Published:Updated:

`கரூரில் மாநில மாநாடு; ஈரோட்டில் மாவட்ட மாநாடு!' - ஒரே நாளில் நடந்த விழாவில் ஸ்டாலின் குஷி

`கரூரில் மாநில மாநாடு; ஈரோட்டில் மாவட்ட மாநாடு!' - ஒரே நாளில் நடந்த விழாவில் ஸ்டாலின் குஷி
`கரூரில் மாநில மாநாடு; ஈரோட்டில் மாவட்ட மாநாடு!' - ஒரே நாளில் நடந்த விழாவில் ஸ்டாலின் குஷி

``மத்தியில் ஆளும் மோடி ஆட்சிக்கும், தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் எடப்பாடி ஆட்சிக்கும் விடை கொடுக்கக்கூடிய நாள் விரைவில் நெருங்கிக் கொண்டிருக்கிறது” என ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கரூரில் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட இணைப்பு விழாவை முடித்துவிட்டு ஈரோட்டுக்கு வந்த ஸ்டாலின், ஈரோட்டிலும் அதைப்போன்றதொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அ.தி.மு.க மற்றும் பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் 2,000 பேர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தனர். நிகழ்ச்சி நடைபெற்ற பெருந்துறை சாலை ஆலயமணி மஹாலுக்குச் செல்லும் வழி நெடுகிலும், தி.மு.க கொடி வரிசை கட்டி கட்டப்பட்டிருந்தது.

மற்றபடி பிரமாண்ட பேனர்களோ, போஸ்டர்களோ எதுவும் இல்லை. நிகழ்ச்சியில் 2,000-க்கும் மேற்பட்டோர் தி.மு.க-வில் இணைவதாகக் கூறினர். தாரைத் தப்பட்டைகள் முழக்க, மிகவும் உற்சாகமாக மேடையேறிய ஸ்டாலின், ``கரூரில் நான் கலந்துகொண்டது ஒரு மாநில மாநாடு அளவுக்கு இருந்ததென்றால், இது மாவட்ட மாநாடு அளவில் சிறப்பாக இருக்கிறது” எனத் தொண்டர்களின் ஆரவாரத்தை அதிகமாக்கினார்.

தொடர்ந்து பேசியவர், ``இன்றைக்கு ஆளும்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க.வுக்கு ஒரு மிகப்பெரிய சக்தியாக விளங்கிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏற்கெனவே அண்ணா அறிவாலயத்துக்கு வந்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டிருந்தாலும், அவருடைய தலைமையில் ஏறக்குறைய 32,000 பேர் இன்றைக்குக் கரூரில் நடந்த நிகழ்ச்சியில், தி.மு.கவுடன் இணைந்திருக்கிறார்கள். இப்படி பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, நம்முடைய இயக்கத்தில் அவர்கள் இணைவதைப் பார்க்கையில், மக்களுக்கு நம்முடைய இயக்கத்தின் மீது பெரும் நம்பிக்கை வந்திருப்பது தெரிகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய எடப்பாடியினுடைய ஆட்சியானது லஞ்சம், ஊழல் நிறைந்த ஆட்சியாக இருக்கிறது. அதையும் தாண்டி மத்தியில் இருக்கக்கூடிய மோடியினுடைய ஆட்சிக்குத் துதி பாடுகிற, அடிமையாக இருக்கக்கூடிய ஒரு மானங்கெட்ட ஆட்சியாகத் தமிழ்நாட்டில் இருந்துகொண்டிருக்கிறது.

அந்தவகையில், மத்திய மோடி ஆட்சிக்கும், மாநிலத்தில் இயங்கக்கூடிய எடப்பாடி ஆட்சிக்கும் விடை கொடுக்கக்கூடிய நாள் விரைவில் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டுமென தி.மு.க முனைப்பாக இயங்கி வருகிறது. இந்த நேரத்தில் உங்களோடு நாங்களும் இணைந்து பணியாற்றுகிறோம் என மாற்றுக் கட்சியிலிருந்து வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் வருக வருக என இரு கரம் கூப்பி அல்ல, இரு கரம் நீட்டி வரவேற்கிறேன். உங்களுடைய பணி தொடர்ந்து தமிழக மக்களுக்காகவும், கழகத்துக்கு வலு சேர்க்கக் கூடிய வகையில் அமைய வேண்டும்” என முடிக்க, தொண்டர்கள் ஆரவாரம் காதைக் கிழித்தது.

ஒரே நாளில் இரண்டு பிரமாண்டமான இணைப்பு நிகழ்ச்சிகளை முடித்த உற்சாகத்தில் கிளம்பிய ஸ்டாலின், ஈரோடு மூலக்கரைப் பகுதியில் விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளைச் சந்தித்தார். அப்போது, “உங்களுடைய பிரச்னையை வருகின்ற சட்டசபையில் பேசுகிறேன்” என தெம்பூட்டிவிட்டு கிளம்பினார்.