Published:Updated:

ஆர்.டி.ஐ. மூலம் பேரறிவாளன் இனி என்ன செய்யலாம்? - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் பதில்!

ஆர்.டி.ஐ. மூலம் பேரறிவாளன் இனி என்ன செய்யலாம்? - சட்டப்  பஞ்சாயத்து  இயக்கம் பதில்!
ஆர்.டி.ஐ. மூலம் பேரறிவாளன் இனி என்ன செய்யலாம்? - சட்டப் பஞ்சாயத்து இயக்கம் பதில்!

"ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம்" என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதையடுத்து, கடந்த செப்டம்பர்  9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அதைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டு 4 மாதங்களான நிலையில், அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதிகாத்து வருகிறார் தமிழக ஆளுநர்.

இந்த நிலையில், சிறையில் உள்ள பேரறிவாளன், "தமிழக அரசு தீர்மானம் இயற்றி இருக்கும் நிலையில், தம்மை விடுவிப்பதில் தாமதம் ஏன்... அதற்கான காரணம் என்ன" என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ஆளுநர் மாளிகைக்கு மனு அனுப்பியுள்ளார். அதுவும் அந்த மனுவில், 'தமக்கு 48 மணி நேரத்தில் பதில் வேண்டும்' என்று கோரியுள்ளார். ஆனால், அந்த மனுவின்மீது இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் இல்லை. இதுகுறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமது ட்விட்டர் பக்கத்தில் அவரது வேதனையைப் பதிவுசெய்துள்ளார். அதில், "விடுதலைக் கோப்பில் கையெழுத்தாகவில்லை என்பதால், அவநம்பிக்கையில் சிக்கிச் சாகிறேன்" என்று கூறியுள்ளார். மேலும், "என் மகன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விடுதலை செய்வதற்கான காலதாமதம் ஏன் என்று கேட்டிருப்பதற்கு இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் இல்லை. 48 மணி நேரத்தில் கேட்கப்பட்ட மனுவுக்கு, 48 நாள் ஆகியும் பதில் இல்லை" என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். 

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரும் சட்டப் பஞ்சாயத்து  இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான செந்தில் ஆறுமுகத்திடம் பேசியபோது, "தலைமை தகவல் ஆணையர்கள் மற்றும் ஆணையர்களை ஆளுநர்தான் நியமிக்கிறார். அந்த வகையில் தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளில் ஆளுநர்தான் தொடக்கப்புள்ளியாக இருக்கிறார். அப்படி இருக்கிறபோது ஆளுநர் பேரறிவாளனின் ஆர்.டி.ஐ மனுவுக்குப் பதில் அளிக்காமல் இருப்பது நல்லதல்ல. இவரே இப்படி இருந்தால், இவர் நியமிக்கிற ஆணையர்கள் எந்த வகையில் செயல்படுவார்கள்?

'உயிர் மற்றும் சுதந்திரம் (life and liberty) போன்ற விதிமுறையின்கீழ் 48 மணி நேரத்தில் பதில் வேண்டும்' எனப் பேரறிவாளன் தகவல் கேட்டுள்ளார். இந்த விதிமுறையின்கீழ் தகவல் கொடுக்கக்கூடிய சட்ட முகாந்திரம் உள்ளது. இந்த விதிமுறைக்குள் தகவல் தரவில்லை என்றால், பொதுவான விதிமுறையான 30 நாள்களில் தகவல் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையிலாவது தகவல் கொடுத்திருக்கலாம். இந்த இரண்டு விதிமுறைகளிலுமே ஆளுநர் மாளிகையில் இருந்து தகவல் கொடுக்கவில்லை. ஆளுநர் மாளிகையின் நடவடிக்கையைப் பார்க்கும்போது சட்டத்தையே இவர்களை மதிக்கவில்லை என்பது தெரிகிறது.

எடுத்துக்காட்டாக 2015-ல் சிறையில் இருந்த ஒருவர், இறுதிக்கட்ட அறுவைசிகிச்சை எடுத்தாக வேண்டிய நிலை. அந்த நபர் சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால், அவருடைய உயிருக்கே ஆபத்து. அந்தச் சூழலில் அரசின் மருத்துவக் காப்பீட்டின் அடிப்படையில், தனியார் மருத்துவமனை அவருக்கு 10  சதவிகிதம் சலுகை வழங்கிச் சிகிச்சை அளிக்க வேண்டும். ஆனால், அந்தச் சிகிச்சையைத் தட்டிக் கழிக்க அந்த மருத்துவமனை தாமதித்து வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட  அந்த நபர், 'உயிர் (life category) என்ற விதிமுறையின்கீழ் மத்திய தகவல் ஆணையத்தில் தமக்கு அளிக்க வேண்டிய அரசின் சலுகை ஏன்  தாமதம் ஆகிறது' எனத் தகவல் கோரியிருந்தார். அதற்குப் பதில் இல்லாத நிலையில், மேல் முறையீட்டுக்குப் போனது, அந்த மனு. 

அப்போது இந்த மனு சைலேஷ் காந்தி என்ற மத்திய தகவல் ஆணையர் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய சைலேஷ் காந்தி, விதிமுறை பொருந்தும் நிலையில், அவருக்கு ஏன் சிகிச்சை  அளிக்கவில்லை. மேலும், இப்படித் தகவல் தராமல் தாமதம் செய்த பொதுத் தகவல் அலுவலருக்கு 50 ரூபாய் அபராதம் விதிக்கிறேன் என்றும் உத்தரவிட்டார். இப்படியான வழக்குகளைக் கருத்தில் எடுத்துக்கொண்டு நல்ல பதிலை ஆளுநர் அளிக்க வேண்டும். இப்படி ஒருவருடைய சுதந்திரத்தில் அமைதிகாப்பது சரியான நடைமுறை இல்லை. இது, சட்டத்தை மீறும் செயல். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் செய்ய வேண்டியது இதுதான். இதுவரை தகவல் கொடுக்காமல் கால தாமதம் செய்யும் ஆளுநருக்கு, அவர் மேலும் இரண்டு ஆர்.டி.ஐ. மனுக்களை அனுப்பலாம். குறிப்பாக, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தின் நிலைகுறித்தும் புதிய மனு ஒன்றை அனுப்பி பதில் கேட்கலாம். அதில், ஆளுநர் மாளிகை பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்ன? அதில், என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது போன்ற கேள்விகளை முன்வைக்கலாம். மேலும், ஏற்கெனவே அனுப்பப்பட்ட ஆர்.டி .ஐ. மனுமீது  இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்பதற்கான முகாந்திரமும் உள்ளது" என்று தெளிவுபடுத்தினார்.

பேரறிவாளன் விடுதலை, யாருடைய கையில்தான் இருக்கிறது?