Published:Updated:

`சஞ்சய்க்கு வேலை கொடுங்க!’ - மோடி கையெழுத்துடன் சிபாரிசு கடிதத்தை அனுப்பிய தில்லாலங்கடி இளைஞர்

`சஞ்சய்க்கு வேலை கொடுங்க!’ - மோடி கையெழுத்துடன் சிபாரிசு கடிதத்தை அனுப்பிய தில்லாலங்கடி இளைஞர்
`சஞ்சய்க்கு வேலை கொடுங்க!’ - மோடி கையெழுத்துடன் சிபாரிசு கடிதத்தை அனுப்பிய தில்லாலங்கடி இளைஞர்

போலியாகப் பிரதமர் மோடியின் கையொப்பத்தைப் பயன்படுத்தி அரசு வேலை பெற முயன்ற கர்நாடக இளைஞரைப் போலீஸ் கைது செய்துள்ளது.


 

கர்நாடகாவில் பெலகவி (Belagavi) பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் குமார். 30 வயதான சஞ்சய் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தட்டச்சு பயிற்சி முடித்துள்ளதால் பல ஆண்டுகளாக அரசு தேர்வுகளும் எழுதி வந்துள்ளார். அரசு தேர்வுகளில் தகுதி பெறாததால் விரக்தி அடைந்த சஞ்சய், கர்நாடகா உயர் நீதிமன்ற பதிவுத்துறை அலுவலகத்தில் வேலை வாங்க மாஸ்டர் பிளான் போடத் தொடங்கினார்.  

பலரிடம் சிபாரிசுக்காகக் கேட்டுப் பார்த்தார். ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, குறுக்கு வழியில் யோசிக்கத் தொடங்கினார். பெரிய இடத்தில் இருந்து சிபாரிசு கடிதம் வந்தால் தன்னை வேலைக்குச் சேர்த்து கொள்வார்கள் என நினைத்த சஞ்சய், பிரதமர் அலுவலகத்தில் அனுப்பப்பட்ட கடிதம் போன்று போலி கடிதத்தைத் தயார் செய்தார். இணையத்தில் இருந்து பிரதமரின் கையெழுத்தை டவுன்லோடு செய்து, அதே போன்று போலியான கையெழுத்தைப் போட்டார். ‘சஞ்சய் என்பவருக்கு டைபிஸ்ட் வேலை கொடுக்குமாறு பரிந்துரைக்கிறேன்’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரதமர் மோடியின் கையெழுத்தடங்கிய அந்தக் கடிதத்தைக் கர்நாடகா உயர் நீதிமன்ற பதிவுத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். உயர் நீதிமன்றம் துணை பதிவாளர் ராஜேஸ்வரி அந்தக் கடிதத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து பிரதமர் அலுவலகத்துக்கு ஃபார்வார்ட் செய்தார். பிரதமர் அலுவலகமோ இப்படியொரு சிபாரிசு கடிதத்தை நாங்கள் அனுப்பவில்லை எனப் பதில் அனுப்பியது. உடனே இந்த விவகாரம் காவல்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. காவல்துறை சஞ்சய்யை கைது செய்து விசாரித்து வருகிறது. 

பிரதமரின் கையெழுத்தைப் போட்டு அரசு வேலைப் பெற முயன்ற இளைஞர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.