Published:Updated:

'அம்மாவின்' அரசு, ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு அனுமதிக்குமா?

'அம்மாவின்' அரசு, ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு அனுமதிக்குமா?
'அம்மாவின்' அரசு, ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு அனுமதிக்குமா?

`உண்மை வென்றுள்ளது’ - இது, ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா நிறுவனம் வெளியிட்டிருக்கும் `வெற்றிப் பிரகடனம்’. வேதாந்தா வென்றிருக்கிறது என்றால், தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் `அம்மாவின் அரசு’ தோற்றிருக்கிறது என்றே பொருள். 

``ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது” என்று வாதிடுவோர், ஒன்றை உணர வேண்டும். எப்போது தூத்துக்குடியில் துப்பாக்கித் தூக்கப்பட்டதோ, மக்களின் மார்பிலும், மண்டையிலும் தோட்டாக்கள் பாய்ந்ததோ, அப்போதே, `ஸ்டெர்லைட் ஆலை’ அரசியல் விவகாரமாகி விட்டது. அதை விவாதிக்க வேண்டியதும், அதன் மீது வினா எழுப்ப வேண்டியதும், அதற்கு விடைதேட வேண்டியதும், அவசியமாகி விட்டது.

'அம்மாவின்' அரசு, ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு அனுமதிக்குமா?

கடந்த மே 22-ம் தேதி, தூத்துக்குடி கலவரப் பூமியாக மாறியது. `எங்கள் உயிருக்கு உலைவைக்கும் ஆலையை இழுத்துமூடு' என்று பேரணியாகச் சென்றவர்களை, துப்பாக்கிகளைத் தூக்கி வரவேற்றதுடன், தோட்டாக்களால் துளைத்து வழியனுப்பியது அரச பயங்கரவாதம். அப்போதிருந்து இப்போதுவரை அச்சம் விலகவில்லை, அங்கே. ரத்தம் காய்ந்தாலும் ரணம் ஆறவில்லை, அங்கே. ஓலமிட்டு ஓய்ந்தவர்கள், நிவாரண நிதி பெற்றார்களே ஒழிய, நிம்மதியைப்பெற்றார்களா என்றால் இல்லை என்பதே பதில். இத்தனை ஆண்டுகளாக எதற்காகப் போராடுகிறார்களோ, அதை அடையவே முடியவில்லை, அந்த மக்களால். இது அரசின் தோல்வி!

ஆறு மாதங்களுக்கு முன்னால், அ.தி.மு.க. அறச்செல்வர்கள் அரங்கேற்றிய நாடகங்களும் நடிப்புகளும், இப்போது நினைவுக்கு வருகின்றன. ``மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஆலையைப் பூட்டி இருக்கிறோம்” என்றார், ஓர் அமைச்சர். இப்போது, பூட்டை உடைக்கப் போகிறார்கள். மக்களின் உணர்வுக்கு மதிப்பு எங்கே போனது? “எந்தக் கொம்பனாலும் ஆலையைத் திறக்க முடியாது” என்றார், இன்னோர் அமைச்சர். இப்போது திறக்கப்போகிறார்கள். அமைச்சர் இப்போது என்ன சொல்வாரோ! காலம் கடந்துவிட்டால், அப்போது தவறென்று இருந்தது, இப்போது சரியென்று ஆகிவிடுமா?

'அம்மாவின்' அரசு, ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு அனுமதிக்குமா?

``திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை இது” என்று ஊடகங்கள் குற்றம் சாட்டியபோது, உவக்கவில்லை உத்தமர்களுக்கு. ஆனால் இப்போது, பிரேத பரிசோதனை அறிக்கைகளை ஊடகங்கள் வெளிகொண்டு வந்திருக்கின்றன. ``17 வயது ஸ்னோலின், பின்மண்டையில் சுடப்பட்டிருக்கிறார். 40 வயது ஜான்ஸி, காதுப்பகுதியில் சுடப்பட்டிருக்கிறார். 34 வயது மணிராஜன், நெற்றிப்பகுதியில் சுடப்பட்டிருக்கிறார்” என்று அதிரவைக்கிறது அந்த அறிக்கை. ``துப்பாக்கிச் சூட்டைத் திட்டமிட்டு நடத்தவில்லை” என்று தியாகி வேஷம் போட்டவர்கள் எல்லாம், இப்போது எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இது உண்மை இல்லை என்றால், ஏன் மறுக்கவில்லை? மனசாட்சி உறுத்துகிறதா அல்லது மௌனம் சம்மதமா? வேடம்போடுபவர்களிடம் பதிலில்லை. 

அமைச்சர்கள் மட்டுமல்ல, முதலமைச்சரும் நாடகங்களை அரங்கேற்றுவதில் முன்னால் நின்றார். ``டி.வி-யைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன்” என்று அறிவித்த எடப்பாடியார், உடனடியாகத் தூத்துக்குடிக்குச் சென்று என்ன நடந்தது என விசாரிக்கவில்லை. இதோ செல்கிறேன்; அதோ செல்கிறேன் என்று அறிவித்தாரே தவிர, ஆறு மாதங்கள் கடந்த பின்னரும், தூத்துக்குடிக்குச் செல்லவே இல்லை. ஸ்டெர்லைட் விளம்பரத்தில், ``ஆலையைத் திறக்க `முதல்வர்’ உதவ வேண்டும்”என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறது வேதாந்தா. முதல்வரின் பதில் என்னவாக இருக்கப்போகிறது என்பதை அறிய, ஆவலாக இருக்கிறது.    

'அம்மாவின்' அரசு, ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு அனுமதிக்குமா?

அன்று, அவர் அறிவித்ததை அவருக்கே நினைவுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ``மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் இந்த அரசு, பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துகளுக்கும் மதிப்பளித்து, ஸ்டெர்லைட் ஆலையை `நிரந்தரமாக’ மூடியுள்ளது” என்று அறிவித்தார். ஆனால், இப்போது ஆலையைத் திறக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது, நிர்வாகம். ``இன்னும் இரண்டு மாதங்களில் திறப்போம்” என்று அறிவித்திருக்கிறார், ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி. `நிரந்தரமாக’ என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை, அரசு விளக்க வேண்டிய தருணமிது.

`ஆலையால் பாதிப்பு இல்லை’ என்று சொல்வதை விட, `ஆலையால் பாதிப்பு ஏற்பட்டது என்பதற்கு ஆதாரம் இல்லை’ என்றே சொல்கிறது, ஆலை நிர்வாகம். இதில்தான் அடங்கியிருக்கிறது, ஆளுங்கட்சியின் அதர்ம நோக்கும், அலட்சியப்போக்கும். ஸ்டெர்லைட் வழக்கைக் கவனிப்பவர்கள், ``தீர்ப்பாயத்தில், ஆலை நிர்வாகத்தை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அரசின் வாதங்கள் இல்லை. அதற்குரிய ஆதாரங்களையும் முறையாக முன்வைக்கவில்லை. ஆய்வுக் குழுவின் அறிக்கைக்கு `ஆமாம் சாமி’ போடும் வகையிலேயே இருந்தது அரசின் வாதம்” என்கிறார்கள். ஆக, `நான் அடிப்பதைப் போல அடிக்கிறேன். நீ அழுவதைப் போல அழு’ என்ற வகையில் வழக்கை அணுகி இருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்தே, வேதாந்தா நிறுவனத்தைப் பற்றியோ, அனில் அகர்வாலைப் பற்றியோ, ஆட்சியாளர்கள் விமர்சிக்காமல் கடந்துசெல்வதும், சந்தேகத்தை அதிகரிக்கிறது.

தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து, தனிநபர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படுகிறது. ``தீர்ப்பின் மீது அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?” என்று கேட்கிறார் நீதிபதி. அதற்கு அரசு வழக்கறிஞர், ``அதுதான் மார்ச் மாதம் வரை அவகாசம் இருக்கிறதே” என்கிறார். `ஆலை தேவையில்லை’ என்பதே அரசின் நிலைப்பாடு என்றால், எதற்கு அவகாசம் கேட்கப்படுகிறது? இப்போது வரை, `மேல்முறையீடு செய்யலாமா? வேண்டாமா?’ என்று, ஆலோசித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

'அம்மாவின்' அரசு, ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு அனுமதிக்குமா?

``ஆலைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்” என்று கேட்கிறார்கள், மக்கள். ``ஆலையைத் திறக்கக் கூடாது என்று கொள்கை முடிவு எடுங்கள்” என்று கேட்கின்றன, கட்சிகள். ஆனால், ஆழ்ந்த தியானத்தில் இருக்கிறது, `அம்மா அரசு’. ``இன்னும் ஏன் தாமதிக்கிறீர்கள்? ஆலை தேவை என்பதே எங்களின் நிலைப்பாடு என்று அறிவித்துவிட்டால், வேலை முடிந்து விடுமே” என்று கொதிக்கிறார்கள் மக்கள். `அம்மா’ மரணத்தை விசாரிக்கும், ஆறுமுகசாமி ஆணையம் காட்சிக்கு வரும் அளவுக்கு, தூத்துக்குடி மரணங்களை விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையம் காட்சிக்கு வருவதில்லை. இதுவும் ஆராயப்பட வேண்டியது.

இதையெல்லாம் கவனப்படுத்த வேண்டிய பிரதான எதிர்க்கட்சி, `சேடிஸ்ட் யார்?’ என்ற விவாதத்தில் பிஸியாக இருக்கிறது. கூடங்குளம் போராட்டத்தின் போது, திமுக-வை நோக்கி, ``இது அணு உலைக்கு எதிரான நிலைப்பாடா? அல்லது, அதிமுக-வுக்கு எதிரான நிலைப்பாடா?” என்று கேள்வி எழுப்பினார்கள் மக்கள். அதேதான் இப்போதும். ``இது ஆலைக்கு எதிரான நிலைப்பாடா? அல்லது அதிமுக-வுக்கு எதிரான நிலைப்பாடா?” என்று கேள்வி எழுப்புகிறார்கள். பதிலென்ன? ’அ.தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாடு இல்லை, ஆலைக்கு எதிரான நிலைப்பாடுதான்’ என்றால், அதை இப்போதே உணர்த்த வேண்டிய கடமை, எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. கணக்குக்காட்டுவதற்காக ஓர் அறிக்கையும், கண் துடைப்புக்காக ஒரு கூட்டமும், அரியணையை அளித்துவிடாது.

'அம்மாவின்' அரசு, ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு அனுமதிக்குமா?

``ஆலை மூடப்பட்டதால் வேலையிழந்தவர்கள், ஆலையைத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இதையும் பார்க்க வேண்டும்” என்று சொல்கிறார், மத்திய அமைச்சர். ``ஆலையைத் திறந்தால் உயிருக்கு ஆபத்து என்று மக்கள் அஞ்சுகிறார்களே, இதைப் பார்க்க வேண்டாமா?” என்று கேட்டால், அமைச்சரிடம் பதிலில்லை. ``முழுதாக அறிக்கை கிடைத்தபின் இரங்கல் தெரிவிப்பார் பிரதமர்” என்று சொன்னதையும் மறந்துவிட்டார்கள். ``ஆறு மாதங்கள் முடிந்தபிறகும் முழு அறிக்கை கிடைக்கவே இல்லையா பிரதமருக்கு?” என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை. மாநில அமைச்சர் முதல் மத்திய அமைச்சர் வரை பதுங்குவதைப் பார்த்தால், அவலமாக இருக்கிறது.

தூத்துக்குடியில் இப்போதும் போராட்டங்கள் தொடர்கின்றன. வீடுகளில் கறுப்புக்கொடிகள் பறக்கின்றன. நமது நிருபர் தூத்துக்குடி செல்கிறார். மக்களைச் சந்திக்கிறார். ஓர் இளம்பெண், ``இப்போ மறுபடி ஆலையைத் திறக்கப் போறாங்களாம். போராடலாம்னு சொன்னால், முன்னாடி வந்த மாதிரி நிறைய பேர் முன்வர மாட்டேன்கிறாங்க. கொஞ்சம் பேர்தான் வர்றாங்க. பசங்க நிறைய பேர் வந்தாலும் பொண்ணுங்க கம்மியாதான் வர்றாங்க. இன்னும் எந்த உசுரையும் இழந்திடக் கூடாதுன்னு எல்லோர் மனசுக்குள்ளேயும் ஒரு பயம் இருக்கு. மக்கள்கிட்ட உயிர் பயத்தை ஏற்படுத்திட்டாங்க. எல்லோர் வீட்டிலும் கறுப்புக் கொடி கட்டியிருக்கோம். யாரும் எதையும் மறக்கலை. ஆனா, அந்த ஆலையைத் திறக்கக் கூடாதுன்னு எல்லா மக்களும் ஆசைப்படுறாங்க. அந்த ஆலை எங்க ஊருக்கு வேண்டாமே.. ப்ளீஸ்!” என்று அழுகிறார்.

மக்கள் நலனில் அக்கறை(?!) கொண்ட `அம்மா அரசு’க்குப் புரிவது எப்போது?