Published:Updated:

“விவசாயிகளை ரோட்டில் இறங்க வைத்துவிடாதீர்கள்!” -எச்சரித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

“விவசாயிகளை ரோட்டில் இறங்க வைத்துவிடாதீர்கள்!” -எச்சரித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
“விவசாயிகளை ரோட்டில் இறங்க வைத்துவிடாதீர்கள்!” -எச்சரித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

“போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை இதுவரை எந்த ஆளும்கட்சி பிரமுகரும், மாவட்ட அதிகாரிகளும் சந்தித்து பேசவில்லை. இதனையெல்லாம் பார்க்கையில், அவர்கள் மனிதர்கள் தானா என்கின்ற சந்தேகம் எழுகிறது” என ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த டிசம்பர் 17 -ம் தேதி முதல் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 8 இடங்களில் இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், ஈரோடு மூலக்கரை பகுதியில் நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து ஆதரவளித்துப் பேசினார்கள்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், "விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என விவசாயிகள் பொறுமையாக அறவழியில் போராடி வருகின்றனர். ஆனால் அதற்குத் தமிழக அரசு தற்போது வரை வரை அசைந்து கொடுக்கவில்லை. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. போராடுபவர்கள் ரோட்டிற்கு வர மாட்டார்கள் என அவர்கள் நினைக்கிறார்கள். சாத்வீகமாகச் சொல்வதை காது கொடுத்து அவர்கள் கேட்கவில்லை என்றால், அரசுக்கு உரைக்கும் அளவிற்கு அடுத்த கட்ட போராட்டத்தில் விவசாயிகள் இறங்க நேரிடும்.

நடந்து முடிந்த 5 சட்டமன்றத் தேர்தல்களில் மூன்று இடங்களைக் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி இருக்கிறது. அந்த மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த 10 நாட்களில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு எங்களுடைய முதலமைச்சர்கள் பதவியேற்ற முதல் ஒரு மணி நேரத்திலேயே, அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்து கையெழுத்திட்டிருக்கின்றனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த தேர்தல் அறிக்கையில் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைப்பதைத் தவிர்த்து, கேபிள் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும் என்பதனை சேர்க்க இருக்கிறோம். உங்களுடைய போராட்டம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகள்" என்றார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசியச் செயலாளர் சஞ்சய் தத் பேசுகையில், ``மோடி அரசாங்கமானது விவசாயிகளுக்கு எதிராகவே செயல்படுகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அரசாங்கமும் மத்திய அரசின் ரிமோட் கண்ட்ரோல் ஆக செயல்படுகின்றனர். ஒரு பிரச்னையை முன்னிறுத்திப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தான் மத்திய அரசும், மாநில அரசும் நின்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியும் அதனுடைய கூட்டணிக் கட்சிகளும் என்றைக்கும் விவசாயிகளின் பக்கம் துணை நிற்கும். அரசினுடைய இந்த திட்டமானது விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் ஒரு முயற்சியாகத்தான் இருக்கிறது. நிச்சயமாக வருகின்ற காங்கிரஸ் ஆட்சியில் இதற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படுத்தித் தரப்படும். உண்மை உங்கள் பக்கம் இருக்கிறது. உங்களுடைய போராட்டம் நிச்சயமாக ஜெயிக்கும்" என்றார்.

விவசாயிகளுக்கு ஆதரவளித்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ``பிரதமர் மோடி பிரதமரானதில் இருந்து 41 முறை வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்று இருக்கிறார். அதில் கிட்டத்தட்ட 2,500 கோடி ரூபாய் அளவிற்குச் செலவாகி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் விவசாயிகள் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்குப் பதிலாக தரைவழியாக கேபிள் அமைத்துக் கொண்டு செல்ல வேண்டும் எனக் கோரிக்கை வைத்தால், அதிகமாகச் செலவாகும் எனச் சொல்லுகிறார்கள். நீங்கள் மட்டும் தேவையில்லாமல் செலவு செய்வீர்கள். இது என்ன நியாயம். கிட்டத்தட்ட  10 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகளை எந்த ஒரு அரசு அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும்  நேரில் சந்திக்காதது ஏனென்று புரியவில்லை. இதைப் பார்க்கையில் அவர்களெல்லாம் மனிதர்கள் தானா என்கிற கேள்வி எழுகிறது. விவசாயிகளுக்கு விவசாயக் கடனை ரத்து செய்வதால், அவர்களுக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என்று பலர் சொல்கின்றனர். விவசாயிகள் பெற்றுள்ள கடன் தான் அவர்களுக்கு பெரும் சுமையே. அந்தக் கடனை ரத்து செய்வது அவர்களை ஓரளவுக்கு நிம்மதி அடைய வைக்கும்" என்றார்.