Published:Updated:

அரசியல் அதிரடிகளுக்குப் பின், 2019 தமிழக அரசியல் எவ்வாறு இருக்கும்?

அரசியல் அதிரடிகளுக்குப் பின், 2019 தமிழக அரசியல் எவ்வாறு இருக்கும்?
அரசியல் அதிரடிகளுக்குப் பின், 2019 தமிழக அரசியல் எவ்வாறு இருக்கும்?

தமிழகத்தில் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகான அரசியல் சூழலே இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாத நிலையில், கருணாநிதியின் இறப்பு, ஆளும் அ.தி.மு.க-வுக்குச் சாதகமான 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு எனப் பல்வேறு அதிரடி அரசியல் நிகழ்வுகள் கடந்த ஆண்டில் நடந்தேறி விட்டன. அதன்படி, 2018-ம் ஆண்டில் தமிழக அரசியல் கட்சிகளிடையே ஏற்பட்ட சில முக்கியமான அதிரடி மாற்றங்கள், கட்சி உடைப்பு, உள்கட்சி மோதல்கள் போன்றவை குறித்து பார்ப்போம்.

அரசியலில் புதிதாகக் காலடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் கமல், அரசியல் கட்சியை எப்போது தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பில் ரஜினி என அதிரடி அரசியல் நிகழ்வுகளுக்கான ஆண்டாக 2018 அமைந்தது எனலாம். மொத்தத்தில் தமிழக அரசியல், கடந்த ஆண்டில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலையிலேயே இருந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

உண்மையான அ.தி.மு.க !? 

சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பெற்ற வெற்றிக் களிப்போடு, `நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க; எங்களால்தான் அம்மாவின் ஆட்சியை இந்த மக்களுக்குத் தர முடியும்' எனச் சொல்லி, அ.ம.மு.க என்ற புதியக் கட்சியைத் தொடங்கினார் டி.டி.வி. தினகரன். தினகரனுடன் நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட நிர்வாகியுமான செந்தில் பாலாஜி, மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார்.

கரூரில் மிகப்பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை நடத்தி 30,000 பேரை தி.மு.க-வில் இணையவைத்துள்ளார். தி.மு.க-வில் இணைந்தவர்கள் பெரும்பாலும், அ.தி.மு.க மற்றும் அதிலிருந்து பிரிந்து சென்ற அ.ம.மு.க-வைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தி.மு.க :

கருணாநிதி மறைவுக்குப் பின்னர், கட்சியின் தலைவராகியுள்ள மு.க.ஸ்டாலின், கட்சியைப் பலப்படுத்துவதில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார். சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்து, இந்திய அளவில் தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்தார் என்றாலும், பல மாவட்டங்களில் உள்கட்சிப் பூசல்கள் புகைந்து வருவதையும் தவிர்ப்பதற்கில்லை.
தி.மு.க. பலம் வாய்ந்ததாகக் கருதப்பட்டாலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, போட்டி பேரணியை சென்னையில் நடத்திய மு.க. அழகிரி, தொடர்ந்து அச்சுறுத்தலாகவே நீடிக்கிறார்.

அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கான விடை 2019-ல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ``நாடும் நமதே; நாற்பதும் நமதே" போன்ற வசனங்கள் இப்போதே எழத் தொடங்கி விட்டன. என்றாலும், தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்பகால கட்சித் தொண்டர்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய கடமை அந்தக் கட்சிக்கு, வரும் ஆண்டில் மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.

காங்கிரஸ்: 

தமிழகத்தில் 1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க உடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் வெற்றிபெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது காங்கிரஸ் கட்சி. அதன் பின்னர், தமிழகத்தில் அக்கட்சி மிகப்பெரிய அளவில் எந்தவொரு வெற்றியையும் பெற்றுவிடவில்லை. ஆனால், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவிக்கான போட்டி என்னவோ இப்போதும் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கிறது. காமராஜர் காலத்திலிருந்து, தமிழ்நாடு முழுவதும் கட்சிக்குச் சொந்தமாக உள்ள கட்டடங்கள் மற்றும் சொத்துகளே, மாநிலத் தலைவர் போட்டிக்கான காரணம் எனலாம்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழகத்திற்கான மேலிடப் பார்வையாளருமான குலாம் நபி ஆசாத், 2017 டிசம்பர் 25-ம் தேதி சென்னை வந்திருந்தபோது, கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு அவரைச் சந்தித்தார். பின்னர் பேட்டியளித்த குஷ்பு, மாநில காங்கிரஸ் தலைவரை மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார். 

இந்தச் சூழலில், சமீபத்தில் சமூக வலைதளங்களில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் என்று தெரிவித்து செய்திகள் வெளியாகின. ஆனால், பீட்டர் அல்போன்ஸை மாநில தலைவராக்குவதில் மிகப்பெரும் தலைவலி கட்சி மேலிடத்திற்கு உள்ளதாகவே தெரிகிறது. தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கராத்தே தியாகராஜன், ``எங்களைப் போன்ற உண்மையான தொண்டர்கள் பலரும் பீட்டர் அல்போன்ஸைத் தலைவராக ஏற்றுக்கொள்ளமாட்டோம். அவர் காங்கிரஸிலிருந்து வெளியேறி மீண்டும் வந்து இணைந்தவர்” என்றார். ``தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனால் அந்தப் பதவிக்கு வர முடியாது" என்று தற்போதைய மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கொதிப்புடன் பேசினார். எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு வரும் புத்தாண்டில் புதிய தலைவர் நியமிக்கப்படுவது உறுதி என்றே அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பாட்டாளி மக்கள் கட்சி:

``பா.ம.க-வில் தனியொரு அடையாளம் பெற்றவராகத் திகழ்ந்த காடுவெட்டி குரு, மரணமடைந்த நிலையில், அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 1-ம் தேதி புதியக் கட்சி தொடங்க உள்ளோம்” என குருவின் உறவினர்கள் மயிலாடுதுறையில் அண்மையில் நடந்த படத்திறப்பு விழாவில் தெரிவித்தனர். பா.ம.க-வில் உரிய முறையில் நடத்தவில்லை என்று காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதால், பா.ம.க-வும் பிளவுபடக்கூடிய சூழலில் உள்ளது.

``பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, பா.ம.க மீது சுமத்தப்படும் சாதிய அடையாளத்திலிருந்து வெளிவர முயன்று கொண்டிருக்கிறார். அதற்காகவே குருவின் குடும்ப நிகழ்வுகளில் கவனம் செலுத்த மறுக்கிறார்" என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, புத்தாண்டில் பா.ம.க-விலிருந்து பிரிந்து மற்றொரு கட்சி உதயமாகக் கூடும் என்று தெரிகிறது.

தே.மு.தி.க.

மிழகத்தில் 2016-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், `தி.மு.க-வுடன் விஜயகாந்த் கூட்டணி அமைப்பார்' என எதிர்பார்த்திருந்த நிலையில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தே.மு.தி.க., தேர்தலைச் சந்தித்ததால், அதற்க எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகியவர்கள் காணாமல் போனார்கள். 
தே.மு.தி.க. பொருளாளராக பிரேமலதா பொறுப்பேற்றார். விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், `தலைவர் (விஜயகாந்த்) சொன்னால் அரசியலுக்கு வருவேன்' என்று கூறி, அரசியலுக்கு அடித்தளம் போட்டுள்ளார். இதுபோன்ற திடீர் ஏற்பாடுகளுக்குக் காரணம், தே.மு.தி.க-வில் உருவான கோஷ்டி மோதலா என்ற சந்தேகம் எழுகிறது.

இதுபோன்ற பல சுவாரஸ்யமான இன்னும் அதிரடி அரசியல் நிகழ்வுகளுக்காகக் காத்திருக்கிறது 2019-ம் ஆண்டு....

பின் செல்ல