Published:Updated:

`அட்டவணையில் தொடர்வோம்!’ - கிருஷ்ணசாமிக்கு எதிராக மனு

`அட்டவணையில் தொடர்வோம்!’ - கிருஷ்ணசாமிக்கு எதிராக மனு
`அட்டவணையில் தொடர்வோம்!’ - கிருஷ்ணசாமிக்கு எதிராக மனு

``தேவேந்திர குல வேளாளர் மக்கள், பட்டியல் பிரிவில் தொடர்ந்து இருக்க வேண்டும். பட்டியலிலிருந்து வெளியேறி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும்’’ என்ற கோரிக்கையுடன் தேவேந்திரர் சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பாக இன்று மதுரை கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தேவேந்திர குல வேளாளர் மக்களை அட்டவணைப் பட்டியலலிருந்து நீக்கி பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து கோரிக்கை மாநாடுகள் நடத்தி, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் சமுதாய மக்கள் சார்பாக மனுக்கள் அளித்து வருகிறார். இந்தநிலையில் தேவேந்திர குல வேளாளர் சமூக அமைப்புகள் சில இதை எதிர்த்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள். 

இந்தநிலையில் முன்னாள் எம்.எல்.ஏ முருகவேல்ராஜன், சந்திரபோஸ், ஊர்க்காவலன், மனோகரன், கார்த்திக், செல்லையா பாண்டியன் போன்றோர் அங்கம் வகிக்கும் தேவேந்திரர் சமூக பாதுகாப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் மதுரை கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். அதில், ``அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கிய பாதுகாப்பால் அட்டவணையில் இணைக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட அட்டவணையில், தேவேந்திர குல வேளாளர் என்றழைக்கப்படும் பள்ளர் சமூகமும் இணைக்கப்பட்டதால்தான் கல்வி கற்கும் வாய்ப்பும், அரசு மற்றும் பொதுத்துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற முடிந்தது. தொழில் செய்து முன்னேறவும் இந்த அட்டவணை பயன்பட்டது. இச்சமூகத்திலிருந்து அனைத்து விதமான உரிமைகளையும் பயன்படுத்தி பொருளாதார ரீதியாக பெரும் முன்னேற்றம் அடைந்தவர்கள் மட்டும் பட்டியலிலிருந்து வெளியேற வேண்டும் என்கிறார்கள். இதை அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது. சட்டப்படியான பட்டியல் இட ஒதுக்கீடு பாதுக்கப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.