Published:Updated:

நீதித்துறை... சி.பி.ஐ... ரிசர்வ் வங்கி... அத்து மீறுகிறதா மத்திய அரசு?

நீதித்துறை... சி.பி.ஐ... ரிசர்வ் வங்கி... அத்து மீறுகிறதா மத்திய அரசு?
பிரீமியம் ஸ்டோரி
News
நீதித்துறை... சி.பி.ஐ... ரிசர்வ் வங்கி... அத்து மீறுகிறதா மத்திய அரசு?

நீதித்துறை... சி.பி.ஐ... ரிசர்வ் வங்கி... அத்து மீறுகிறதா மத்திய அரசு?

திர்க்கட்சிகள் எத்தனையோ குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கெத்தாக இருந்த மோடிக்கு 2018, நெருக்கடியைக் கொடுக்கும் ஆண்டாக அமைந்திருக்கிறது. ஒருபுறம் ரபேல் விமான பேர ஊழல் குற்றச்சாட்டு, இன்னொருபுறம் ‘நீதித்துறை, சி.பி.ஐ, ரிசர்வ் வங்கி என்று அடுத்தடுத்து சுயேச்சையான அமைப்புகளில் மத்திய அரசு தலையிடுகிறது’ என்ற குற்றச்சாட்டு... இரண்டையும் எதிர்கொள்ளவேண்டிய நிலையில் மோடி!

நீதித்துறை... சி.பி.ஐ... ரிசர்வ் வங்கி... அத்து மீறுகிறதா மத்திய அரசு?

இந்த ஆண்டு ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்குபேர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு, நீதித்துறையின் மீதான பார்வையையே மாற்றியது. அந்தப் பிரச்னை கொஞ்சம் அடங்கியிருக்கும் நேரத்தில் சி.பி.ஐ, ரிசர்வ் வங்கி என்று அடுத்தடுத்துப் பிரச்னைகள் வெடித்திருக்கின்றன.

 ‘ரபேல் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை வேண்டும்’ என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போர்க்குரல் எழுப்ப, “ரபேல் விமானம் வாங்கியதில் எந்த முறைகேடும் இல்லை. விசாரணையைச் சந்திக்கத் தயார்” என்றார், இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால் சில நாள்களிலேயே சி.பி.ஐ. இயக்குநர் மீதும் இணை இயக்குநர் மீதும் எழுந்த குற்றச்சாட்டினால் இரவோடு இரவாக அவர்களைக் கட்டாய விடுமுறைக்குப் பணித்தது, மத்திய அரசு. ‘ரபேல் விமான ஊழலை மறைப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கையை மோடி அரசு எடுத்துள்ளது’ என்று கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தன எதிர்க்கட்சிகள்.

‘சிறப்பு போலீஸ் அமைப்பு’ என்ற அமைப்புதான் சி.பி.ஐ. அமைப்பின் ஆணிவேராக விளங்கியது. இரண்டாம் உலகப் போரின்போது அரசுத் துறையில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டறிய
1941-ம் ஆண்டு ‘சிறப்பு போலீஸ் அமைப்பு’  என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அதன்பிறகு, அந்த அமைப்பு 1963-ம் ஆண்டு ‘மத்தியப் புலனாய்வுத் துறை’ என்ற பெயரில் பணியாளர் நிர்வாகத் துறையின்கீழ் கொண்டுவரப்பட்டது. அந்த அமைப்புதான் நாட்டில் நடைபெற்ற பல்வேறு சிக்கலான வழக்குகளின் முடிச்சுகளை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. அதே நேரம், சி.பி.ஐ. மீது பல்வேறு விமர்சனங்களும் எழாமல் இல்லை.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த வர்மா, “இப்போதும்கூடச் செல்வாக்குள்ளவர்களுக்கு எதிரான விசாரணைகளில் ஏமாற்றம் தரும் வகையிலேயே செயல்படுகிறது, சி.பி.ஐ.” என்று ஒரு கட்டுரையில் விமர்சித்திருந்தார். உச்ச நீதிமன்றமே சி.பி.ஐ. அமைப்பை, ‘கூண்டில் அடைக்கப்பட்ட கிளி’  என்று வர்ணித்தது. சி.பி.ஐ.-யின் இயக்குநர் அலோக் வர்மா, இணை இயக்குநர் ராகேஷ் அஸ்தானா பதவிகளை நள்ளிரவில் பறித்து அவர்களைக் கட்டாய விடுப்பில் அனுப்பிவைத்துள்ளது, மத்திய அரசு. 

நீதித்துறை... சி.பி.ஐ... ரிசர்வ் வங்கி... அத்து மீறுகிறதா மத்திய அரசு?

அந்த சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்து வெடித்துள்ளது ரிசர்வ் வங்கிக்கும் மத்திய அரசுக்குமான மோதல். ஏற்கெனவே ‘மோடி அரசு இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து மதவாத அரசியலைத் திணிக்கிறது; மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிறது’ என்ற குற்றச்சாட்டுகளோடு இப்போது ‘சுயேச்சை அமைப்புகளின் சுதந்திரத்தை மத்திய அரசு பறிக்கிறது’ என்ற குற்றச்சாட்டும் சேர்ந்துள்ளது.

மத்திய அரசின் அழுத்தம் காரணமாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்யப்போகிறார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ரிசர்வ் வங்கி விவகாரத்தில் மத்திய அரசு டி-20 கிரிக்கெட் போட்டி போன்று முடிவெடுக்கிறது. ஆனால், நாங்கள் டெஸ்ட் போட்டி போன்று நிதானமாக முடிவெடுக்க வேண்டியுள்ளது” என்கிறார், ரிசர்வ் வங்கியின் துணை இயக்குநர் விரால் ஆச்சார்யா.

சுயாட்சி அமைப்புகள் மீதான மத்திய அரசின் அழுத்தம் குறித்து சமூகச் செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ், “காங்கிரஸ் அரசுக்கும் பி.ஜே.பி. அரசுக்கும் சில அடிப்படையான வேறுபாடுகள் உண்டு. காங்கிரஸ் கட்சியைப் பின்னிருந்து இயக்க ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற கொள்கை கிடையாது. ஆனால், பி.ஜே.பி. அரசுக்கு  அம்பேத்கர் தலைமையில் அமைந்த அரசியலமைப்பு நிர்ணயசபையின் சட்டத்தை மாற்றவேண்டும் என்ற எண்ணம் நீண்டநாள்களாக உள்ளது. இதற்குமுன் வாஜ்பாய் ஆட்சியிலேயே அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றன. நீதிபதி வெங்கடாச்சலையா தலைமையில் ஒரு குழுவை அப்போது அமைத்து, அரசியல் சட்டத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தப் பார்த்தது. ஆனால், அப்போது பி.ஜே.பி அரசுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் அது முடியவில்லை.

இப்போது மோடி அரசுக்குச் சட்டத்தைத் திருத்தக்கூடிய அளவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், அறுதிப்பெரும்பான்மை இருப்பதால் அரசியல் சட்டத்தைத் திருத்தும் துணிச்சலுக்கு வந்துவிட்டார்கள். அதனால்தான் தன்னாட்சி அமைப்புகளைப் பலவீனப்படுத்தி வருகிறார்கள். ஆட்சிக்கு வந்தவுடனேயே நீதிமன்ற விவகாரங்களில் தலையிடத் தொடங்கினார்கள். கொலிஜியம் முறையைக் கைவிடத் துணிந்தார்கள்.

அதேபோல், நமது நாட்டுக்குத் திட்டமிட்ட பொருளாதாரம் மிக அவசியம். ஆனால், இவர்கள் ஆட்சியில்தான் திட்ட கமிஷனையே கலைத்துவிட்டார்கள். ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால் பல அவசர சட்டங்களைக் கொண்டுவந்து அது அமலுக்கு வரமுடியாமல் போனது. கல்வியையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. பல்கலைக்கழகங்களின் அதிகாரங்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மத்தியப் பல்கலைக்கழகங்களை மாணவர்கள் தேர்வுசெய்வது குறைந்துவிட்டது. ஜனநாயக நிறுவனங்களை உடைத்தெறிவதை அவர்கள் கொள்கையாக வைத்திருக்கிறார்கள். எப்போது அவர்கள் அறுதிப் பெரும்பான்மை பெறுகிறார்களோ, அப்போது இதைவிட ஆபத்தான விஷயங்கள் நடக்கும்” என்கிறார்.

“ரிசர்வ் வங்கி விவகாரத்தில் மத்திய அரசு கொடுத்துவரும் அழுத்தம் என்பது இந்தியப் பொருளாதாரத்துக்கு விடப்படும் அச்சுறுத்தல்” என்கிறார், முன்னாள் வங்கி ஊழியரும் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான ஆறுமுக நயினார்.

 “இந்திய நிதித்துறையில் ரிசர்வ் வங்கிக்கு முக்கியப் பங்கு உண்டு. சுதந்தரம் பெற்ற எழுபது ஆண்டுகளில் மத்திய அரசுக்கும், ஆர்.பி.ஐ.-க்கும் சின்னச்சின்ன உரசல்கள் வந்தாலும், அவை பெரிய மோதலாக மாறியதில்லை. குறிப்பாக வட்டி விகிதம், பணப்புழக்கம், ஏற்றுமதி இறக்குமதி எனப் பலதரப்பட்ட விஷயங்களில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில் ஓர் இணக்கமான சூழ்நிலை நிலவும்.

ஆனால், பி.ஜே.பி அரசாங்கம் வந்தபிறகு, எல்லா அமைப்புகளிலும் தலையிட ஆரம்பித்துவிட்டார்கள். தாங்கள் சொல்வதைக் கேட்கும் நபர்கள்தான் ரிசர்வ் வங்கி கவர்னராக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்போது கவர்னராக இருக்கும் உர்ஜித் படேல் நியமனம்கூடப் பல்வேறு காரணங்களை மனதில்வைத்துதான் நடந்தது. குறிப்பாக பணமதிப்பிழப்பை ஆதரிக்கும் நபரை ரிசர்வ் வங்கி கவர்னராகக் கொண்டுவந்தார்கள். ஆனால், எதற்கும் ஓர் எல்லை உண்டு. இப்போது எல்லையை மீறி அவர்கள் செல்வதால் படேலும் பொங்கி எழுந்துவிட்டார். 

நீதித்துறை... சி.பி.ஐ... ரிசர்வ் வங்கி... அத்து மீறுகிறதா மத்திய அரசு?

ஏற்கெனவே, பண மதிப்பிழப்பு கொண்டுவந்ததால் என்ன பலன் என்று இதுவரை ஒரு வலுவான காரணத்தை அரசாங்கத்தினால் சொல்லமுடியவில்லை. இப்போது மீண்டும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மத்திய அரசு செயற்படுவது இந்தியப் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல” என்கிறார்.

நீதித்துறையில்தான் முதல் சலசலப்பு எழுந்தது. அதுகுறித்துப் பேசிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், “இந்த அரசின் தலையீடு நீதித்துறையில் எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு நான்கு நீதிபதிகள் ஜனவரி மாதம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பே போதுமானது. இப்போது தலைமை நீதிபதியாக இருக்கும் கோஹாய், செல்லமேஸ்வரர் உட்பட நான்கு பேர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, ‘எமர்ஜென்சி காலத்தில் நீதித்துறைக்கு ஏற்பட்ட களங்கம்போல், இப்போது வந்துவிடும்’ என்று கலக்கத்துடன் சொன்னார்கள். அதேபோல் கோபால் சுப்பிரமணியம் நியமனத்தில் கொலிஜியம் பரிந்துரையை மீறி, தலைமை நீதிபதியின் கருத்தை மீறி அரசு செயல்பட்டது. இதுபோன்ற செயற்பாடுகள் நீதித்துறையின் அடிப்படைக் கட்டுமானத்தையே சிதைத்துவிடும்” என்கிறார்.

முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமன், “இணை இயக்குநர் அந்தஸ்துக்கு மேலுள்ள அதிகாரிகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றால், அரசின் அனுமதியைப் பெறவேண்டும் என்று சட்டம் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. இதனால், சி.பி.ஐ. சுதந்திரம் முழுமையாகப் பறிக்கப்படும் நிலை உள்ளது. இந்தச் சட்டத்தை தற்போது கொண்டுவந்திருக்கும் மத்திய அரசு, மேலும் அதில் கூடுதலாகச் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இப்போது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஓர் அதிகாரியைச் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றால், அரசு உத்தரவில்லாமல் வழக்குகூடப் பதிவு செய்யமுடியாது.

அதேபோல் ஊழல் தடுப்பு விசாரணையை மத்திய ஊழல் கண்காணிப்பகத்தின் மேற்பார்வையில்தான் விசாரிக்க வேண்டும் என்றும் சட்டம் கொண்டுவந்துள்ளார்கள். இவ்வளவு நெருக்கடிகள் கொடுத்தால் யார்மீதும் உள்ள ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க முடியாது. இந்த உத்தரவுக்கு மாறாக, சில ஊழல் வழக்குகளில் அலோக் வர்மா அதிரடியாகச் சில நடவடிக்கைகளை எடுத்ததால்தான் அவர்மீது  மத்திய அரசு தந்திரமாகச் நடவடிக்கை எடுத்து கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. ரபேல் விவகாரத்தைத் தோண்டி எடுத்துவிடுவார் என்ற அச்சம்கூட அரசுக்கு இருந்திருக்கலாம்”என்கிறார்.

ரிசர்வ் வங்கி விவகாரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “இதுகுறித்து ரிசர்வ் வங்கியே அறிக்கை வெளியிட்டுள்ளது. அதுகுறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விருப்பமில்லை” என்று சொல்லி விட்டார். “உண்மையில், மத்திய அரசு இந்த விவகாரத்தில் கருத்து கூறிச் சிக்கலை ஏற்படுத்திக்கொள்ள விரும்பாது” என்கிறார்கள், நிதித்துறைக்கு நெருக்கமானவர்கள். “ஆனால் அனைத்துமே சட்டப்படிதான் நடக்கிறது” என்கிறார் பி.ஜே.பி-யைச் சேர்ந்த கே.டி.ராகவன்.

“எந்த நிர்வாக அமைப்பிலும் தலையிடக்கூடாது என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டதாக ரிசர்வ் வங்கி இருக்கவேண்டும் என்று சொல்லியுள்ளார். தன்னாட்சி அமைப்பாக ரிசர்வ் வங்கி இருந்தாலும், அது மத்திய அரசோடு இணக்கமாகச் செல்லவேண்டும். அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளைப் புரிந்துகொண்டு ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும். உர்ஜித் படேலைக் கவர்னராகக் கொண்டுவந்தபோது,  ‘குஜராத்தைச் சேர்ந்தவரை, தனக்கு வேண்டியவரை ரிசர்வ் வங்கி கவர்னராகக் கொண்டுவந்துள்ளார் மோடி’ என்று விமர்சித்தார்கள். இப்போது, அதே கவர்னரைக் கவிழ்க்கப் பார்க்கிறார் மோடி என்று சொல்கிறார்கள். இது என்ன மாதிரியான நிலைப்பாடு என்று புரியவில்லை. ரிசர்வ் வங்கியிடமிருந்து அரசாங்கம் பணம் கேட்கிறது என்று தவறான தகவலைப் பரப்புகிறார்கள்.

மத்திய அரசே அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று விளக்கமளித்துவிட்டது. அதேபோல், சி.பி.ஐ. அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டது மத்திய அமைச்சகம் எடுக்கும் நடவடிக்கை. இதை மத்திய அரசின் தலையீடு என்று எப்படிச் சொல்லமுடியும்? சி.பி.ஐ. விசாரிக்கும் வழக்கில் நாங்கள் எந்தத் தலையீடும் செய்ததில்லை. அதிகாரத்துக்குட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்கமுடியுமோ, அதைமட்டுமே நாங்கள் செய்துள்ளோம்” என்கிறார்.

வானதி சீனிவாசனும் “தன்னாட்சி அமைப்புகளாக இருக்கக்கூடிய ஆர்.பி.ஐ, சி.பி.ஐ. போன்ற நிறுவனங்களின் இயக்குநர்களை நியமிப்பதும் அது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதும் மத்திய அரசின் பணிகளில் ஒன்றுதான். நமது அரசியலமைப்புச் சட்டபடி ஒவ்வொரு அரசும், அமைப்பும் வரைமுறைக்கு உட்பட்டுதான் செயற்பட முடியும். சில நேரங்களில் ஒரு அமைப்பில் உள்ள அதிகாரிகளிடம் கருத்துமோதல்கள் ஏற்படுவதும் அது வெளிப்படையாகத் தெரிவதும் இயல்புதான். ஐக்கிய முற்போக்கு ஆட்சியில்கூட தேர்தல் ஆணைய அதிகாரிகளிடையே நடைபெற்ற கருத்து மோதல்கள் வெளியே வரத்தான் செய்தது.  அதுபோன்ற நேரங்களில் அரசு தலையிடத்தான் செய்யும். அரசாங்கம் என்பது மக்களின் நம்பிக்கை பெற்ற அமைப்பு. அப்படிப்பட்ட அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவேண்டும் என்றால் எந்தப் பணிகளுமே செய்யமுடியாது” என்கிறார் அழுத்தமாக.

மோடியின் ஆட்சிக்காலம் முடிய இன்னும் ஆறுமாதங்களே இருக்கும் நிலையில் அடுத்தடுத்து வரும் குற்றச்சாட்டுகள், நடைபெறப்போகும் ஐந்து மாநிலத் தேர்தல்களில் எதிரொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அ.சையது அபுதாஹிர்