Published:Updated:

``நான் அப்படிச் சொல்லவே இல்லை!’’ - வாட்ஸ்அப் வதந்திக்கு கடம்பூர் ராஜு பதில்

``நான் அப்படிச் சொல்லவே இல்லை!’’ - வாட்ஸ்அப் வதந்திக்கு கடம்பூர் ராஜு பதில்
``நான் அப்படிச் சொல்லவே இல்லை!’’ - வாட்ஸ்அப் வதந்திக்கு கடம்பூர் ராஜு பதில்

கோவில்பட்டி தொலைக்காட்சி செய்தியாளர்கள் அரசு நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிக்க அமைச்சர் கடம்பூர் ராஜு தடை விதித்துள்ளார் எனவும், அமைச்சர் தரப்புக்கு எதிராக செய்தி வெளியிடமாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே செய்தி சேகரிக்க வர வேண்டும் எனவும் வாட்ஸ் அப்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் தொகுதியும் அடக்கம். இந்தத் தொகுதிகளில் விளாத்திகுளம் தொகுதியைப் பொறுத்தவரையில் சீட் பெறுவதற்காக, இத்தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மார்கண்டேயனும் சின்னப்பனும் முட்டி மோதி வருகிறார்கள். இதில் மார்கண்டேயன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதனின் ஆதரவாளர். சின்னப்பன் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் அணியைச் சேர்ந்தவர்.

``மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும் மணல் கொள்ளையர்களுக்கும் சீட் கிடையாது” என மீடியாக்களில் மார்கண்டேயனைக் குறிவைத்து மறைமுகமாக அமைச்சர் கடம்பூர் ராஜு பேசினார். ``சின்னம்மாவின் ஸ்லீப்பர் செல்தான் அமைச்சர் கடம்பூர் ராஜு. அ.தி.மு.க-விலிருந்து டி.டி.வி அணிக்கு எம்.எல்.ஏ-க்களை அனுப்பி வைப்பதும் அவர்தான்” எனப் பதில் பாய்ச்சல் பாய்ந்தார். கடந்த நவம்பர் மாதம் விளாத்திகுளத்தில் அ.தி.மு.க-வின் ஆண்டுவிழா நிகழ்ச்சியை ஒரே நாளில் சண்முகநாதனை அழைத்து மார்கண்டேயனும் அமைச்சர் தரப்பை அழைத்து சின்னப்பனும் தங்கள் பலத்தைக் காட்டும் விதமாக நடத்தினார்கள். இதனால், தொண்டர்களுக்கு குழப்பமே ஏற்பட்டுவிட்டது. ஆனால், தீபாவளிப் பரிசுப் பொருளைக் கொடுத்து விருந்து வைத்திருந்ததால் கூட்டம் கூடியதோ மார்கண்டேயன் நிகழ்ச்சியில்தான்.

தொடர்ந்து, இந்த இரண்டு தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினர் தூத்துக்குடிக்கு வந்தபோதுகூட அமைச்சர் தரப்பு, சண்முகநாதன் தரப்பு அளிக்கப்பட்ட தனித்தனியான வரவேற்பைக் கண்டு அதிர்ச்சி அடைந்து எச்சரித்துச் சென்றது. இதைத் தொடர்ந்து, மார்கண்டேயனுக்கு மாநிலச் செய்தித் தொடர்பாளர் பதவியைப் பெற்றுத்தந்தார் சண்முகநாதன். அதற்கு அடுத்தநாளே, சின்னப்பனுக்கு மாநிலக் கலை இலக்கிய அணி இணைச் செயலாளர் பதவியைப் பெற்றுத்தந்தார் அமைச்சர் கடம்பூர் ராஜு. இரண்டு தரப்பினரும் வரிந்துகட்டிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், கடந்த சில நாள்களுக்கு முன்பு விளாத்திகுளத்தில் புதூர் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், முதலில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச முற்பட்டபோது, ``மார்கண்டேயன்தான் பேச வேண்டும்” என ஒரு தரப்பு சொல்ல இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

இதுகுறித்த வீடியோ காட்சியை அனைத்து தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பின. மறுநாள் செய்தித்தாள்களிலும் இச்சம்பவம் பட்டும்படாமலும் வெளிடப்பட்டிருந்தன. விளாத்திகுளம் பகுதியில் செய்தி சேகரிக்கச் செல்பவர்களில் 95 சதவிகிதம் பேர் கோவில்பட்டி தாலுகாவைச் சேர்ந்த செய்தியாளர்கள்தான். அமைச்சரின் கைகலப்புச் செய்தி வெளியிடப்பட்டதால் சில செய்தியாளர்களுக்கு அமைச்சர் தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பின.

இந்த நிலையில், ``கோவில்பட்டி பகுதியில் நடைபெறும் அரசு மற்றும் அ.தி.மு.க கட்சி நிகழ்ச்சிகளுக்கு செய்தி சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று கோவில்பட்டியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க மோதல் செய்தி வெளியிட்ட தினசரி நாளிதழ் செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கபடவில்லை எனவும், வழக்கமாகத் தகவல் சொல்லும் பி.ஆர்.ஓ-வும் தகவல் சொல்லவில்லை எனவும், அமைச்சர் தரப்புக்கு எதிராக செய்தி வெளியிட மாட்டோம் என உறுதி அளித்தால் மட்டுமே செய்தி சேகரிக்க வர வேண்டும் எனவும், இதைப் பின்பற்றினால்தான் அமைச்சர் தரப்பில் தினசரிகளுக்கு விளம்பரம் தரப்படும்” என்று வாட்ஸ்அப்களில் இப்படி ஒரு புகார் வைரலாகப் பரவி வருகிறது.  

இந்நிலையில், தூத்துக்குடியில் நடைபெற்ற நெகிழிக்கு மாற்று பொருள்கள் குறித்த கண்காட்சியைத் தொடங்கி வைக்க வருகை தந்த அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் இது குறித்து கேட்டபோது, பதிலளித்துப் பேசிய அவர், “ஒரு கட்சிக்கூட்டத்தில் ஐந்து நிமிடம் நடைபெற்ற சலசலப்பு செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகிறது. ஆனால், அதன் பிறகு 50 நிமிடம் அமைதியாக நடைபெற்ற கூட்டம் குறித்த செய்திகளை வெளியிடவில்லை. ஊடகம் என்றால் அனைத்தையும் வெளியிடுவதுதான் முறை. இதனால், சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனங்களைத் தொடர்புகொண்டு வருத்தம் தெரிவித்தேன். மற்றபடி, எனக்கு எதிராகச் செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை அரசு நிகழ்ச்சிகளுக்கோ கட்சி நிகழ்ச்சிகளுக்கோ அழைக்கக் கூடாது என நான் சொல்லவில்லை. வாட்ஸ் அப்களில் வதந்தியாகப் பரப்பப்பட்டு வருகிறது” எனக் கூறிவிட்டுக் கிளம்பினார்.