குஷிப்படுத்திய ஸ்டாலின்

`சிறப்பான எதிர்காலம் இருக்கு; நல்லா பண்ணுங்க!’- அ.தி.மு.க நிர்வாகியை குஷிப்படுத்திய ஸ்டாலின்
`சிறப்பான எதிர்காலம் இருக்கு; நல்லா பண்ணுங்க!’- அ.தி.மு.க நிர்வாகியை குஷிப்படுத்திய ஸ்டாலின்

‘அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.க-வுக்கு வந்தால் வரவேற்கப்படுவார்கள்’ என எடப்பாடியாரும், ஓ.பி.எஸ்ஸும் அழைத்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. தினகரன் அணியில் அதிருப்தியில் இருந்த செந்தில் பாலாஜி தன் படை பரிவாரங்களோடு, அறிவாலயத்தில் ஒதுங்கி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க-வில் இணைந்துவிட்டார். மேலும், கரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி, தன்னுடைய ஆதரவாளர்களையும் தி.மு.க-வில் இணைத்து கரூரையே கதிகலங்க வைத்திருக்கிறார்.

இப்படி கரூரில் பிரமாண்டமாக செந்தில் பாலாஜி தலைமையில், அ.தி.மு.க-வினர் தி.மு.க-வில் ஐக்கியமாகும் நிலையில், ஈரோட்டிலும் அப்படியொரு நிகழ்ச்சி இதே நாளில் நடக்கவிருக்கிறது. அதிலும், அ.தி.மு.கவிலிருந்து 2,000 பேர் தி.மு.க-வில் இணையவிருக்கின்றனர். ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமியின் தலைமையில், இதற்கான ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டிருக்கிறது.

ஈரோடு அ.தி.மு.க மாவட்ட மாணவரணிச் செயலாளர் ரமேஷ் குமார் தலைமையில், அவருடைய ஆதரவாளர்கள் உட்பட 18 பேர் டிசம்பர் 24-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்து தி.மு.க-வில் தங்களை இணைத்துக்கொண்டனர். மாவட்டச் செயலாளர் முத்துசாமியின் ஏற்பாட்டின் பேரில் இது நடந்திருக்கிறது. தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்ட ரமேஷ் குமார், ‘27-ம் தேதி கரூரில் செந்தில் பாலாஜி தலைமையில் அ.தி.மு.க-வினர் தி.மு.க-வில் இணைவதுபோல, ஈரோட்டில் என்னுடைய ஆதரவாளர்கள்  2 ஆயிரம் பேரை தி.மு.க-வில் இணைக்கிறேன்’ என உறுதியளித்திருக்கிறார். ஸ்டாலினும் உற்சாகமாகச் சிரித்த முகத்தோடு, ‘சிறப்பான எதிர்காலம் இருக்கு. நல்லா பண்ணுங்க’ எனத் தலையாட்டியிருக்கிறார். ஸ்டாலின் கொடுத்த உற்சாகத்தால், தன்னுடைய ஆதரவாளர்களான அ.தி.மு.க நிர்வாகிகள் கிட்டத்தட்ட 2,000 பேரை ரமேஷ்குமார் தி.மு.க-வுக்காக திரட்டியிருக்கிறார். ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமி தலைமையில், பெருந்துறை சாலையில் உள்ள ஆலயமணி மஹாலில் இதற்கான ஏற்பாடுகள் களைகட்டியிருக்கின்றன. 

இன்று கரூரில் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மாலை 7 மணியளவில் ஸ்டாலின் ஈரோட்டுக்கு வருகிறார். அப்போது ஈரோடு அ.தி.மு.க மாணவரணிச் செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில், 2,000 அ.தி.மு.க-வினர் தி.மு.கவில் இணையும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. நிகழ்ச்சி முடிந்ததும், கார் மூலமாகக் கோவை சென்று அங்கிருந்து ஸ்டாலின் சென்னை கிளம்புகிறார்.

ஒரே நாளில் அ.தி.மு.க-விலிருந்து வந்த நிர்வாகிகளை இணைத்து ஸ்டாலின் மிகப்பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருப்பது, கொங்கு தி.மு.க-வினரின் எனர்ஜியை ஏற்றியிருக்கிறது.