Published:Updated:

''விழிப்பு உணர்வுக்குப் படம் எடுத்தாலும் தடை பண்ணுறாங்க.''- தடையை மீறி வெளியான குறும்படம்!

இ.லோகேஷ்வரி
ஹரிகரன்.கு
''விழிப்பு உணர்வுக்குப் படம் எடுத்தாலும் தடை பண்ணுறாங்க.''- தடையை மீறி வெளியான குறும்படம்!
''விழிப்பு உணர்வுக்குப் படம் எடுத்தாலும் தடை பண்ணுறாங்க.''- தடையை மீறி வெளியான குறும்படம்!

'மரணத்தின் மடியில் மழலைகள்'  குறும்படத்தை வெளியிடத் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது காவல் துறை. அந்தத் தடையை மீறி பத்திரிகையாளர் சந்திப்பில் குறும்படம் திரையிடப்பட்டது.

கடந்த மே மாதம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் நூறாவது நாள் நடந்த கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில், பத்தொன்பது அப்பாவி மக்கள் காவல் துறையால் கொல்லப்பட்டனர். இதையடுத்து, தூத்துக்குடி மக்கள் நலனுக்காக என்று 'மரணத்தின் மடியில் மழலைகள்' என்ற குறும்படத்தை தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் தயாரித்திருந்தார். இப்படத்தை புகழேந்தி தங்கராஜ் இயக்கியிருந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்தைத் திரையிட அனுமதி மறுக்கப்படுவதாக திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அந்த உத்தரவில், ''அரசு மற்றும் காவல் துறையின் அனுமதி பெறாமல் வெளியிடுவதற்குக் காவல் துறை சார்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படுகிறது. மேலும், குறும்படத்தை வெளியிட அனுமதி மறுக்கப்படுகிறது. மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இன்று (31.12.18) திரையிடல் நடப்பதில் குழப்பம் ஏற்பட்டது. காவல் துறையின் இந்த போக்கைக் கண்டித்து, சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் சந்திப்பு ஏற்பாடு இன்று காலை நடந்தது. அப்போது, தடையை மீறி அந்தக் குறும்படம் திரையிடப்பட்டது. 

 இதுகுறித்து தமிழ் நாடு வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் நம்மிடம் பேசுகையில், ''இக்குறும்படம் ஸ்டெர்லைட் ஆலை  சம்பந்தப்பட்டது கிடையாது. வளர்ச்சி என்ற பெயரில் நஞ்சு பரப்பும் ஆலைகளை உருவாக்கி, நம் வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவது குறித்தே இந்தப் படம் எடுக்கப்பட்டது. ஏற்கெனவே, போபால் விஷ வாயுக் கசிவால் எண்ணற்ற மக்கள் தங்கள் வாழ்வையே இழந்து நிற்கின்றனர். அதுபோன்ற விபரீதங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக, விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாங்கள் இதை  உருவாக்கினோம். ஏற்கெனவே நடக்கவிருந்த இரண்டு திரையிடல்களைக் காவல் துறையிலிருந்து வெளியிட வேண்டாம் என அழுத்தம் தரப்பட்டது. ஆனால், குறும்படத் திரையிடலுக்குகெல்லாம் அனுமதி பெறத் தேவையில்லை எனத் தெரியவந்ததால், பத்திரிகையாளர் மத்தியில் இக்குறும்படத்தைத் திரையிட்டோம்.  மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த படம் எடுத்தாலும் தடை செய்கிறார்கள். ஆனால்,  காவல்துறை இதுபோல செயலாற்றுவது கருத்துரிமையை கேள்விக்குள்ளாக்கும்  செயல். அதுமட்டுமின்றி  நாங்கள்  இதை  மக்கள் மத்தியில் திரையிட உள்ளோம், அதற்கு நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்றாலும் அதற்கும் தயாராகவே உள்ளோம்'' என்றார்.