Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - உதயகுமார் (திண்டுக்கல்)

என்ன செய்தார் எம்.பி? - உதயகுமார் (திண்டுக்கல்)
பிரீமியம் ஸ்டோரி
என்ன செய்தார் எம்.பி? - உதயகுமார் (திண்டுக்கல்)

பூட்டுத் தொழிலுக்கு பூட்டுப் போட்ட எம்.பி!

என்ன செய்தார் எம்.பி? - உதயகுமார் (திண்டுக்கல்)

பூட்டுத் தொழிலுக்கு பூட்டுப் போட்ட எம்.பி!

Published:Updated:
என்ன செய்தார் எம்.பி? - உதயகுமார் (திண்டுக்கல்)
பிரீமியம் ஸ்டோரி
என்ன செய்தார் எம்.பி? - உதயகுமார் (திண்டுக்கல்)

#EnnaSeitharMP
#MyMPsScore

வார்டு கவுன்சிலர் தேர்தலில் ஜெயிக்க முடியாதவர்கூட எம்.பி தேர்தலில் ஜெயிக்க முடியும் என்பதற்கு உதாரணம் உதயகுமார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சொந்த ஊரான நிலக்கோட்டையில் ஐந்தாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் உதயகுமார் போட்டியிட்டார். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனவருக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளில் அடித்தது டெல்லி ஜாக்பாட். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதி வேட்பாளராக ஜெயலலிதாவால் உதயகுமார் அறிவிக்கப்பட்டு, ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். பேரூராட்சியில் நுழைய முடியாதவரை, நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்கள் திண்டுக்கல் வாக்காளர்கள். உதயகுமாரால் முன்னேற்றம் அடைந்ததா திண்டுக்கல்?  

நிலக்கோட்டையில் வழக்கறிஞர் தொழில் பார்த்துக்கொண்டிருந்தார் உதயகுமார். நாடாளுமன்ற வேட்பாளராக உதயகுமார் அறிவிக்கப்பட்டது அவருக்கே ஆச்சர்யம்தான். ஆரம்பத்தில் நத்தம் விசுவநாதனின் ஆதரவாளர் இவர். அதனால்தான், பிரதமரின் மாதிரி கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டத்தில் நிலக்கோட்டையைத் தவிர்த்துவிட்டு, நத்தம் விசுவநாதன் தொகுதியில் இருந்த ராகலாபுரம் கிராமத்தைத் தத்தெடுத்தார். நத்தம் விசுவநாதன் ஓரம்கட்டப்பட்டவுடன், காட்சிகள் மாறின. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அணிக்குத் தாவினார் உதயகுமார். முதலில் தினகரன் அணியில் இருந்தவர், பிறகு எடப்பாடி அணிக்கு இடம்பெயர்ந்தார்.

பூட்டுக்குப் பெயர்பெற்ற திண்டுக்கல், இப்போது பிரியாணியின் அடையாளமாக மாறியிருக்கிறது. நாடு முழுவதும் கிடைக்கக் கூடிய அனைத்து வகையான பயிர்கள், காய்கறிகள், பழங்கள் விளையும் ஆச்சர்யமான விவசாயப் பகுதியும்கூட. இங்கு, தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் பஞ்சு மில்களும் நிரம்பியுள்ளன. ஆன்மிகத்துக்கு பழனி. சுற்றுலாவுக்கு கொடைக்கானல். பல மாநில வியாபாரிகள் வருகைக்கும் பஞ்சமில்லை. ஆனாலும், திண்டுக்கல் பெரிதாக வளர்ச்சிப் பெறவில்லை. தங்கள் தொகுதியின் எம்.பி யார் என்பதே பலருக்கும் தெரியவில்லை.

என்ன செய்தார் எம்.பி? - உதயகுமார் (திண்டுக்கல்)

உதயகுமாரை எதிர்த்துப் போட்டி யிட்டவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாண்டி. அவரிடம் பேசினோம். ‘‘தோல் பதனிடும் தொழில் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.தோல் தொழிற்சாலை கழிவுநீரைச் சுத்திகரிக்கும் அமைப்புக்கான மின்சாரத்துக்கு அதிக அளவில் கட்டணம் செலுத்த முடியவில்லை. இங்கே பதனிடும் தோல்களை ஆம்பூருக்கு அனுப்பித்தான் ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது. இதனால் செலவு அதிகம். அதற்கான கட்டமைப்பை இங்கே ஏற்படுத்த வேண்டும்; தடையில்லா வர்த்தகத்துக்கும் அனுமதி வேண்டும் என்பது ஆலை தரப்பினரின் கோரிக்கை. அதைப் பற்றி எம்.பி-க்கு அக்கறை இல்லை. பஞ்சாலைகளுக்கும் இதே நிலைதான். மின்வெட்டு நேரத்தில் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுவதால் கூடுதல் செலவாகிறது. அதனால், பெரிய நிறுவனங்கள் மட்டும் ஆலைகளை இயக்கி வருகின்றன. பஞ்சு மில்களுக்கு மத்திய அரசு வழங்கும் சலுகைகள் அநேகம். அதைப் பெற்றுத்தர எம்.பி முயற்சி செய்யவில்லை. திண்டுக்கல்லின் அடையாளமாக இருந்த பூட்டுத் தொழிலும் நசிந்துவிட்டது. அந்தத் தொழிலை  முன்னெடுக்க எம்.பி எந்த உதவியும் செய்யவில்லை. எனவே, பூட்டுத் தொழில் செய்த பல நிறுவனங்களில் பெரிய பூட்டுகள் தொங்குகின்றன.

பழனி முருகன் கோயிலில் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான முடியை, வெளியூருக்கு வாங்கிச்சென்று ‘விக்’ தயாரிக்கிறார்கள். விக் தொழிற்சாலையை பழனியில் தொடங்கினால், கோயில் நிர்வாகத்துக்குக் கூடுதல் லாபம் கிடைப்பதுடன் பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். மாவட்டத்தில் பல இடங்களில் தண்ணீர் பிரச்னை உள்ளது. மழைநீரைச் சேமித்துவைக்க நிறையத் தடுப்பணைகள் தேவை. திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டும் பின்தங்கிய நகராட்சியைப்போலவே இருக்கிறது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திண்டுக்கல் இடம்பெறுவதற்கு எம்.பி முயற்சி எடுக்கவில்லை. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. உலகப் புகழ்பெற்ற சின்னாளப்பட்டி சேலைகளை நெய்யும் நெசவாளர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. பெரிய பூ மார்க்கெட் அமைந்துள்ள நிலக்கோட்டையில் சென்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். முருங்கைக் காய் அதிகம் விளைவதால், முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும். கொடைக்கானல் மலையில் விளையும் பூண்டை சந்தைப்படுத்த பூண்டு மார்க்கெட் தொடங்க வேண்டும் என இப்படி நீண்டகாலக் கோரிக்கைகள் எதுவுமே நிறைவேற்றப் படவில்லை. சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான நோயாளிகள் திண்டுக்கல் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு வருகிறார்கள். அங்கு, தலைக்காய சிகிச்சைக்கு தனிப்பிரிவு இல்லை. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் செயல்படவில்லை. நவீன சிகிச்சை வசதிகள்  இல்லை. போதிய மருத்துவர்கள் இல்லை. இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு, எம்.பி ஆர்வம் காட்டவில்லை’’ என்றார்.

ரயில் பயணிகள் நலச் சங்கத்தைச் சேர்ந்த கண்ணன், ‘‘தென்மாவட்டங்களை, மேற்கு மாவட்டங்களுடன் இணைக்கும் வகையில் திண்டுக்கல் ஜங்ஷன் உள்ளது. பழனி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. எனவே, தினமும் ஆயிரகணக்கானோர் திண்டுக்கல் ஜங்ஷன் வழியே வந்து செல்கின்றனர். ஆனால், திண்டுக்கல் வழியே போதிய எண்ணிக்கையிலான ரயில்கள் இயக்கப்படவில்லை. தென் மாவட்டங்களிலிருந்து வருகிற ரயில்கள் இங்கு நின்று செல்கின்றனவே தவிர, திண்டுக்கல்லிலிருந்து கிளம்பும் வகையில் எந்த நகருக்கும் விரைவு ரயில்கள் இல்லை. திண்டுக்கல்லில் இருந்து பயணிகளுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்கும் வகையில்  முக்கிய ரயில்களில், இரண்டு முன்பதிவில்லா பெட்டிகளை இணைக்கச் சொல்லிப் பலமுறை கோரிக்கை வைத்தோம். அது நிறைவேற்றப்படவில்லை. திண்டுக்கல்-சபரிமலை ரயில்பாதைத் திட்டம் முடங்கிக்கிடக்கிறது. மீட்டர் கேஜ் ஆக இருந்தபோது திண்டுக்கல் வழியாக ஓடிய பல ரயில்கள் இப்போது இல்லை. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உள்ள தகவல் மையத்தால் எந்தப் பயனும் இல்லை. ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகள் சேமித்து வைக்கப்படுவதில்லை. ரயில் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக எம்.பி எந்த முயற்சியும் எடுக்கவில்லை”  என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் திண்டுக்கல் மண்டலத் தலைவர் கிருபாகரன், ‘‘ஜி.எஸ்.டி உட்படப் பல்வேறு நெருக்கடிகளால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருள்கள் என மொத்த வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் பேசி இந்தப் பிரச்னைகளுக்கு எம்.பி தீர்வுபெற்றுத்தரலாம். ஆனால், நாங்களாகத்தான் எங்கள் பிரச்னைக்காகப் போராடிவருகிறோம்’’ என்றார்.

பிரதமரின் மாதிரி கிராமங்களைத் தத்தெடுக்கும் திட்டத்தில், நத்தம் தொகுதியில் இருந்த ராகலாபுரம், பிள்ளையார் நத்தம், நீலமலைக்கோட்டை கிராமங்களை உதயகுமார் தத்தெடுத்துள்ளார். இந்தக் கிராமங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.

எம்.பி உதயகுமாரிடம் பேசினோம். ‘‘முடிந்தவரை பல திட்டங்களை கொண்டுவந்துள்ளேன். சபரிமலை ரயில் பாதை ஆய்வுப்பணிக்கு 30 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். ரயில்வே அமைச்சரை தேனி எம்.பி-யுடன் சென்று பார்த்து, திண்டுக்கல் - காரைக்குடிக்கு புதிய ரயில் திட்டம் கொண்டுவரக் கோரிக்கை வைத்தோம். அதன் ஆய்வுக்காகவும் ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் ரிங் ரோடு அமைக்க வலியுறுத்தியுள்ளேன். ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் திண்டுக்கல் நிராகரிக்கப்படவில்லை. அடிப்படையான விஷயங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதையும் சரிசெய்து மீண்டும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியிருக்கிறோம். 

திண்டுக்கல்லில் நடைமேடை, லிஃப்ட், வைஃபை வசதி ஆகியவற்றை நான்தான் செய்துகொடுத்தேன். கொடை ரோட்டில் பகல் நேர விரைவு ரயில்கள் நின்றுசெல்வதில்லை. அதற்காக உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்தேன். விரைவில் ரயில் நின்று செல்லும். திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரை நான்கு வழிச்சாலைக்காக இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் வெளியிட உள்ளனர். சிறுமலையில் சுற்றுலாவை மேம்படுத்த மத்தியச் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துவருகிறது. தேங்காய், மாங்காய், புளி போன்றவற்றுக்கு வேம்பார்பட்டி, கோபால்பட்டி, ஒட்டன்சத்திரம் இவற்றில் ஓர் ஊரில் மத்திய அரசு உதவியுடன் மின்னணு மண்டி அமைக்கப்பட உள்ளது. இதனால் உற்பத்தியாளர்களும் வியாபாரிகளும் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்துகொள்வார்கள்.

உதான் திட்டத்தில் பழனி - கொடைக்கானல், மதுரை - ராமேஸ்வரம் பகுதிகளை இணைத்து ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட உள்ளது.  கொடைக்கானல் பூம்பாறைப் பகுதியில் சாலைப் போட்டுள்ளோம். பெரும்பள்ளம் - பழப்பத்தூர் வரை 10 கோடி ரூபாய் செலவில் சாலை அமைத்துள்ளோம். சபரி மலைக்கு செல்வதற்காக பழனி முதல் இடுக்கி வழியாக 341 கி.மீ தூரத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என நானும், இடுக்கி எம்.பி-யும் சேர்ந்து சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து வலியுறுத்தினோம். நிலக்கோட்டை, சின்னாளப்பட்டியில் உள்ள நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் முத்ரா கடன் வாங்கிக்கொடுத்துள்ளேன். தத்தெடுத்தக் கிராமங்களுக்கு முடிந்தவரை செய்திருக்கிறேன். ராகலாபுரம் பள்ளிகளுக்கு பொருள்கள் வாங்கித் தந்திருக்கிறோம். பிள்ளையார் நத்தம், நீலமலைகோட்டை கிராம வளர்ச்சிக்கு 20 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறேன். பாஸ்போர்ட் அலுவலகத்தை ரூரல் பகுதியான கொடைரோட்டில் கொண்டுவந்திருக்கிறேன். முடிந்தவரை மக்களை நேரில் சந்தித்துவருகிறேன். மருத்துவ சிகிச்சைகளுக்காக பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 100-க்கும் அதிகமானவர்களுக்கு நிதி பெற்றுக்கொடுத்துள்ளேன்’’ என்றார்.

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- செ.சல்மான், ஆர்.குமரேசன்
ஓவியம்: ஹாசிப்கான்

என்ன செய்தார் எம்.பி? - உதயகுமார் (திண்டுக்கல்)
என்ன செய்தார் எம்.பி? - உதயகுமார் (திண்டுக்கல்)
என்ன செய்தார் எம்.பி? - உதயகுமார் (திண்டுக்கல்)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

எம்
.பி அலுவலகத்தை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ‘‘எம்.பி ஆபீஸ் பாண்டியன் நகரில் இருக்கு...’’ என அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் சொல்ல அங்கே போனோம். ‘‘மொதல்ல இங்கதான் இருந்துச்சு. காலிப் பண்ணிட்டுப் போயிட்டாங்க’’ என்றார்கள் அந்தப் பகுதியினர். அங்கு வந்த அ.தி.மு.க பிரமுகரிடம் விசாரித்தோம். தலையைச் சொறிந்தவர், ‘‘தெரியலையே. அவரு பி.ஏ நம்பர் தர்றேன். விசாரிச்சுக்கோங்க’’ என்று தந்தார். அந்த எண்ணுக்கு அழைத்தோம். எதிர்முனையில் இருந்தவரிடம், ‘‘ஒரு மனு கொடுக்க வேண்டும். அலுவலகம் எங்கேயிருக்கிறது?’’ என்றோம். ‘‘பழைய கோர்ட்டுக்கு பக்கத்தில் ரோமன் மிஷன் சந்துல இருக்கு. இப்ப ஆள் இருக்க மாட்டாங்க... நாளைக்கு காலையில வாங்க’’ என்றார் அவர். காலையில் சென்றோம். எம்.பி ஆவதற்கு முன்பு வழக்கறிஞர் தொழிலுக்காக வைத்திருந்த பத்துக்கு பத்து அலுவலகம்தான் எம்.பி ஆபீஸ். ஒரு சின்ன போர்டு மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் என்பதை நினைவுபடுத்தியது. உதவியாளர் ஒருவர் அலுவலகத்தில் இருந்தார்.

என்ன செய்தார் எம்.பி? - உதயகுமார் (திண்டுக்கல்)
என்ன செய்தார் எம்.பி? - உதயகுமார் (திண்டுக்கல்)