Published:Updated:

கோபாலபுரம் முதல் அறிவாலயம்வரை... கருணாநிதியின் கடைசி 8 மாதங்கள்! #2018Rewind

வெளியிலே குவிந்திருந்த தொண்டர்கள், 'தலைவா எழுந்து வா...' 'சூரியனுக்கு அஸ்தமனம் கிடையாது' என்று கோஷமிட்டது, மாற்றுக் கட்சியினரின் மனதையும் கலங்கச் செய்தது. அவரது உடல்நிலை குறித்து, காவேரி மருத்துவமனை தொடர்ந்து மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டு வந்தது.

கோபாலபுரம் முதல் அறிவாலயம்வரை... கருணாநிதியின் கடைசி 8 மாதங்கள்! #2018Rewind
கோபாலபுரம் முதல் அறிவாலயம்வரை... கருணாநிதியின் கடைசி 8 மாதங்கள்! #2018Rewind

விரைவில் விடைபெற இருக்கிறது, 2018. கடந்த ஆண்டுகளைப்போலவே, இந்த ஆண்டிலும் பல மகிழ்ச்சியான நிகழ்வுகள், வெற்றி, தோல்விகள், சோகங்கள், இழப்புகள் பதிவாகியுள்ளன. இதில், மிகப்பெரிய இழப்பு முதுபெரும் தமிழக அரசியல் தலைவர் கருணாநிதியின் மரணம். 

சூரியனுக்கு ஓய்வில்லை... ஆனால், மனிதனுக்கு ஓய்வுண்டு. கருணாநிதி, ஓய்வறியா மனிதச் சூரியன். கடந்த இரு ஆண்டுகளாகவே, அவர் தனது கரகர குரலையும், கவர்ந்திழுக்கும் எழுத்துகளையும் நிறுத்திக்கொண்டபோதும், அவரது இருப்பு, எல்லாத் தமிழர்களுக்கும் ஏதோ ஒரு விதமான நம்பிக்கையை உள்ளுக்குள் புதைத்து வைத்திருந்தது. பேசிப்பேசியே தமிழகத்தை ஆண்ட அவர் மௌனமான போது, அவரைப் பற்றி, தமிழகமே பேசிக் கொண்டிருந்தது. 

ஆனால், அவரது மறைவுக்கு முன்பாக, அவர் வாழ்ந்த கடைசி 8 மாதங்களில் அவரது முகத்தின் அசைவுகளில், அவரது அகத்தை நோக்கியவர்கள் வெகு சிலரே. கருணாநிதியைத் தன்னிகரற்ற தலைவர் என்று கொண்டாடிய பல நட்சத்திரங்களும், தலைவர்களாகத் தங்களையே அறிமுகம் செய்துகொண்டதும், அந்தக் காலகட்டத்தில்தான். 

முதல் ஆளாய்ச் சென்றார், நடிகர் ரஜினிகாந்த். வெளியே வந்து, பேசிய ரஜினி, "அவருக்கு, புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறியதோடு, என் அரசியல் பிரவேசம் பற்றிக் கூறி ஆசி பெற்றேன்" என்றார். அவரை அடுத்து கமல்ஹாசனும் போனார். அவரும், "என்னுடைய அரசியல் பயணம் குறித்து அவரிடம் பேசினேன். கருணாநிதியிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது'' என்றார்.

தைத்திருநாளை தமிழ்ப்புத்தாண்டு தினமாக அறிவித்தவர், கருணாநிதி. அந்த நாளில், ஆண்டுதோறும் தொண்டர்களைச் சந்தித்த அவர், கடந்த 2017-ம் ஆண்டில், உடல் நலக்குறைவு காரணமாக, யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், 2018 தைத்திருநாளில், கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்தார், கருணாநிதி. அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த தொண்டர்கள், ஆசியும் பெற்றனர். ஜனவரி மாத இறுதியில் பல் சம்பந்தமான பிரச்னைக்காகவும், பிப்ரவரியில் கண் பரிசோதனைக்காகவும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய கருணாநிதி, மு.க.தமிழரசுவின் பேரன் மகிழனுடன் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். மகிழன் பேட்டைப் பிடித்து விளையாட, கருணாநிதி பந்துவீசும் அந்தக் காட்சி, சமூக ஊடகங்களில் பரவி, உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்தியது.

மார்ச் மாதத்தில், மு.க.ஸ்டாலின், தன்னுடைய பிறந்த நாளுக்கு, கருணாநிதியிடம் ஆசி வாங்கச் சென்றார். மனைவி துர்கா, மகன் உதயநிதியும் உடன்சென்றனர். தந்தையிடம் ஆசி வாங்கிய ஸ்டாலின், அருகிலிருந்த உதயநிதியைக் காட்டி, "இவர் யாருனு தெரியுதா?" என்று கேட்டார். பின்னர் உதயநிதியும் கருணாநிதியிடம் சென்று, "தாத்தா... நான் யாருனு தெரியுதா?" என்று கேட்டார்.  அதற்கு ஸ்டாலின், அவர் காதருகே சென்று, "உதயா" என்று சொன்னார். அதைக்கேட்ட கருணாநிதியின் இதழ்களில் லேசான புன்னகை இழையோடியது. 

அதன்பிறகு உதயநிதி, "நேத்து கிரிக்கெட் விளையாடினீங்களே... நான் வீடியோவுல பார்த்தேன்" என்று கூறியபோது, இன்னும் கொஞ்சம் பெரிதாய்ப் புன்னகைத்தார். துர்கா ஸ்டாலின், தான் எழுதிய புத்தகத்தை கருணாநிதியிடம் கொடுத்து ஆசி வாங்கினார். அதைப் பார்த்து, அதில் கையெழுத்திட்டு மகிழ்ந்தார், கருணாநிதி. இந்த வீடியோவும் தொண்டர்களுக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது.

அதே மாதத்தில் கவிஞர் வைரமுத்து, கருணாநிதியைச் சந்தித்தபோது, 'பிடர்கொண்ட சிங்கமே பேசு' என்று கவிதை வாசித்தார். ஜூலை மாதத்தில், தனது பிறந்தநாளுக்கு கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற வைரமுத்து, ‘'தனக்கு ஒரு பிறந்த நாள் பரிசுப் பொருள் வேண்டும்" என்று கேட்க, என்ன வேண்டுமென்பதைப்போலப் பார்த்தார் கருணாநிதி.

அதற்கு, "நீங்கள் தமிழ் எழுதிய உங்கள் பேனா வேண்டும்" என்று கேட்டார். உடனே, தன் மகள் கனிமொழியிடம் கருணாநிதி கண் காட்ட... அவரோ அறைக்குச் சென்று ஒரு பேனாவைக் கொண்டு வந்து கொடுக்க, வாஞ்சையோடு வாங்கிக் கொண்டார் வைரமுத்து. அந்தப் பேனா மூலம் ஒரு கவிதையையும் எழுதி ட்விட்டரில் பதிவுசெய்தார்.

2017 டிசம்பருக்குப் பிறகு, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மீண்டும் அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார், கருணாநிதி. அங்குச் சென்ற அவர், தன்னுடைய அறை உள்ளிட்ட சில இடங்களைப் பார்வையிட்டு விட்டு மீண்டும் இல்லத்துக்குத் திரும்பினார். அப்போது அவரது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், அவரது உள்ளத்துக்குள் அலையடித்த அவரது எண்ணங்களைப் பிரதிபலித்தன.

ஏப்ரல் மாதத்தில், மு.க.தமிழரசுவின் மகளான பூங்குழலி, கருணாநிதியின் முன் மண்டியிட்டு, 'ஏதோ ஒருப் பாட்டு... என் காதில் கேட்கும்' என்று பாட்டுப்பாட, அவருடைய அறைக்குள் மு.க.தமிழரசுவின் பேரன்களும், பேத்திகளும் விளையாடிக்கொண்டிருந்தனர். அதே மாதத்தில்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லி தமிழகத்தில் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது, ராணுவக் கண்காட்சியைத் திறந்துவைக்க, சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராகப் பலரும் கறுப்புச் சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். வீட்டில் இருந்த கருணாநிதியும் கறுப்புச் சட்டை அணிந்து, தனது எதிர்ப்பைக் காட்டினார்.

இப்படி, வீட்டில் நடைபெறும் சிறுசிறு விஷயங்களைக் கருணாநிதியின் குடும்பத்தார், சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அதே மாதத்தில் கருணாநிதியை, அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, தன் குடும்பத்தினருடன் சந்தித்து நலம் விசாரித்ததாக வெளியில் தகவல் கூறப்பட்டது. ஆனால், இருவரும் சந்தித்ததாக எந்த வீடியோவும் வெளியில் வரவில்லை. அடுத்த சில நாள்களில் சென்னை வந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், கருணாநிதியைச் சந்தித்தும் உடல்நலம் குறித்து விசாரித்தார். அது ‘பிரேக்கிங் நியூஸ்’ ஆகவே ஒளிபரப்பானது.

ஜூன் 3... கருணாநிதியின் 95-வது பிறந்த நாள். அன்று, அவரது கோபாலபுரம் இல்லம், வண்ண விளக்குகள், தோரணங்கள், வாழை மரங்கள் அலங்காரத்துடன் விழாக் கோலம் பூண்டிருந்தது. அரசியல் தலைவர்கள் பலரும், வாழ்த்து தெரிவித்தனர். கனிமொழி , 'உன் கரகரத்த குரல் வாளெடுத்து, எழுத்துக் கேடயம் ஏந்தி வா... வீதிகள் எங்கும் காத்திருக்கிறோம், ரட்சகனுக்காக' என்று கவிதை எழுதியிருந்தார். அது பல லட்சம் தொண்டர்களிடம் பகிரப்பட்டது.

முதல் நாள் நள்ளிரவு 12 மணிக்கே, அவரது இல்லத்தின் முன்பு குவிந்த உடன்பிறப்புகள் பலர், கேக் வெட்டி அவரது பிறந்த நாளைக் கொண்டாடினர். உடல் நலிவுற்று ஓய்வெடுத்து வந்தபோதிலும் வீட்டின் முன்பு திரண்டிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்ததோடு, அவர்களின் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார், கருணாநிதி.  

ஜூலையில், தி.மு.க-வின் தலைவராகக் கருணாநிதி பொறுப்பேற்று 50 ஆண்டுகள் ஆனதையடுத்து, அந்த விழாவை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்த நிலையில்தான், உடல்நலக் குறைவால் மீண்டும் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பல ஆயிரம் தொண்டர்களும், அரசியல் தலைவர்களும் படையெடுத்தனர். துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தியும் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். 

வெளியிலே குவிந்திருந்த தொண்டர்கள், 'தலைவா எழுந்து வா...' 'சூரியனுக்கு அஸ்தமனம் கிடையாது' என்று கோஷமிட்டது, மாற்றுக் கட்சியினரின் மனதையும் கலங்கச் செய்தது. அவரது உடல்நிலை குறித்து, காவேரி மருத்துவமனை தொடர்ந்து மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. அந்த நேரத்தில், உலகின் 58 நாடுகளிலிருந்தும், இந்தியாவின் 24 மாநிலங்களில் இருந்தும் ‘கருணாநிதி’ என்ற பெயரை, 5 லட்சத்துக்கு அதிகமானவர்களும், ‘கலைஞர்’ என்ற பெயரை 2 லட்சத்துக்கு அதிகமானவர்களும் கூகுளில் தேடினர். 

அவரது மறைவைப் பற்றி, பல முறை வதந்திகள் பரவின. வாழ்க்கையில், பல கட்டங்களில் பல சோதனைகளையும் கடந்து, வதந்திகளைப் பொய்யாக்கி, மீண்டு வந்த கருணாநிதி, இப்போதும் மீண்டு வருவார் என்று எல்லோரும் நம்பிக் கொண்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 7-ம் தேதியன்று, அந்த ஓய்வறியாச் சூரியன், நிரந்தரமாக அஸ்தமித்தது. தங்களது தலைவனை இழந்த இந்த ஆண்டை, பல லட்சம் உடன்பிறப்புகளும் துடைக்க முடியாத துயரத்தின் ஆண்டாகவே பார்க்கின்றனர். பிறக்கப் போகும் புத்தாண்டு, அவர்களுக்குப் புதுத்தெம்பை அளிக்குமென்றும் காத்திருக்கின்றனர்.