Published:Updated:

`ஜனவரி 28-ல் திருவாரூர் இடைத்தேர்தல்!' தேர்தல் ஆணையம் அறிவிப்பு

`ஜனவரி 28-ல் திருவாரூர் இடைத்தேர்தல்!' தேர்தல் ஆணையம் அறிவிப்பு
`ஜனவரி 28-ல் திருவாரூர் இடைத்தேர்தல்!' தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தி.மு.க-வின் முன்னாள் தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டிருந்த காவேரி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் உயிரிழந்த பின்பு திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக அ.தி.மு.க எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் உயிரிழந்ததை அடுத்து திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

`ஜனவரி 28-ல் திருவாரூர் இடைத்தேர்தல்!' தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுடன் இந்தத் தொகுதியின் தேர்தலும் நடைபெறும் எனப் பேசப்பட்டது. அதற்காகத் தமிழக அரசியல் கட்சிகளும் காத்திருந்தன. ஆனால், பருவமழை பெய்ய உள்ளதைக் காரணம் காட்டி தமிழகத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகினார். அதன்படி, இப்போதைக்குத் தேர்தல் இல்லை எனத் தேர்தல் ஆணையமும் அறிவித்தது. 

`ஜனவரி 28-ல் திருவாரூர் இடைத்தேர்தல்!' தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இதனால் ஆறு மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கான அறிவிப்பானை வரும் 3-ம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 3-ம் தேதி தொடங்கவுள்ளது.

ஜனவரி 10-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் எனவும், ஜனவரி 11-ம் தேதி முதல் வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் எனவும் மனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் ஜனவரி 14-ம் தேதி எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31-ம் தேதி நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்றிலிருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

`ஜனவரி 28-ல் திருவாரூர் இடைத்தேர்தல்!' தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பாக தி.மு.க பிரமுகர் டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையே, தேர்தல் அறிவிப்பை அடுத்து தமிழக கட்சிகள் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. தேர்தல் ரேஸில் முதல் ஆளாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளரை அறிவிக்க உள்ளது. ஆம், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி என டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. மேலும், வரும் 3-ம் தேதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க உள்ளதாகவும் அக்கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.