Published:Updated:

மிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்!

மிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்!
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்!

மிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்!

“பொங்கலோ... பொங்கல்” என்று உள்ளே நுழைந்தார் கழுகார்.

“தீபாவளி பலகாரங்களே தீரவில்லை. அதற்குள் என்ன பொங்கல்?!’’

“எல்லாம் காரணமாகத்தான். இந்த வருடப் பொங்கல், தமிழக அரசியல்வாதிகளுக்கு சவாலாகக்கூட மாறலாம். வடமாவட்டத்தைச் சேர்ந்த அந்த அமைச்சர் தனது வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘நாடாளுமன்றத் தேர்தலோடுதானே இடைத்தேர்தல் வரும் என்று பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் பார்த்து அசட்டையாக இருந்துவிட வேண்டாம். பொங்கலுக்கு முன்பாகவே தேர்தல் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’ என்றுச் சொல்லியிருக்கிறார். ‘சட்டம் தெரிந்தவர் சொல்லும்போது, சரியாகத்தான் இருக்கும்’ என்றபடி தொகுதிகளில் சீக்ரெட் திட்டங்களைச் செயல்படுத்த ஆளும் தரப்பு தயாராகிவிட்டதாம்.’’

மிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்!

“பதவி இழந்த 18 எம்.எல்.ஏ-க்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால் தேர்தல் தள்ளிப்போகுமே?’’

“மேல்முறையீடு செய்தால், இன்னும் ஓர் ஆண்டு காலத்துக்கு தேர்தலுக்கு வாய்ப்பில்லை. தொகுதி மக்களுக்கு நம்மீது வருத்தம் அதிகரித்துவிடும்; சூட்டோடு சூடாக தேர்தலைச் சந்தித்தால் கணிசமான அளவில் வெற்றியும் பெறலாம் என்று தினகரனிடம் சொன்னதே அந்த 18 பேர்தான். அதனால்தான், ‘மேல்முறையீடு இல்லை’ என்றார் தினகரன். இன்னொருபக்கம், ‘நூறு சதவிகிதம் அவர் அதில் உறுதியாக இல்லை’ என்றும் ஒரு செய்தி அலையடிக்கிறது. ‘எதற்கும் மேல்முறையீடு செய்துவைப்போம்’ என்று அவரது வழக்கறிஞர் குழு சொன்னதுதான் அவரை யோசிக்க வைத்திருக்கிறது. இப்படி உறுதியாக முடிவுசெய்ய முடியாமல்தான் சசிகலாவைச் சந்திக்கத் தீர்மானித்தாராம்.’’

“தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களும் போயிருக்கிறார்களே?’’

“அது அவர்களின் நீண்டநாள் கோரிக்கை. ‘நேரம் கனியட்டும்’ என்று தள்ளிப்போட்டு வந்தாராம் தினகரன். தற்போது தேர்தலில் போட்டியிடுவது குறித்த குழப்பமான சூழலில் அவர்களையும் சந்திக்க வைத்தால், அவர்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும் என்று நினைக்கிறார் தினகரன். சிறையில் ஒரேநேரத்தில் பத்து பேர் மட்டுமே சந்திக்க முடியும் என்பதால் செந்தில் பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட ஒன்பது பேருடன் பெங்களூரு சென்றார் தினகரன். பதினைந்து நாள்கள் கழித்து மீதியுள்ளவர்களையும் அழைத்துச்செல்வாராம். நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும் சசிகலாவிடம் பேசுவார்களாம்.’’

“ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களின் தலையில் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறதே... அதன் நிலவரம் என்னவோ?’’

“முதலமைச்சருக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்ததற்கே 18 பேரைத் தகுதிநீக்கம் செய்த சபாநாயகர், இந்த 11 பேர் அரசுக்கு எதிராக வாக்கு அளித்தபோதும் தகுதிநீக்கம் செய்யவில்லை. அந்த 11 எம்.எல்.ஏ-க்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற தி.மு.க-வின் வழக்கு நவம்பர் இரண்டாவது வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. தீர்ப்பும் விரைவிலேயே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்!

“ஏற்கெனவே 18 எம்.எல்.ஏ-க்கள் பதவி பறிபோய்விட்டது. நீதிமன்றத் தீர்ப்பில் 11 பேரின் பதவிக்கு பங்கம் வந்தால் ஆட்சிக்கு ஆபத்துதானே.’’

“இதனால் சட்டசபையில் அ.தி.மு.க-வின் பலம் 104-ஆக குறையலாம். இதிலும் ஏற்கெனவே மூன்றுபேர் தினகரன் பக்கம் இருக்கின்றனர். கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி மூவரும் தனி ஆவர்த்தனம் செய்கின்றனர். இந்த ஆறுபேரையும் கழித்தால் அ.தி.மு.க-வின் பலம் 98 என்று ஆகிவிடும். தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தினகரனைச் சேர்த்தால் இதுவும் 98 ஆகிவிடும். அப்போது பெரும்பான்மையைக் காட்டுவதில் அ.தி.மு.க-வுக்கு சிக்கல் வரலாம்.’’

“கணக்கு பலமாக இருக்கிறதே?’’

“ஆனால், அ.தி.மு.க-வினரின் கணக்கு வேறு மாதிரி இருக்கிறது. குட்கா ஊழல் தொடர்பாக சட்டசபை விவாதத்தின்போது எழுந்த மோதலில் தி.மு.க-வின் 21 எம்.எல்.ஏக்களுக்கு ‘செக்’ வைத்தார் சபாநாயகர் தனபால். இதன் மீதான இறுதி விசாரணையை முடித்துவிட்டார் சட்டவிதி மீறல் குழுவின் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன். இதன் ரிப்போர்ட் தற்போது சபாநாயகர் தனபால் கையில். ஆனால், இதை உயர் நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றுவிட்டது தி.மு.க. ‘சபாநாயகரின் முடிவே சரி’ என்று தீர்ப்பு வந்தால் ஆட்சிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஒருவேளை தீர்ப்பு தள்ளிப்போனால் என்ன செய்யலாம் என்றும் யோசனை ஓடுகிறது. சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அந்த 21 பேருக்கும் சட்டப்படி தடை விதிக்க முடியுமா என்று தனி ஆலோசனை நடக்கிறது.’’

“சபாஷ், சரியான போட்டி!’’

“தி.மு.க-வில் சிலவாரங்களுக்கு முன்பு நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது பொறுப்புகள் தற்போது மாற்றப்பட்டுள்ளன. ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ., ஒரு மாநில பொறுப்பாளர் என இருவர் நியமிக்கப்பட்டனர். இதில் தொகுதியின் எம்.எல்.ஏ-க்களில் சிலர், வேறு தொகுதியின் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படவே, அந்த மாவட்ட நிர்வாகிகள் இதை புகாராக மேலிடத்தில் புலம்பியுள்ளார்கள். இதுதான் மாற்றத்துக்கான பின்னணி.’’ 

மிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்!

“மு.க.ஸ்டாலினை, சந்திரபாபு நாயுடு விரைவில் சந்திக்கவிருக்கிறாரமே?’’

“தீபாவளி முடிந்ததும் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டாலின் தொடர் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அது தள்ளிப்போயுள்ளது. இந்த மாத மத்தியில் சந்திப்பு நடைபெறலாம். இதற்கு முன்னதாக சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துவிட்டார் திருமாவளவன்.’’

“அட!’’

“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், டிசம்பர் 10-ம் தேதி ‘தேசம் காப்போம்’ மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இடதுசாரி கட்சித் தலைவர்கள், பி.ஜே.பி-க்கு எதிரான தலைவர்கள் பலரையும் இந்த மாநாட்டுக்கு அழைக்கிறார்கள். அதற்காகதான் இந்தச் சந்திப்பு. இதில் பி.ஜே.பி-க்கு எதிரான கூட்டணி குறித்தும், பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தப் பிறகு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும் விரிவாகவே நாயுடுவிடம் விளக்கினாராம் திருமாவளவன். ‘தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் வலுவானக் கூட்டணி அமையும்’ என்று திருமா சொல்ல, ‘நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன்’ என்று சொன்னாராம் நாயுடு. அடுத்து, கர்நாடக முதல்வர் குமாராசாமியையும் சந்திக்க உள்ளார் திருமா.’’

“மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் கடுமையாக மோதிக்கொள்கின்றனவே?’’

“இது புதிதல்ல. ஆனால், இந்தமுறை அதற்கான காரணங்கள்தான் வித்தியாசமானவை. திவால் நிறுவனங்களின் கடன் பாக்கியை வசூலிப்பதில் உறுதியாக இருக்கிறது ரிசர்வ் வங்கி. ‘குறைந்தபட்சம், மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று மத்திய அரசின் கோரிக்கையையும் ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை. இருதரப்புக்கும் மோதல் தீர்வுக்கு வருவதாகத் தெரியவில்லை.”

“ஆக சீக்கிரமே ரிசர்வ் வங்கிக்கு புதிய கவர்னர் வரக்கூடும்... அப்படித்தானே!’’

“நடக்கலாம்... அப்படி நடந்தால் மத்திய பொருளாதார விவகாரத் துறைச் செயலாளராக இருந்த சக்திகந்த தாஸ், அடுத்த கவர்னராக நியமிக்கப்படலாம்!’’ என்ற கழுகார் மின்னல் வேகத்தில் பறந்தார்.

குட்டு வெளியாகும் எட்டுவழிச்சாலை

ட்டு வழிச்சாலை சர்ச்சை தற்காலிகமாக ஒய்ந்துள்ள நிலையில், புதிய தகவல் ஒன்று அதுகுறித்து வெளியாகியுள்ளது. ஜிண்டால் நிறுவனம் கனிம வளங்களைக் கொண்டுசெல்லவே அந்த சாலை போடப்படுவதாக ஆரம்பத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், உண்மையில் அங்குள்ள கனிமவளங்களை அள்ளுவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த கனிமவளப் புள்ளி ஒருவர் விரும்பியுள்ளார். சேலத்தைச் சேர்ந்த அந்த கனிமவளப் பிரமுகர், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்புக்கும் நெருக்கமானவர். அந்த நபரின் விமானத்தில்தான் எதிர்கட்சியின் முக்கியப் பிரமுகரே சமீபத்தில் பயணம் செய்தார். அந்த நபரின் ஆசைதான் எட்டுவழிச் சாலையாம். ஜிண்டால் பெயரில் அந்த முக்கிய நபரே களத்தில் இறங்க இருக்கிறாராம். இப்போது மீண்டும் எட்டுவழிச் சாலை வேண்டும் என்று அடம்பிடிப்பதால், எப்படி எட்டு வழியைக் கொண்டுவருவது என ஆளும் தரப்பு யோசித்துவருகிறது என்கிறார்கள்.