Published:Updated:

அப்போலோவில் ரூ.1.17 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்? - அமைச்சர் சி.வி.சண்முகம் புதுக் கணக்கு

ஜெ.முருகன்
அப்போலோவில் ரூ.1.17 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்? - அமைச்சர் சி.வி.சண்முகம் புதுக் கணக்கு
அப்போலோவில் ரூ.1.17 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்? - அமைச்சர் சி.வி.சண்முகம் புதுக் கணக்கு

``அப்போலோ மருத்துவமனையில் ரூ.1.17 கோடிக்கு இட்லி, தோசை, உப்புமா சாப்பிட்டது யார்?” அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ``கட்சி நிர்வாகத்தையும் தலைமைச் செயலகத்தையும் நிர்வாகம் செய்துகொண்டிருந்த அம்மா அவர்கள் திடீரெண்டு ஒருநாள் இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர்கள் மருத்துவமனையில் இருந்த 75 நாள்களும், அன்றைக்கு முதல்வராக இருந்தவர் உட்பட எந்த அமைச்சர்களும் அம்மாவைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதுதான் உண்மை. காலை முதல் இரவு வரை நாங்கள் அந்த மருத்துவமனையில் இருந்தோம். ஆனால், இன்று அம்மா இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார், உப்புமா சாப்பிட்டார் என்று சொல்லி 1.17 கோடி ரூபாய் மருத்துவ பில்லிலே சேர்க்கப்பட்டிருக்கிறது. யார் சாப்பிட்டது அந்த இட்லியையும் தோசையையும் உப்புமாவையும் ? அம்மா அவர்கள் சாப்பிட்டார்களா ? எனக்கு உடல்நிலை சரியில்லாமல் நான் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் என்னைப்  பார்க்க வரும் நபர்களில் ஒருவர் என் அறையில் தங்கிக்கொள்ளலாம். மற்றவர்கள் வீட்டிலோ அல்லது வெளியிலோ அறை எடுத்துத் தங்கிக்கொள்ளலாம். அதுதான் முறை. டாட்டா, பிர்லா உட்பட எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், ஒருவர் மட்டுமே அவருடன் தங்குவார். அவர்களுக்கு வேண்டியவர்கள் வருவார்கள், பார்ப்பார்கள் சென்றுவிடுவார்கள்.

ஆனால், ஒரு மருத்துவமனையையே உல்லாச விடுதியாக மாற்றி, சசிகலாவைத் தவிர அம்மாவால் விரட்டியடிக்கப்பட்ட ஒட்டுமொத்தக் குடும்பமும் அங்கேயே தங்கியிருந்து 1.17 கோடி ரூபாய்க்கு இட்லியும் தோசையும் சாப்பிட்டிருக்கிறார்கள். இவர்கள் உண்மையில் அம்மாவுக்கு மருத்துவம்தான் பார்த்தார்களா? இதில் ஏதோ மர்மம் அடங்கியிருக்கிறது. இதுகூடப் பரவாயில்லை. ஆனால், இன்று அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அம்மா இறப்பில் இருக்கும் மர்மத்தைக் கண்டறிய ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை அதில் மருத்துவர்கள் உட்பட பல்வேறு தரப்பைச் சார்ந்த 140 பேர் விசாரணை செய்யப்பட்டிருக்கின்றனர். அதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு அதிர்ச்சியான தகவல் ஆணையத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆணையத்தின் வழக்கறிஞரே அந்த ஆணையத்தில் மனு ஒன்றை அளித்திருக்கிறார். இதுவரை அந்த ஆணையத்தில் எதிர்தரப்பு மனுதாரார்களாக சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனை பெயர் மட்டும்தான் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று கூடுதலாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ், தற்போதைய சுகாதாரச் செயலாளராக இருக்கும் ராதாகிருஷ்ணன் இருவரையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்த்திருக்கிறார்கள். இன்று அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள். அம்மாவின் மரணம் தொடர்பாக ஆணையத்துக்கு முன்னுக்குப் பின் தவறான தகவல்களைத் தந்துகொண்டிருக்கிறார்கள். பொய்யான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆவணங்களை மறைத்திருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் ஆணையத்தில் ஒரு தகவலைத் தெரிவித்திருக்கிறார். அந்தத் தகவலைக் கேள்விப்பட்டதிலிருந்து அ.தி.மு.க-வின் தொண்டர்களும் பொதுமக்களும் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள். அம்மாவுக்கு ஆஞ்சியோகிராம் அறுவைசிகிச்சை செய்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று மூன்று மருத்துவர்கள் தெரிவித்தும் அவருக்கு அந்த சிகிச்சை செய்யப்படவில்லை. அப்பல்லோ மருத்துவமனையின் மூன்று மருத்துவர்களில் ஒருவர் இதைக் கூறியிருக்கிறார்.

இந்தக் காலத்தில் மிகச் சாதாரணமாகிவிட்ட அந்த சிகிச்சையை அம்மாவுக்கு செய்யவிடாமல் தடுத்தது யார், தவறான தகவலைத் தந்தது யார், தவறான மருத்துவ சிகிச்சையை அளித்த மருத்துவர் யார், அந்த மருத்துவமனையின் நோக்கம் என்ன? அந்த மருத்துவனையை ஆட்டிப் படைத்தது யார் ? ஆஞ்சியோகிராம் சிகிச்ச்சை செய்தால் அம்மா பிழைத்துவிடுவார்கள் என்று நினைத்தது யார் என்ற உண்மைகள் தெரியப்பட வேண்டும். அம்மா அவர்களுக்கு வெளி நாட்டில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் பல மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அம்மா அவர்களை விமான ஆம்புலன்ஸ் மூலம் வெளிநாடு கொண்டு சென்று மருத்துவ உதவிகளைச் செய்கிறோம் என்று மத்திய அரசு கூறியபோது அதைத் தடுத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இன்று சுகாதாரத்துறை செயலாளராக இருக்கும் ராதாகிருஷ்ணன், அம்மா அவர்களுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளித்தால் இந்திய மருத்துவர்களின் மதிப்பும் மரியாதையும் கெட்டுவிடும் என்று கூறியிருக்கிறார். நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதுதான் முக்கியமே தவிர மருத்துவர்களின் மரியாதை காப்பாற்றப்படுவது முக்கியம் இல்லை. அம்மாவின் உயிரைக் காப்பாற்றுவதைவிட இந்தியாவில் உள்ள மருத்துவர்களின் கௌரவம்தான் முக்கியம் என்று சொன்ன சுகாதாரத் துறைச் செயலரின் பின்னணியை இந்த அரசு உடனே விசாரிக்க வேண்டும்.

அதேபோல அம்மாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று சொன்னபோது, ‘தமிழக அரசின் அமைச்சரவைக்கு அதைத் தெரிவித்துவிட்டேன். அதை அமைச்சரவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பொய்யான தகவலை ஆணையத்தில் தெரிவித்திருக்கிறார் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ். மிகப்பெரிய ஒரு குற்றச்சாட்டை தமிழக அமைச்சரவையின் மீது அவர் வைத்திருக்கிறார். அம்மா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவர் இறக்கும்வரை அமைச்சரவை கூட்டப்படவே இல்லை. ஆனால், அந்தப் பொய்யைச் சொல்லியிருக்கிறார். அதை அவராகச் சொன்னாரா அல்லது அவரை சொல்லத் தூண்டியது யார் ? அப்படியென்றால் நாங்கள் சந்தேகப்பட்டதுபோல, மக்கள் சந்தேகப்பட்டதுபோல அம்மாவின் இறப்பில் மர்மம் இருப்பது தற்போது உறுதியாகியிருக்கிறது. அதனால் இறுதி அறிக்கைக்குக் காத்திருக்காமல் ஓர் இடைக்கால அறிக்கையை ஆணையம் தமிழக அரசுக்கு உடனே அளிக்க வேண்டும். ஆணையத்தின் மூலம் விசாரித்தால் இந்தக் குற்றத்தைக் கண்டுபிடிக்க முடியாது. காவல்துறை மூலம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்து அவர்கள் மூலம் விசாரிக்கப்பட வேண்டும். ஆணையம் தன் பணியைச் செய்யட்டும். ஆனால் அரசு உடனே ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து சம்பந்தப்பட்டவர்களை காவலில் எடுத்து அம்மா இறப்பில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும்.

அம்மாவின் மரணம் சந்தேகத்துக்குரிய மரணம் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 174-ன்படி சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து, இதில் சம்பத்தப்படவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து விசாரிக்கப்பட வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை” என்றார்.