மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)

என்ன செய்தார் எம்.பி? - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)

எம்.பி-யை சந்திப்பதே பெரிய சவால்!

#EnnaSeitharMP
#MyMPsScore

ட கிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. தென்காசி தொகுதியை நெருங்கும்போதே குளிர்காற்றும் சாரலும் சில்லிட வைக்கின்றன. பசுமையான மேற்குத்தொடர்ச்சி மலையைப் போர்வையாகப் போர்த்தியிருக்கின்றன, மேகங்கள். மனதுக்கும் உடலுக்கும் இதமாக இருக்கிறது சூழல். “வெளியே இருந்துவரும் உங்களுக்குத்தான் இந்தச் சுகம். நாங்கள் படும்பாடு எங்களுக்குத்தான் தெரியும். தொகுதியில் எந்த அடிப்படை வசதியும் செய்துத் தரப்படவில்லை” என்று கொந்தளிக்கிறார்கள், தென்காசி நாடாளுமன்றத் தொகுதி மக்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி என ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது தென்காசி நாடாளுமன்றத் தொகுதி. ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையத்தில் நூற்பு ஆலை, சங்கரன்கோவிலில் நெசவு, தென்காசியில் விவசாயம் என பிஸியான தொகுதியும்கூட. கடையநல்லூரில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் வேலைசெய்கிறார்கள். இப்படிப் பல தொழில்கள் கலந்துகட்டிக் கிடப்பதைப்போலவே இத்தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என எல்லாக் கட்சியைச் சேர்ந்தவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துவருகின்றனர்.

என்ன செய்தார் எம்.பி? - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)

இந்தத் தொகுதியில் 1998-ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு முதல்முறையாக காங்கிரஸ் கோட்டையைத் தகர்த்து எம்.பி-யானவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த முருகேசன். அதேவேகத்தில் 2004-ம் ஆண்டில் போட்டியிட்ட முருகேசன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லிங்கத்திடம் தோற்றார். அந்த முருகேசனின் மனைவி வசந்தி முருகேசன்தான் தற்போதைய தென்காசி தொகுதி எம்.பி. அவர் தென்காசி வாக்காளர்களின் பிரச்னைகளைத் தீர்க்க ஏதாவது செய்திருக்கிறாரா?

“எம்.பி வசந்தியா... அப்படி ஒருத்தர் இருக்காங்களா?” என்று நம்மிடமே திருப்பிக்கேட்கிறார்கள் தொகுதி மக்கள். திருநெல்வேலி மாநகரில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் முன்வரிசையில் இடம் பிடிக்கவும் புகைப்படத்துக்கு போஸ்கொடுக்கவும் மட்டுமே ஆர்வம் காட்டும் வசந்தி முருகேசன், தொகுதிப் பக்கம் எட்டிக்கூடப் பார்ப்பதில்லை என்பது தொகுதி மக்களின் பிரதானக் குற்றச்சாட்டு.

நெல்லைப் புறநகர் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் தி.மு.ராஜேந்திரன், “அரசு நிகழ்ச்சிகள்லகூட எம்.பி வர்றதில்லை. இவங்க எப்படி மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பாங்க? தென்காசியில் விவசாயத்தை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கு. விவசாயத்துக்கான தண்ணீர் ஆதாரமான செண்பகவள்ளி அணை வருஷக்கணக்கா சேதமடைஞ்சு இருக்குது. அணையில உடைஞ்சு கிடக்கிற ஒரு பகுதியைச் சீரமைச்சா சிவகிரியில இருந்து சங்கரன்கோவில், திருவேங்கடம்வரை சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பகுதிக்கு தண்ணி கிடைக்கும். வருஷத்துக்கு மூணு போகம் விளைவிக்கலாம். அதேமாதிரி தென்காசியில இருக்குற எலுமிச்சை மார்க்கெட் பிரசித்தி வாய்ந்தது. இந்தப் பகுதியில அதிகமா எலுமிச்சை விளையுறதால பதப்படுத்தி ஏற்றுமதி செய்ற நிறுவனத்தை அமைக்கணும்னு 30 வருஷத்துக்கு மேல கேட்டுருக்கோம். எதையுமே எங்க எம்.பி கண்டுக்கலை.

கூலி உயர்வு கேட்டு விசைத்தறித் தொழிலாளர்கள் ரெண்டு மாசமாப் போராடுனாங்க. ஆறுதலுக்காகக்கூட எம்.பி எட்டிப் பார்க்கலை. திருநெல்வேலியைத் தனி ரயில்வே கோட்டமா மாத்துறதுக்கு எல்லாத் தகுதிகளும் இருக்கு. ஆனா, நாடாளுமன்றத்தில் இவங்க பேசவேயில்லை. ரொம்ப வருஷமா கிடப்புல இருந்த விருதுநகர் - கொல்லம் அகல ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேத்தி, செங்கோட்டையில தொடக்க விழா வெச்சாங்க. அந்த விழாவுக்கு கேரள மாநிலத்துல இருந்துகூட எம்.பி இங்க வந்து கலந்துக்கிட்டார். ஆனா, லோக்கல் எம்.பி வரவேயில்லை. தொகுதியில எம்.பி-க்கு அலுவலகமே இல்லை. நாங்க எங்க போய் அவரைப் பார்த்து கோரிக்கை வைக்கிறது?” என்றார் ராஜேந்திரன்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அ.ம.மு.க நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், “ஸ்ரீவில்லிபுத்தூர்ல கடுமையான குடிநீர் பஞ்சம். குடித்தண்ணியை மக்கள் விலைக்கு வாங்குறாங்க. செண்பகத்தோப்பு பேயனாற்றுக் கிணறுகள்ல இருக்குற 22 போர்வெல்களைச் சீரமைச்சுச் சரியாப் பராமரிச்சாலே குடிநீர்ப் பிரச்னையை ஓரளவுக்குத் தீர்க்க முடியும். அதையெல்லாம் எம்.பி கண்டுக்கவேயில்லை. ஜெயிச்சு எம்.பி ஆன பிறகு நன்றி சொல்லக்கூடத் தொகுதிக்கு வரலை. வத்திராயிருப்பு தனி தாலுகாவாக மாற்றப்படும்னு சொன்னாங்க. கூமாபட்டி - வருஷநாடு மலைப்பாதை போடப்படும்னாங்க. ரெண்டு திட்டங்களும் அறிவிப்போடு நின்னுப் போச்சு” என்றார்.

ராஜபாளையம் தி.மு.க எம்.எல்.ஏ தங்கபாண்டியன், “தளவாய்புரத்துல உற்பத்தியாகுற ‘நைட்டி’க்கு தமிழ்நாடு முழுவதும் மவுசு இருக்கு. ஜவுளி உற்பத்தி பண்ற சிறு உற்பத்தியாளர்கள் ஜி.எஸ்.டி-யால பாதிப்படைஞ் சுருக்காங்க. நிறையப் பேர் வேலையை இழந்துட்டாங்க. இந்தப் பிரச்னையைத் தீர்க்க எம்.பி நடவடிக்கை எடுக்கலை. ராஜபாளையம், சேத்தூர் தார் சாலைக்காக 30 லட்ச ரூபாயை எம்.பி நிதியில் இருந்து ஒதுக்கியிருக்காங்க. அதைத்தவிர, இந்த அஞ்சு வருஷத்துல வேற எதையுமே செய்யலை. தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், புதிய பேருந்து நிலைய இணைப்புச் சாலைனு நிறையப் பணிகள் முடங்கிக்கிடக்கு. தமிழ்நாட்டுல ஆளும்கட்சியைச் சேர்ந்த எம்.பி-ங்கிறதால அமைச்சர்கள், முதல்வர் எல்லாத்தையும் சுலபமாச் சந்திக்க வாய்ப்பிருந்தும் தொகுதிக்கான எந்த விஷயத்தையும் இவங்க செயல்படுத்தலை” என்றார்.

ராஜபாளையம் நகரில், ‘எங்கள் எம்.பி-யைக் காணவில்லை’ என கம்யூனிஸ்ட் கட்சியினர் பதாகைகள் வைத்திருந்தனர். அதற்குப் பிறகும் அவர் தொகுதிக்குள் தலைகாட்டவில்லை. தொகுதிக்குள் இருக்கும் அ.தி.மு.க-வினரே வசந்தி முருகேசன் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

“சங்கரன்கோவில், சுப்பலாபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் விசைத்தறி நெசவுத் தொழிலை நம்பி இருக்கின்றன. காட்டன் சேலை, செயற்கை ஜரிகை பார்டர் சேலைனு தினமும் 70 லட்ச ரூபாய் மதிப்புக்கு இங்க ஜவுளி உற்பத்தியாகுது. ஆந்திரம், கர்நாடகம், பீஹார், மேற்கு வங்கம்னு பல மாநிலங்களுக்கு இங்கிருந்து ஜவுளிகள் போகுது. அதனால் இங்கு ஜவுளிப்பூங்கா அமைக்கணுங்கிறது எங்களோட நீண்டகால கோரிக்கை. அதையும் நிறைவேத்தலை.
1985-ம் வருஷம், ‘கைத்தறி ரக ஒதுக்கீடு’ சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட 11 ரகங்கள்ல வேட்டி, சேலை, கைலி, துண்டுகளும் இருக்கு. விசைத்தறி மூலம் இதை நாங்க உற்பத்தி செஞ்சா அபராதம் போடுறாங்க. நிறைய நெசவாளிகள் மேல கணக்குக் காட்டுறதுக்காகப் பொய் வழக்கும் போடுறாங்க. அதனால, இந்தச் சட்டத்தைத் திருத்தி அமைக்கணும்னு ரொம்ப வருஷமாகக் கேக்குறோம். மத்திய அரசுதான் இதைச் செய்யணும். ஆனா, இதை எதையும் எங்க எம்.பி நாடாளுமன்றத்துல பேசலை” என்று வருத்தப்படுகிறார்கள்” சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த நெசவாளர்கள்.

“கடையநல்லூர் ரயில் நிலையத்தில் நடைமேடை மேம்பாலம் அமைக்கப்படவில்லை. இதனால் தண்டவாளத்தில் நடந்து அடுத்தடுத்த நடைமேடைகளுக்குப் பயணிகள் ஆபத்தான நிலையில் செல்கின்றனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவது கடையநல்லூர்தான். அதிலிருந்து மக்களைக் காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை” என்கிறார், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் நகர நிர்வாகி குறிச்சி சுலைமான்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் பாஸ்கரன், “தென்காசி தொகுதியில் புதிய தொழிற்சாலைகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. தென்காசி மற்றும் கீழப்பாவூர் பகுதிகளில் பூ விவசாயம் அதிகம் நடக்கிறது. பூக்களைப் பதப்படுத்தவும், மதிப்புக்கூட்டவும் குளிர்ப்பதனக் கிடங்குகளையும், சென்ட் தொழிற்சாலைகளையும் அமைக்க எம்.பி எதுவும் செய்யவில்லை. தென்னை விவசாயம் நிறைந்த தென்காசியில் தேங்காய்க்குக் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய நாடாளுமன்றத்தில் எம்.பி குரல் கொடுக்கவில்லை” என்றார்.

வசந்தி முருகேசன், சிவகிரி அருகே விஸ்வநாதபேரி கிராமத்தைத் தத்தெடுத்துள்ளார். அதன் தொடக்க விழாவில் கலந்துகொண்டவர், அதற்கடுத்து அங்கு நடந்த ஓர் அரசு விழாவில் மட்டும் தலைகாட்டியிருக்கிறார். அத்துடன் சரி. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கீதா, “மக்கள் பிரச்னைகளைத் தீர்க்குறதுல ஆர்வம் காட்டுவார்னு நம்பி ஓட்டுப்போட்டோம். எங்க கிராமத்தைத் தத்தெடுத்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டோம். எங்க ஊர்ல இருக்குற ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயர்த்தச் சொல்லிக் கேட்டோம். சமூக நலக்கூடம் அமைக்கச்சொல்லி கேட்டோம். பல தடவை அவர்கிட்ட சொல்லியும் இந்த ரெண்டு விஷயத்தையும் செய்யவேயில்லை” என்றார் அவர்.

இதுகுறித்து எல்லாம் வசந்தி முருகேசனிடம் கேட்டோம். “தொகுதி மக்களுக்கு எவ்வளவோ வேலைகளைச் செஞ்சு குடுத்திருக்கேன். பல கிராமங்களில் குடிநீர், சாலைவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். தொகுதி வளர்ச்சிக்கு மத்திய அரசு அளித்த மொத்த நிதியையும் மக்களுக்குச் செலவு செஞ்சிருக்கேன். குற்றாலத்தில் சி.சி.டி.வி கேமரா அமைக்க நடவடிக்கை எடுத்தேன். எனது சொந்தப் பணத்தில் இருந்து பலருக்கு உதவிகள் செய்துள்ளேன். ஜம்புநதி மேல்மட்டக் கால்வாய் அமைக்க அரசிடம் பேசி முயற்சி எடுத்தேன். ராஜபாளையம் ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கவும், செங்கோட்டை ரயில் நிலையத்தில் மேற்கூரை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன். செங்கோட்டை - புனலூர் அகல ரயில்பாதை பணிகள் நீண்டகாலமாகக் கிடப்பில் இருந்தது. அதற்காக மத்திய அமைச்சரைச் சந்தித்துப் பேசி அந்த மார்க்கத்தில் ரயில் இயக்கவும் நடவடிக்கை எடுத்தேன். மனசாட்சிக்கு உட்பட்டும் கடவுளுக்குப் பயந்தும் எனது தொகுதி மக்களுக்கு நிறையச் செய்திருக்கிறேன்’’ என்று முடித்துக்கொண்டார். 

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- பி.ஆண்டனி ராஜ், இரா.மோகன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)
என்ன செய்தார் எம்.பி? - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)

எப்படி இருக்கிறது எம்.பி ஆபிஸ்?

தெ
ன்காசி தொகுதி எம்.பி வசந்தி முருகேசனின் வீடு திருநெல்வேலியில் உள்ளது. தென்காசித் தொகுதியில் அவருக்கு அலுவலகமே இல்லை. ஆனால், ‘முன்பு சங்கரன்கோவில், தென்காசி ஆகிய இடங்களில் அலுவலகம் அமைத்திருந்தார்’ என்றார்கள் எம்.பி-யின் ஆதரவாளர்கள். எங்குத் தேடியும் இப்போது அவை இல்லை. கடையநல்லூர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான சுகாதார வளாகம் குறித்து ஒரு மனுவைக் கொடுக்க ஏற்பாடு செய்தோம். அலுவலகம் இல்லாததால், இணையதளம் வாயிலாகக் கோரிக்கை மனுவை அனுப்பியிருக்கிறார் கடையநல்லூரைச் சேர்ந்த சுலைமான். இதுவரை அதற்குப் பதில் இல்லை. பெரும்பாலான நேரங்களில் வீட்டிலும் வசந்தி முருகேசன் இருப்பதில்லை. அதனால், அவரைச் சந்திப்பது தொகுதிவாசிகளுக்குச் சவாலாகத்தான் இருக்கிறது.

என்ன செய்தார் எம்.பி? - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)
என்ன செய்தார் எம்.பி? - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)
என்ன செய்தார் எம்.பி? - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)