Published:Updated:

இந்த ஆண்டின் டாப் 10 அரசியல் நிகழ்வுகள்!

இந்த ஆண்டின் டாப் 10 அரசியல் நிகழ்வுகள்!
இந்த ஆண்டின் டாப் 10 அரசியல் நிகழ்வுகள்!

ந்த ஆண்டு முடிவுக்கு வந்து, புத்தாண்டான 2019-ம் ஆண்டு தொடங்கும் நிலையில் நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் நிகழ்ந்த முக்கிய அரசியல் சம்பவங்கள் சிலவற்றை இங்கே பார்ப்போம். 2018 அரசியல் பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாத ஆண்டாகவே அமைந்தது எனலாம். நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு முந்தைய ஆண்டில், ஏராளமான ஆச்சர்ய நிகழ்வுகளும் நடந்தேறின. 

1. பீமா கோரிகான் கலவரம்:

இந்த ஆண்டின் டாப் 10 அரசியல் நிகழ்வுகள்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள `பீமா கோரிகான்' நகரில் ஜனவரி மாதத்தில் பீமா கோரிகான் போர் வெற்றியின் நினைவு தினத்தை, பல்வேறு பகுதிகளிலும் இருந்து தலித் மக்கள் வந்து செல்வது வழக்கம், அதன்படி, கடந்த ஜனவரியில், பீமா கோரிகான் போரின் இருநூறாவது ஆண்டு நினைவு தினத்தைக் கடைப்பிடிக்க மக்கள் குழுமியிருந்தபோது, மிகப்பெரிய அளவில் கலவரம் வெடித்தது. சில வலதுசாரி அமைப்புகளால் அந்தக் கலவரம் அரங்கேற்றப்பட்டதாக சமூகச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டினர். திட்டமிட்டே இந்தக் கலவரம் தூண்டிவிடப்பட்டதாக, தலித் அமைப்புகளும் குற்றம் சாட்டின. இந்தக் கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 

2. நீதிபதிகள் செய்தியாளர்கள் சந்திப்பு:

இந்த ஆண்டின் டாப் 10 அரசியல் நிகழ்வுகள்!

ஜனவரி 12, 2018 அன்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகுர் ஆகிய நான்குபேரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, சரியான திசையில் உச்ச நீதிமன்றம் செயல்படவில்லை என்றும், தலைமை நீதிபதி ஒரு சார்பாகச் செயல்படுகிறார் என்றும் குற்றம்சாட்டினர். நீதித்துறை வரலாற்றில் முன்பு எப்போதும் நடந்திராத நிகழ்வாக இது அமைந்தது. ``நீதித்துறையையும், ஜனநாயகத்தையும் பாதுகாத்திடுங்கள்” என நீதிபதிகள் விடுத்த அறைகூவல் அரசியல் களத்தையும் தாண்டி, பொதுவெளியிலும் பல்வேறு விவாதங்களை கிளப்பியது. 

3. இடைத்தேர்தலில் பி.ஜே.பி. தோல்வி:

இந்த ஆண்டின் டாப் 10 அரசியல் நிகழ்வுகள்!

உத்தரப் பிரதேச மாநிலம் உட்பட பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தலில் தொடர்ந்து வெற்றிபெற்ற பி.ஜே.பி., நாடாளுமன்றத்தில் அசுர பலத்துடன் விளங்கியது. இந்தத் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மார்ச் மாதம் உத்தர பிரதேசத்தின் கோரக்பூர், பூல்ஃபூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல். முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கெனவே வெற்றிபெற்றிருந்த கோரக்பூரையும், மற்றொரு தொகுதியையும் இழந்தது பி.ஜே.பி. 

4. மோடிக்கு எதிரான ஹேஷ்டேக்...

இந்த ஆண்டின் டாப் 10 அரசியல் நிகழ்வுகள்!

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உரிய காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டி மத்திய அரசு, தட்டிக்கழித்தது. இந்தச் சூழலில் ஏப்ரல் 12-ம் தேதி, சென்னை அருகே பாதுகாப்புக் கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன. கறுப்புச்சட்டை அணிந்து `gobackmodi' என்ற பதாகைகளோடு சென்னை மாநகரில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் #GobackModi என்னும் ஹேஷ்டேக், உலக அளவில் ட்ரெண்டானது. 

5. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்:

இந்த ஆண்டின் டாப் 10 அரசியல் நிகழ்வுகள்!

``கர்நாடகத்தின் வழியே தென்னிந்தியாவில் கால்பதித்து பி.ஜே.பி. வெற்றிக்கணக்கைத் தொடங்கும்” என்கிற முழக்கத்தோடு மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தது. காங்கிரஸ் - பி.ஜே.பி - மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் போட்டியிட்ட மும்முனைப் போட்டியாக இருந்த அந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், குமாரசாமி முதல்வராகப் பதவியேற்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணி அரசு உருவானது. முன்னதாக, முதல்வராகப் பொறுப்பேற்ற எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே ராஜினாமா செய்ய, குமாரசாமி தலைமையில் கூட்டணி அரசு பதவியேற்றது. 

6. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு:

இந்த ஆண்டின் டாப் 10 அரசியல் நிகழ்வுகள்!

இந்த ஆண்டில் மிக மோசமான நிகழ்வாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு அமைந்தது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். மே 22-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், வாகன எரிப்பைக் காரணம்காட்டி இந்தக் கொடூரச் செயலை நிறைவேற்றினர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

7. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா:

இந்த ஆண்டின் டாப் 10 அரசியல் நிகழ்வுகள்!

டெல்லி மாநில அரசின் செயல்பாடுகளை துணை நிலை ஆளுநர் மூலம் மத்திய அரசு தடுத்து வருவதாக, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தநிலையில், கடந்த ஜூன் மாதம் கெஜ்ரிவால், அமைச்சர்கள் இருவருடன் துணை நிலை ஆளுநரின் இல்லத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாநில உரிமைகள், ஆளுநரின் அத்துமீறல் தொடர்பான பிரச்னையாக தேசிய அளவில் இது பேசப்பட்டது. 

8. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்: 

இந்த ஆண்டின் டாப் 10 அரசியல் நிகழ்வுகள்!

ஜூலை மாதம், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு மீது தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பி.ஜே.பி-க்குப் பெரும்பான்மை இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெற்றது. விவாதத்தின்போது, மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. என்றாலும், மத்திய அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.

9. காஷ்மீர் அரசு கலைப்பு: 

இந்த ஆண்டின் டாப் 10 அரசியல் நிகழ்வுகள்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று ஆண்டுகள் நடைபெற்ற பி.டி.பி - பி.ஜே.பி. கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை ஜூன் மாதத்தில் பி.ஜே.பி. விலக்கிக்கொண்டது. இதனால், சட்டசபை முடக்கிவைக்கப்பட்டது. புதிய அரசு அமைக்கப்படாமலும், சட்டசபை கலைக்கப்படாமலும் ஐந்து மாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் சட்டசபையைக் கலைத்து ஆளுநர் உத்தரவிட்டார்.

10. ஐந்து மாநில சட்டபேரவைத் தேர்தல்கள்: 

இந்த ஆண்டின் டாப் 10 அரசியல் நிகழ்வுகள்!

2019 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கான அரை இறுதிப்போட்டியாகப் பார்க்கப்பட்ட ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பி.ஜே.பி-க்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைத்தது. தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து எம்.என்.எஃப். ஆட்சியைக் கைப்பற்றியது. 

2018 என்னவோ, முடிந்திருந்தாலும், மிக முக்கியமான நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி காங்கிரஸ், பி.ஜே.பி. உள்ளிட்ட தேசியக் கட்சிகள் மட்டுமல்லாது, மாநிலக் கட்சிகளும் இப்போதே அதற்குத் தயாராகத் தொடங்கி விட்டன. வரும் ஆண்டில் அரசியல் நிகழ்வுகளை இன்னும் பரபரப்பாக எதிர்பார்க்கலாம்...