
மத்திய அரசு தமிழக எம்.பி-க்களை மதிப்பதில்லை!
#EnnaSeitharMP
#MyMPsScore
சமீபத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிய ஸ்கேன் மெஷின் திறப்பு விழா நிகழ்ச்சி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடந்தது. விழாவில் பேசிய மயிலாடுதுறை எம்.பி-யான பாரதிமோகன், புதிய ஸ்கேன் மெஷின் மயிலாடுதுறை மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று குறிப்பிட்டு, ஆஹாஓஹோ லெவலில் புகழ்ந்தார். உடனிருந்த எம்.பி-யின் ஆதரவாளர்களோ நெளிந்தார்கள். விழா முடிந்தவுடன் அவர்கள், “என்னண்ணே இப்படி பேசிட்டீங்க... மயிலாடுதுறைக்கு வந்த புது மெஷினை நாகைக்கு தூக்கிட்டுப் போயிட்டாங்க. அங்கிருந்த பழைய மெஷினைதான் இங்க கொண்டாந்து வெச்சிட்டாங்க...” என்று விஷயத்தைப் போட்டுடைக்க நொந்து போனார் பாரதிமோகன். தொகுதியில் மக்கள் பணிகள் எப்படி நடக்கின்றன என்பதற்கு ஒருசோறு பதம் இது!
தொகுதியில் பரவலாகவே எம்.பி பாரதி மோகனை ‘நல்லவர், எளிதில் அணுகக் கூடியவர்’ என்கிறார்கள். அவர்களே, ‘நல்லவராக இருந்தால் மட்டும் போதாதே... வல்லவராகவும் இருந்து மக்கள் திட்டங்களைச் செயல்படுத்தியிருக்க வேண்டும்’ என்று புலம்பவும் செய்கிறார்கள்.
கும்பகோணம் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகனிடம் பேசினோம். “ஊருக்கு ஊர் பேருந்து நிழற்குடைகளை அமைப்பது மட்டும்தான் எம்.பி செய்திருக்கும் உருப்படியான வேலை. கொள்ளிடம் கீழணையில் ரூ.400 கோடியில் தடுப்பணை அமைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். எடப்பாடி அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், அதைச் செயல்படுத்த எம்.பி பாரதிமோகன் வலியுறுத்தவில்லை. மத்திய அரசின் ‘அம்ரூத்’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 13 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுக் குடிநீர்த் திட்டங்கள், பாதாளச் சாக்கடைப் பணிகள், அரசு அலுவலகங்களைப் புதுப்பிப்பது எனப் பல்வேறு பணிகள் நடக்கின்றன. கும்பகோணம் நகராட்சியிலும் இந்தத் திட்டத்தில் ரூ.110 கோடியில் பணிகள் நடக்கின்றன. ஆனால், இந்த நகராட்சிக்குப் பொறியாளரே இல்லை. பிறகு எப்படி திட்டங்கள் சரியாக நடக்கும்? இதற்கான முயற்சியையும் எம்.பி எடுக்கவில்லை” என்றார்.

நாகை மாவட்ட காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ராஜ்குமார், “மயிலாடுதுறை நகரில் புறவழிச்சாலை அமைக்க மத்திய அரசிடம் ரூ.32 கோடி நிதி வாங்கிக்கொடுத்தேன். முதல்கட்டமாக, மூன்று கோடி ரூபாயில் நில ஆர்ஜிதம் செய்யும் பணிகள் தொடங்கின. அடுத்தடுத்து வந்த அ.தி.மு.க எம்.பி-க்கள் இதில் கவனம் செலுத்தாததால், திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். அறுபது கோடி ரூபாயில் பூம்புகார் துறைமுகம் புதுப்பிக்கும் பணியும் நிறைவடையவில்லை. மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடிவரை இயங்கிவந்த ரயில் பாதை அப்படியே இருக்கிறது. அதை நீட்டித்து காரைக்காலுடன் இணைத்து, ரயில் சேவை தொடங்கினால் திருக்கடையூர், திருநள்ளாறு, நாகூர், வேளாங்கண்ணி ஆகிய திருத்தலங்களுக்கு பக்தர்கள் செல்லப் பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்தும் நாடாளுமன்றத்தில் எம்.பி பேசவே இல்லை. பழையாறு, திருமுல்லைவாசல், தரங்கம்பாடி கடற்கரைகளில் படகுகள் நிறுத்தும் திட்டம் முடிக்கப்படவில்லை. சீர்காழி அருகே ரூ.100 கோடியில் கொண்டுவரப்பட்ட கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தால் தமிழக மீனவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. மயிலாடுதுறையில் ரூ.20 கோடியில் ஆரம்பிக்கப்பட்ட மத்திய அரசின் ராஜீவ் காந்தி விளையாட்டு ஆணையத்தில் போதிய எண்ணிக்கையில் பயிற்சியாளர்கள் இல்லை. திருபுவனத்தில் நெசவாளர்களுக்கான நவீனப் பயிற்சித் திட்டமும் செயல்படவில்லை. அணைக்கரையிலிருந்து ஆணைக்காரன் சத்திரம்வரை கொள்ளிடம் ஆற்றின் கரைகளை ரூ.380 கோடியில் பலப்படுத்தினார்கள். ஆனால் அவை போதிய பராமரிப்பின்றி, கரைகளில் உடைப்பெடுத்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. இதில் எதிலுமே எம்.பி கவனம் செலுத்தவில்லை’’ என்றார்.
பா.ம.க மாவட்டத் துணைச் செயலாளர் வேல்முருகன், “எம்.பி-யின் செயல்பாட்டை ஜெயலலிதாவுக்கு முன், ஜெயலலிதாவுக்குப் பின் எனப் பிரித்துவிடலாம். தொகுதிக்குக் கேட்டு வாங்குவதற்காக மத்திய அரசின் திட்டங்கள் நிறைய உள்ளன. அத்திட்டங்கள் குறித்தெல்லாம் எங்கள் எம்.பி-க்கு எதுவும் தெரியாது” என்றார். தி.மு.க-வைச் சேர்ந்த மயிலாடுதுறை முன்னாள் எம்.எல்.ஏ அருள்செல்வன், “ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட கதிராமங்கலத்தில் நடந்த போராட்டங்களை நாடே திரும்பிப்பார்த்தது. போராட்டங்களுக்கு முக்கிய அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் பலரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். தனது தொகுதியில் நடந்த இந்தப் போராட்டத்தை எம்.பி எட்டிக்கூட பார்க்கவில்லை. இதனால் எம்.பி-யைக் காணவில்லை என்று போஸ்டர் ஒட்டும் அளவுக்குப் பிரச்னையானது” என்றார்.
மூன்று முறை நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட குத்தாலம் கல்யாணம், “தொகுதியில் மூன்று சர்க்கரை ஆலைகள் இருந்தும், கரும்பு விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள். ஆசியாவிலேயே மிகச் சிறந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலை என்று பெயர் பெற்றிருந்த தலைஞாயிறு சர்க்கரை ஆலைக்கு மூடுவிழா நடத்திவிட்டனர். பழையாற்றிலிருந்து தரங்கம்பாடிக்கு கடற்கரை ஓரமாக பல கோடி ரூபாய் செலவில் புதிய தார்ச்சாலை அமைத்தனர். அதில் கட்டப்பட்ட இரண்டு பாலங்களுக்கு இணைப்புச் சாலைகள் இல்லாததால் பாலங்கள் அந்தரத்தில் நிற்கின்றன. கடற்கரையோரம் நான்காயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க என்.எல்.சி நிறுவனம் ரூ.50 கோடி செலவில் ஆய்வு நடத்தியது. அதிலும் எம்.பி அக்கறை செலுத்தாததால் திட்டம் ஆந்திரத்துக்குப் போய்விட்டது. பூம்புகார் கல்லணை சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாப்படுகை ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும் என்றார்கள். பணிகள் நடக்க வில்லை. மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்களைப் பாதிக்கும் வகையில் ஏராளமான திட்டங்களை ஓ.என்.ஜி.சி மேற்கொள்கிறது. அந்த விஷயத்தில் விவசாயிகளுக்காக இவர் குரல் கொடுக்கவில்லை. சரி, அந்த ஓ.என்.ஜி.சி-யிடமிருந்தாவது சமூகப் பொறுப்புணர்வு நிதியைப் பெற்று நிறைய மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி யிருக்கலாம். அதையும் எம்.பி செய்யவில்லை” என்றார். “மக்கள் பிரச்னைகளுக்காக எம்.பி-யை எளிதாகத் தொடர்புகொள்ள முடிகிறது. அவரும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசுகிறார். ஆனாலும் வேலை நடப்பதில்லை” என்கிறார் குடந்தை அனைத்துத் தொழில் வணிகர் சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன்.
எம்.பி தத்தெடுத்த கிராமங்களுக்குச் சென்றோம். முதலில் சென்றது திருமங்கலகுடி. “குடிநீர் வரவில்லை, ஆரம்பச் சுகாதார நிலையம் இல்லை, கால்நடை மருந்தகத்துக்கு டாக்டர் வருவதில்லை. குப்பை அள்ளும் 150 டயர் வண்டிகள் பல மாதங்களாகப் பராமரிப்பின்றி கிடக்கின்றன. கிராமம் முழுவதுமே குப்பைகள் தேங்கி நாற்றமெடுக்கிறது” என்றார் தி.மு.க-வைச் சேர்ந்த ராஜா. ஆனால், அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரனோ, “300 எல்.ஈ.டி. விளக்குகள், தலா ஐந்து ஹைமாஸ் விளக்குகள், சூரிய ஒளி விளக்குகள் போடப்பட்டுள்ளன. பேருந்து நிலையம், ஈமக்கிரியை மண்டபம், தார்ச்சாலை ஆகியவை எம்.பி-யின் தொகுதி வளர்ச்சி நிதி மூலம் அமைக்கப்பட்டுள்ளன” என்றார். நாம் நேரில் பார்த்தபோது, மக்களுக்கான அடிப்படை பிரச்னைகள் பலவும் தீர்க்கப்படாமல் இருப்பதைக் காண முடிந்தது. அடுத்து நல்லவன்னியன் குடிகாடு சென்றோம். “இந்த ஊருக்கு என்னென்ன திட்டங்கள் தேவை என்று எம்.பி சார்பில் சர்வே எடுத்தபோது மகிழ்ந்தோம். அதன்பிறகு எந்தப் பணியும் நடக்கவில்லை. ஓட்டுக் கேட்டபோது அவரை பார்த்ததுடன் சரி...” என்கிறார்கள் கிராமத்தினர்.
அதேசமயம், “ஐந்து எம்.பி-களைக் கொண்ட வட இந்திய கட்சிகள்கூட நாடாளுமன்றத்தில் காரியம் சாதித்துக்கொள்கின்றன. ஆனால், நமது கட்சியில் 37 பேர் இருந்து என்ன பிரயோஜனம்... அ.தி.மு.க எம்.பி-களான நாங்கள் கொலு பொம்மைகளாகத்தான் இருக்க முடிகிறது... என்று எம்.பி-யே தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிவருகிறார்’’ என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.
இவற்றுக்கெல்லாம் பாரதிமோகன் என்ன சொல்கிறார்? “நான் மட்டுமல்ல, எங்கள் கட்சியில் 37 எம்.பி-க்கள் இருந்தும் தமிழகத்துக்கான திட்டங்கள் எதையும் கொண்டு வரமுடியவில்லை என்பதுதான் உண்மை. காரணம், மத்திய அரசு தமிழக எம்.பி-க்களை மதிப்பதில்லை. தொகுதியில் மக்கள் திட்டங்களுக்காக எத்தனையோ முறை நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளேன்; மத்திய அமைச்சர்களிடம் மனுக்கள் கொடுத்துள்ளேன். எவை மீதும் நடவடிக்கை இல்லை. மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க மணக்குடியில் இடம் தேர்வாகியுள்ளது. அடிக்கல்நாட்டு விழா நடத்த முதல்வரிடம் தேதி கேட்டுள்ளேன். கும்பகோணம் ரயில் நிலையத்தில் 24 ரயில் பெட்டிகள் கொண்ட ரயில் நிற்கும்படி நடைமேடையை விரிவுபடுத்த கோரிக்கை வைத்தேன். நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். ஏழு ஆண்டுகளாகக் கிடப்பில் இருந்த விக்ரவாண்டி - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை விரிவாக்கத் திட்டம் குறித்து மத்திய தரைவழிப் போக்குவரத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துக் கோரிக்கை வைத்்தோம். தற்போது அந்தப் பணிகள் வேகமெடுத்துள்ளன. என் தொகுதிக்குள் கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணு என இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள்தான்... ஆனால், என்னவென்று சொல்வது? ஒரே கட்சியில் இருந்துகொண்டு ஒன்றும் பேசமுடியவில்லை...” என்று புலம்பியவரிடம், “கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனக் குழாயில் எண்ணைய் கசிவு மற்றும் புதிய குழாய் விரிவாக்கம் பிரச்னையில் நீங்கள் விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கவில்லை என்கிறார்களே...’’ என்றோம். “காங்கிரஸ், தி.முக கூட்டணியில்தான் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அப்போதே தடுத்துப் போராட வேண்டியதுதானே? தற்போது சிலரது சுயநலத்துக்காகவும் உள்நோக்கத்துடன் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை மக்களைப் பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் கொண்டுவர மாட்டோம்” என்றார். உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
- ஆர்.பி., கே.குணசீலன், மு.இராகவன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி



எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?
மயிலாடுதுறையிலிருந்து 23 கி.மீ தொலைவிலுள்ள கஞ்சனூர் கிராமத்தில் எம்.பி வீட்டிலேயே ஆபீஸ் இருக்கிறது. ‘ராமேஸ்வரம் வரை செல்லும் அயோத்தியா எக்ஸ்பிரஸ் ரயில், மயிலாடுதுறை சந்திப்பில் நிற்பதில்லை. மயிலாடுதுறையைச் சுற்றிதான் பிரசித்திபெற்ற கோயில்களும், நவக்கிரகத் தலங்களும் உள்ளன. எனவே, மயிலாடுதுறையில் அயோத்தியா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என கோரிக்கை மனுவை எம்.பி ஆபீஸில் அளித்திருக்கிறார் மயிலாடுதுறை பி.ஜே.பி நகரத் தலைவர் மோடி கண்ணன். இதுபற்றி எம்.பி அலுவலகத்தில் விசாரித்தபோது ‘நோ ரெஸ்பான்ஸ்’.

