Published:Updated:

`உங்களோடு கூட்டணி வைத்தால் பேரழிவு!' - டெல்லிக்குப் பதில் கொடுத்த எடப்பாடி பழனிசாமி

`உங்களோடு கூட்டணி வைத்தால் பேரழிவு!' - டெல்லிக்குப் பதில் கொடுத்த எடப்பாடி பழனிசாமி
`உங்களோடு கூட்டணி வைத்தால் பேரழிவு!' - டெல்லிக்குப் பதில் கொடுத்த எடப்பாடி பழனிசாமி

`எங்களுக்கு எதிரி ஸ்டாலின்தான். அவர் காங்கிரஸ் கட்சியுடன் இருப்பதால், நாங்கள் உங்களைத்தான் ஆதரிப்போம்' என பா.ஜ.க தலைமையிடம் சொல்வோம். எதிரியுடன் காங்கிரஸ் இருப்பதால் பா.ஜ.க-வை நாம் பெட்டராகத்தான் பார்க்க முடியும்.

த்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமனுடன் தமிழக அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் பேசியதை வைத்து, கூட்டணி முடிச்சு போடத் தொடங்கினர் அரசியல் கட்சிகள். `பா.ஜ.கவோடு கூட்டணி வைத்தால் பேரழிவை உண்டாக்கும். தனித்துப் போட்டியிடுவதே நல்லது' என ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

புதுடெல்லியில் நேற்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியைச் சந்தித்துப் பேசினார் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. இதன்பிறகு மத்திய ஊரகத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமோரையும் அவர் சந்தித்துப் பேசினார். தொடர்ச்சியான இந்தச் சந்திப்புகளின் மூலம், பா.ஜ.க கூட்டணியை அ.தி.மு.க உறுதிப்படுத்துகிறது என அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. நேற்று முன்தினம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தபோது, இதேபோன்ற கருத்து பரவியது. இதற்கு விளக்கம் கொடுத்த அமைச்சர் தங்கமணி, ``நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கஜா புயலால் தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால், தேவையான நிதியைப் பெற்றுத்தருமாறு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்ற முறையில் அவரை சந்தித்தோம். இதில் என்ன தவறு இருக்கிறது?" என்றார் நிதானமாக. 

டெல்லி சந்திப்புகள் பற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகளும், "பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்பதைப் பற்றித்  தெளிவுபடுத்துவதற்காகத்தான் இந்தச் சந்திப்பு நடந்தது. தனித்துப் போட்டியிட்டு தேர்தலைச் சந்திக்கிறோம். பிறகு உங்களை ஆதரிக்கிறோம் என்பதுதான் சந்திப்புகளின் பிரதான நோக்கமாக இருந்தது" என்றனர். இதற்கு பா.ஜ.க தரப்பில் பதில் சொன்னவர்களும், `இதைப்பற்றி மோடி, அமித் ஷாவிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம்' எனக் கூறியுள்ளனர். டெல்லி சந்திப்புகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளிலும் கூடுதல் உற்சாகம் தென்படத் தொடங்கிவிட்டது. இந்த உற்சாகத்தை தன்னைச் சந்திக்க வந்தவர்களிடமும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில் மூத்த அமைச்சர்களிடம் பேசிய முதல்வர், "பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை. தேர்தலுக்குப் பிறகு பிரச்னைகளின் அடிப்படையில் அவர்களுக்கு ஆதரவு தருவோம். இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன்" எனக் கூற, பா.ஜ.க-வின் வழக்கு அஸ்திரங்களைப் பற்றி ஒருவர் எடுத்துக் கூறியிருக்கிறார்.

இதற்குப் பதில் கொடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அம்மா சந்திக்காத வழக்குகளா...அதைவிட நம் மேல் என்ன வழக்கு வந்துவிடப் போகிறது. நம்மீது நேரடியாக எந்த வழக்குகளும் இல்லையே... மோடி எதிர்த்தால் நாம் மிகப் பெரிய ஹீரோக்களாகப் பார்க்கப்படுவோம். 44 சதவிகித வாக்குகளைப் பெற்று 37 சீட்டுகளையும் பெற்றுக் கொடுத்தார் அம்மா. 1996-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 13 சதவிகித ஓட்டுக்களைப் பெற்றார் அம்மா. அப்போது, மிகக் குறைவான எண்ணிக்கையில் போட்டியிட்டோம். இப்போது நாமும் கட்சி பலத்தில் களத்தில் நிற்கிறோம். சந்திரசேகர ராவ் பெற்ற வெற்றியை நாமும் பெறுவோம். 2014, 16 தேர்தல்களில் தனித்து நின்று அம்மா வெற்றி பெற்றது போல நமக்கும் வெற்றி வாய்ப்பு வந்து சேரும். பா.ஜ.க-வோடு கூட்டணி வைத்தால் மாநிலப் பிரச்னைகள் அனைத்துக்கும் நம் மீது பழிபோடுவார்கள். இந்தத் தேர்தலில் சிட்டிங் எம்.பி-க்களுக்கு சீட் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். அவர்களும் சரியாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. 

இப்படிப்பட்ட சூழலில், பா.ஜ.க-வோடு நாம் சேர்ந்தால் கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளை இழக்க நேரிடும். தைரியமாக அம்மா போல 40 தொகுதிகளிலும் நாம் போட்டியிடலாம். மக்கள் மத்தியில் அம்மாவின் துணிச்சலுக்கு இன்றளவும் மரியாதை இருக்கிறது. இதே பாணியில் போட்டியிட்டால், குறிப்பிடத்தக்க வெற்றியை நம்மாலும் பெற முடியும். தேர்தல் முடிவில் பிரச்னைகளின் அடிப்படையில் நாம் பா.ஜ.க-வுக்கு ஆதரவு கொடுக்கலாம். அதைப் பற்றி பா.ஜ.க தலைவர்களிடம் தெளிவுபடுத்திவிட்டோம். `எங்களுக்கு எதிரி ஸ்டாலின்தான். அவர் காங்கிரஸ் கட்சியுடன் இருப்பதால், நாங்கள் உங்களைத்தான் ஆதரிப்போம்' என பா.ஜ.க தலைமையிடம் சொல்வோம். எதிரியுடன் காங்கிரஸ் இருப்பதால் பா.ஜ.க-வைத்தான் நாம் பெட்டராகப் பார்க்க முடியும். தேர்தலில் பா.ஜ.க-வுடன் நாம் கூட்டணி வைத்தால் அதனால் அவர்களுக்கும் லாபமில்லை, நமக்கும் லாபமில்லை. மிகப் பெரிய பேரழிவை உருவாக்கும். முத்தலாக் சட்ட மசோதாவை எதிர்த்ததும் இதே அடிப்படையில்தான்" என விவரித்திருக்கிறார். 

பின் செல்ல