மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - பன்னீர்செல்வம் (சேலம்)

என்ன செய்தார் எம்.பி? - பன்னீர்செல்வம் (சேலம்)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - பன்னீர்செல்வம் (சேலம்)

“எடப்பாடியின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்!”

#EnnaSeitharMP
#MyMPsScore

சுமார் 20 ஆண்டுகளுக்கு முந்தைய நிஜக்கதை இது. சேலம் மாவட்டம், பொன்னம்மாப்பேட்டை புத்துமாரியம்மன் கோயில் ஏரியா அது. அங்கு கேபிள் டி.வி கட்டணம் வசூலிக்க வீடு வீடாகச் சென்றார் ஒல்லியான ஓர் இளைஞர். பல வீடுகளில், ‘ஏம்ப்பா எத்தனை தடவை வாங்குவீங்க... இப்பதான் உங்க அண்ணன் வாங்கிட்டுப் போனாரு...” என்று சொன்னார்கள். பல வீடுகளில் இதையே சொல்ல, கடுப்பான அந்த இளைஞர் ஊர் நாட்டமையான தன் அப்பாவிடம் இதைப் புகாராகச் சொன்னார். அவரோ, “விடுடா கண்ணா, அவன் உன்கூடப் பொறந்த அண்ணன்தானே... அவனும் வக்கீலுக்குப் படிச்சிட்டு சும்மாதான் இருக்கான்...” என்று சமாதானப்படுத்தினார். அப்படி சும்மா இருந்த இளைஞர்தான், இன்று சேலம் நாடாளுமன்ற எம்.பி பன்னீர்செல்வம். சேலம் தொகுதியாக எம்.பி-யாக ரங்கராஜன் குமாரமங்கலம், வாழப்பாடி ராமமூர்த்தி, செல்வகணபதி, தங்கபாலு, செம்மலை எனப் பெரும் தலைகளே இருந்த வரலாற்றை மாற்றி, வார்டு கவுன்சிலராக இருந்தவர் எம்.பி பன்னீர்செல்வமாக உருவெடுத்தார். தொகுதிக்கு அவர் செய்தது என்ன?

“கட்சியில் செம்மலையை ஓரம்கட்டவே எடப்பாடி பழனிசாமியின் சிபாரிசால் பன்னீர்செல்வத்துக்கு சீட் கிடைத்தது. எடப்பாடி எள் என்றால், பன்னீர் செல்வம் எண்ணெய் ஊற்றித் தோசையே சுட்டுவிடுவார். ஆனால், சொல்லிக்கொள்ளும்படியாகத் தொகுதிக்கு எதுவும் அவர் செய்யவில்லை” என்று கொதிக்கிறார்கள் சேலம்வாசிகள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன், “கட்-அவுட்களிலும், சேலத்தில் எடப்பாடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும்தான் அவரைப் பார்க்கலாம். எட்டுவழி சாலையில் 20 கி.மீ இவரது தொகுதிக்குள் வருகிறது. நூற்றுக்கணக்கான விவசாயிகளின் நிலங்களும், ஆயிரக்கணக்கான தென்னை மரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. பாதிக்கப்பட்ட விவசாயிகளை அவர் சந்திக்கக்கூட இல்லை. சேலம் டவுன் ரயில் நிலையத்திலிருந்து திருச்சி, தஞ்சாவூருக்கு ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், கொண்டலாம்பட்டியில் ரயில் நிலையம் அமைத்து சேலம் - கரூர் பயணிகள் ரயிலை அங்கு நிறுத்திச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் எம்.பி கண்டுகொள்ளவில்லை” என்றார்.

என்ன செய்தார் எம்.பி? - பன்னீர்செல்வம் (சேலம்)

சேலம் நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜெயசீலன், “சேலம் ரயில்வே கோட்டத்துக்கு ரூ.800 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆனால், சேலத்திலிருந்து பிரத்யேகமாக முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படவில்லை. சேலம் தனி ரயில்வே கோட்டமாக இருந்தும் சென்னையிலிருந்து (எழும்பூர் - சேலம்) ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. மற்றவை எல்லாம் சேலத்தை கடந்துசெல்லும் ரயில்கள்தான்.

சேலத்தில் இருந்து சென்னைக்குப் பகல் நேர ரயில் இயக்கப்படுவதற்கும் எம்.பி முயற்சி செய்யவில்லை. சேலத்தில் விமான நிலையத்தை  சரக்கு விமானங்கள் வந்துபோகும்படி விரிவுபடுத்தியிருந்தால் தொழில் வளர்ச்சிக்கு உதவியாக இருந்திருக்கும்.  சேலத்திலிருந்து ஜவுளி, பூ, ஜவ்வரிசி ஏற்றுமதி செய்யலாம். இதற்கெல்லாம் எம்.பி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செவ்வாய்ப்பேட்டையும் லீ பஜாரையும் இணைக்கும் மேம்பாலப்பணி தொய்வடைந்துள்ளதால், அங்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், வணிகர் சங்கப் பிரதிநிதிகளை ஆறுதலுக்காகக்கூட அவர் சந்திக்கவில்லை” என்றார் வேதனையுடன்.

பன்னீர்செல்வத்தை எதிர்த்துப்போட்டியிட்ட தி.மு.க வேட்பாளரான உமாராணி, “பன்னீர் செல்வத்துக்கு, தான் ஒரு எம்.பி என்கிற நினைப்பே இல்லை. இன்னும் அவர் கவுன்சிலர் போலவே இருக்கிறார். சேலத்துக்கு முதல்வர் வரும்போதெல்லாம் முதல் ஆளாகப்போய் அவர் பின்னால் ஒளிந்துகொள்வதுதான் எம்.பி-யின் முக்கிய வேலையாக இருக்கிறது. சேலம் - ஓமலூர் சாலையில் வெள்ளைக்கரடு பகுதியில் தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஐ.டி பார்க் ஆரம்பிக்கப்பட்டது. அதை மேம்படுத்த அவர் எந்த முயற்சியும் செய்யவில்லை. சேலம் உருக்காலையைத் தனியாருக்குக் கொடுக்கும் முயற்சிகளில் மத்திய அரசு 90 சதவிகிதம் பணிகளை முடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். அதைத் தடுக்கவும் எம்.பி குரல் கொடுக்கவில்லை” என்றார் கோபமாக.

பா.ம.க சார்பில் பன்னீர்செல்வத்தை எதிர்த்துப் போட்டியிட்ட அருள், “ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேலம் அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகின்றன. ஒரு வேலைகூட நடக்க வில்லை. சேலத்தில் பெரிய தொழிற்சாலைகள் இல்லாததால் வேலைவாய்ப்பு இல்லை. நெசவாளர்களின் மேம்பாட்டுக்காக ஓமலூரில் ஜவுளிப் பூங்கா கொண்டுவரப்படும் என்று சொன்னார்கள். அதுவும் நிறைவேற்றப்பட வில்லை. அணைமேடு, பொன்னம்மாபேட்டை பகுதிகளில் ரயில்வே மேம்பாலம் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. முள்ளுவாடி கேட் அருகே கட்டப்பட்டுவரும் மேம்பாலப் பணிகள் தாமதமாக நடப்பதால், மக்கள் அவதிப்படுகிறார்கள். இவற்றைத் தீர்க்க எதையும் எம்.பி செய்யவில்லை” என்றார்.

காவிரி உபரிநீர் நடவடிக்கைக் குழுவின் அமைப்புச் செயலாளர் ஏழுமலை, “மேட்டூரிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை வீணாக்காமல் நீரேற்று முறையில் (lift-சரபங்கா நதிக்குக் கொண்டுவந்தால் மேட்டூர் அணையின் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஏரிகள் நிரம்பும். இதனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடிநீர் மட்டமும் உயரும். இந்தக் கோரிக்கையைக் கண்டுகொள்ளாத எம்.பி., வெள்ளரி ஏரிக்குக் காவிரி ஆற்றிலிருந்து நீரேற்று முறையில் தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளார். அந்த ஏரியைச் சுற்றியுள்ள நிலங்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுடையது என்பதுதான் இதற்குக் காரணம்” என்றார்
எம்.பி பன்னீர்செல்வம் என்ன சொல்கிறார்? நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம். “நான் எம்.பி ஆவதற்கு முன்பு சேலம் விமான நிலையம் இயங்காமல் இருந்தது. நாடாளுமன்றத்தில் நான் பேசியதாலேயே சேலம் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சேலம் உருக்காலையைத் தனியார்மயமாக்கக் கூடாது என்றும்  நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன். சரக்கு ரயில் பெட்டித் தொழிற்சாலையை சேலம் இரும்பாலைக்குக் கொண்டுவந்தால், வருமானம் அதிகரிக்கும்; வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றும் வற்புறுத்தினேன். சேலம் - சென்னை பகல்நேர ரயிலுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. அதனால், அந்த ரயிலை நிறுத்திவிட்டார்கள். சேலத்தில் என்ஜின் பராமரிப்புப் பிரிவு இல்லாததால், சேலத்தில் இருந்து ரயில்கள் புறப்படுவதில் சிக்கல்கள் உள்ளன. எனவே, இங்கு என்ஜின் பராமரிப்புப் பிரிவு கொண்டுவர வலியுறுத்தி வருகிறேன். திருவாக்கவுண்டனூர், குரங்குச்சாவடி, ஏ.வி.ஆர் ரவுண்டானா ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு என்.ஓ.சி பெற்றுக்கொடுத்தேன். அதன் பிறகே, மேம்பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டன. அதேபோல, உருக்காலை அருகே ஒரு மேம்பாலம் கட்டப்பட்டுவருகிறது. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு தி.மு.க ஆட்சியின்போது, ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக டெண்டர் விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட குளறுபடிகளால் திட்டம் தாமதமானது. இப்போது அந்தத் திட்டத்துக்கு  ரூ.114 கோடியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். 96 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டது. விரைவில் அந்தத் திட்டம் முழுமையடையும். பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்காக விவசாயிகளாக முன்வந்து நிலத்தைக் கொடுத்துள்ளனர். சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான முயற்சியில் முதல்வர் உள்ளார். மேட்டூர் அணையின் உபரிநீரை சேலத்துக்குப் பயன்படுத்துவதற்கான ஆலோசனைக் குழுவை முதல்வர் நியமித்துள்ளார். முதலமைச்சர் வந்தால் அவர் பின்னாலேயே போகிறேன் என்று சொல்கிறீர்கள். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் ஒரு எம்.பி கலந்துகொள்வதில் என்ன தவறு? அவ்வப்போது தொகுதி மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்” என்றார். 

சேலம் ஜலகண்டாபுரத்தை அடுத்துள்ள சாணாரப்படி கிராமத்தை எம்-பி தத்தெடுத்துள்ளார். அந்தக் கிராமம் எப்படி இருக்கிறது என்பதை அறிய நேரில் சென்றோம். அங்கு சுமார் 70 வீடுகள் மட்டுமே உள்ளன. அந்தக் கிராமத்தை எம்.பி தத்தெடுத்துள்ளார் என்பதற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. “எம்.பி-யா? யாருங்க அவரு... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் விழா நடத்தினாங்க. அப்ப அவரைப் பார்த்ததுதான். ‘ஒரு பொதுக்கழிப்பிடம் கட்டித்தரணும்’னு பல வருஷமா கேட்கிறோம். அதைக்கூட அவரால செய்ய முடியலை. வீட்டுக்கு வீடு ரெண்டாயிரம் ரூபாய் வசூலிச்சுட்டு கடமைக்கு ஒரு கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்காங்க. வடிகால் வசதி இல்லாததால் அதைப் பயன்படுத்த முடியல. கழிவுகளை வெளியேற்ற வழி இல்லாம வீட்டுக்கு வீடு சண்டை நடக்குது. சாக்கடை அமைச்சுக்கொடுங்கன்னு கேட்டோம், அதையும் செஞ்சுதரல. தெருவிளக்குகள் இல்லை” என்கிறார்கள் கடுப்பாக!

உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- வீ.கே.ரமேஷ், எம்.புண்ணியமூர்த்தி
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - பன்னீர்செல்வம் (சேலம்)
என்ன செய்தார் எம்.பி? - பன்னீர்செல்வம் (சேலம்)
என்ன செய்தார் எம்.பி? - பன்னீர்செல்வம் (சேலம்)

எம்.பி அலுவலகம் எப்படி இருக்கிறது?

பொ
ன்னம்மாபேட்டையில் குடியிருக்கும் எம்.பி பன்னீர்செல்வம், அங்கம்மாள் காலனியில் அலுவலகம் அமைத்திருக்கிறார். அலுவலகம் காலை 11 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படுகிறது. அரிசிபாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் இரண்டு கிட்னிகளும் பழுதாகி நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறார். மருத்துவ உதவிகேட்டு எம்.பி-யிடம் அவர் மனு அளிக்கச் சென்றார். இதுகுறித்து நம்மிடம் பேசிய சுரேஷ், “என்னால் நடக்கவே முடியல. மனு கொடுக்க என் மனைவிதான் இரு முறை எம்.பி ஆபீஸுக்குப் போனாங்க. ஆபீஸ் பூட்டியே இருக்குன்னு திரும்பி வந்துட்டாங்க. மூணாவது முறை என் மனைவியுடன் சிரமப்பட்டு நானும் போனேன். ஆபீஸ்ல எம்.பி-யோட பி.ஏ ரவிசந்திரன் இருந்தார். என் பிரச்னையைக் கேட்டவர், ‘கிட்னி தானமாகத் தர யாரவது இருந்தால் சொல்லுங்க. சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்யுறோம்’னு சொன்னார். அப்போ எம்.பி-யும் அங்கதான் இருந்தார். ஆனா, அவரை பார்க்கவே எங்களை விடலை” என்றார் சோகமாக.

என்ன செய்தார் எம்.பி? - பன்னீர்செல்வம் (சேலம்)
என்ன செய்தார் எம்.பி? - பன்னீர்செல்வம் (சேலம்)