Published:Updated:

பெங்களூருவில் சிக்கிய ரெட்டி பிரதர்ஸ்... காங்கிரஸ் - ம.ஜ.த வெற்றி ரகசியம்!

பெங்களூருவில் சிக்கிய ரெட்டி பிரதர்ஸ்... காங்கிரஸ் - ம.ஜ.த வெற்றி ரகசியம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பெங்களூருவில் சிக்கிய ரெட்டி பிரதர்ஸ்... காங்கிரஸ் - ம.ஜ.த வெற்றி ரகசியம்!

பெங்களூருவில் சிக்கிய ரெட்டி பிரதர்ஸ்... காங்கிரஸ் - ம.ஜ.த வெற்றி ரகசியம்!

ர்நாடக மாநிலத்தில் நடந்துமுடிந்த மூன்று மக்களவைத் தொகுதிகள் மற்றும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஷிமோகா மக்களவைத் தொகுதியைத் தவிர மற்ற அனைத்திலும் வெற்றி பெற்று பி.ஜே.பி-க்கு பயத்தைக் காட்டியிருக்கிறது காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி!

கர்நாடகத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டதால், பி.ஜே.பி-யின் மக்களவை எம்.பி-க்களான எடியூரப்பா (ஷிமோகா), ஸ்ரீராமுலு (பெல்லாரி), ம.ஜ.த-வின் எம்.பி-யான சி.எஸ்.புட்டராஜூ (மாண்டியா) ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தார்கள். இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் குமாரசாமி, ராம்நகர் தொகுதியில் ராஜினாமா செய்தார். ஜமகண்டி தொகுதி எம்.எல்.ஏ-வான சித்து நியம்கவுட், சாலை விபத்தில் உயிரிழந்தார். மேற்கண்ட மூன்று மக்களவைத் தொகுதிகள் மற்றும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த நவம்பர் 3-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில்தான் ஷிமோகா மக்களவைத் தொகுதியைத் தவிர மற்ற அனைத்திலுமே பி.ஜே.பி தோல்வியைச் சந்தித்துள்ளது. சரி, காங்கிரஸ் வென்றது எப்படி? பி.ஜே.பி சறுக்கியது எப்படி? சுருக்கமாகப் பார்ப்போம்.

பெங்களூருவில் சிக்கிய ரெட்டி பிரதர்ஸ்... காங்கிரஸ் - ம.ஜ.த வெற்றி ரகசியம்!

பெல்லாரி மற்றும் ஷிமோகா மக்களவைத் தொகுதிகளை பி.ஜே.பி-யின் கோட்டை என்பார்கள். அந்த நம்பிக்கையிலேயே அங்கு முறையே ஸ்ரீராமுலு, எடியூரப்பா இருவரையும் ராஜினாமா செய்ய கட்சித் தலைமை அனுமதித்தது.  ஆனால், பெல்லாரியில் உள்ளூர் நிலவரம் வேறுமாதிரியாக இருந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பண மதிப்பு நீக்கம், ‘வங்கிக் கணக்கில் 15 லட்சம்’ என்ற வாக்குறுதியை நிறைவேற்றாதது ஆகியவற்றை பிரசாரத்தில் திரும்பத் திரும்ப சொல்லி பி.ஜே.பி-க்கு பின்னடைவை ஏற்படுத்தியது காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி. மேலும், தங்கள் ஆட்சியைக் கவிழ்க்க பி.ஜே.பி சதி செய்கிறது என்று சொல்லியும் அனுதாப ஓட்டுகளை அள்ளியது அந்தக் கூட்டணி. மேலும்,  பெல்லாரியில் ரெட்டி சகோதரர்களின் பின்னடைவும் பி.ஜே.பி-யின் தோல்விக்குக் காரணமாகியிருக்கிறது.

பெல்லாரி மக்களவைத் தொகுதியின் வெற்றி, தோல்விகளை எப்போதும் முடிவுசெய்வது ரெட்டி சகோதரர்களே. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று பி.ஜே.பி ஆட்சி அமைத்தால் தங்களின் நண்பரான ஸ்ரீராமுலுவை அமைச்சராக்க வேண்டும் என்பது அவர்களின் கனவு. அதனாலேயே ரெட்டி சகோதரர்கள் ஸ்ரீராமுலுவை ராஜினாமா செய்யவைத்து சித்ரதுர்கா மாவட்டம், மொல்கால்மூரு சட்டமன்றத் தொகுதியில் நிறுத்தி, வெற்றி பெற வைத்தார்கள். ஆனால், பி.ஜே.பி-யால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த நிலையில்தான், பெல்லாரி மக்களவை இடைத் தேர்தலில் ஸ்ரீராமுலுவின் தங்கை சாந்தா பி.ஜே.பி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். காங்கிரஸ் தரப்பில் வி.எஸ்.உக்ரப்பா களமிறக்கப்பட்டார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பெங்களூருவில் சிக்கிய ரெட்டி பிரதர்ஸ்... காங்கிரஸ் - ம.ஜ.த வெற்றி ரகசியம்!

காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிகளை டி.கே. சிவக்குமார் பார்த்துக்கொண்டார். ஆனால், இவருக்குப் போட்டியாகத் தேர்தல் பணிகளைப் பார்க்க வேண்டிய ரெட்டி சகோதரர்களோ பெங்களூருவில் சிக்கிக் கொண்டார்கள். சுரங்க ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, பெங்களூரு நகரத்தில் தங்கியிருந்த அவர்கள், ‘பெல்லாரி இடைத்தேர்தலில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்’ என்று நீதிமன்றக் கதவைத் தட்டியும், நீதிமன்றம் அனுமதி மறுத்துவிட்டது. இந்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் சிவக்குமார். 20 ஆண்டுகளாக பி.ஜே.பி-யின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த பெல்லாரியில் பி.ஜே.பி-யின் சாந்தாவை 2.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கச்செய்து காங்கிரஸுக்குப் பெரும் வெற்றியைத் தேடித் தந்தார்.

ஷிமோகா மக்களவைத் தொகுதியில் எடியூரப்பாவின் மகன் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், வாக்கு  சதவிகிதத்தில் பெரும் சேதத்தை அங்கே சந்தித்திருக்கிறது பி.ஜே.பி. 2014 மக்களவைத் தேர்தலில் அங்கு 3.63 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் பி.ஜே.பி-யின் எடியூரப்பா. இந்த முறை எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா இங்கு 52,148 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மாண்டியா மக்களவைத் தொகுதி காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணிக்குச் சாதகமான தொகுதி. அங்கு எதிர்பார்த்தது போலவே ம.ஜ.த-வின் ஷிவராம கவுடா, பி.ஜே.பி-யின் சித்தராமையாவைக் காட்டிலும் 3.25 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பெங்களூருவில் சிக்கிய ரெட்டி பிரதர்ஸ்... காங்கிரஸ் - ம.ஜ.த வெற்றி ரகசியம்!

ராம் நகர், ஜமகண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி தங்கள் தொகுதிகளைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. ராம் நகரில் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி 1,09,137 வாக்குகளும், ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆனந்த் நியம கவுடா 39,480 வாக்குகளும் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்கள்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், கர்நாடகாவில் பி.ஜே.பி-க்கு ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது!

- எம்.வடிவேல்