
“பெருமைக்காக பதவிகளை சுமக்கிறார்”
#EnnaSeitharMP
#MyMPsScore
தி.மு.க தொடர்ச்சியாக இரண்டு தடவை வென்ற திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியை, 2009-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க தொகுதியாக மாற்றியவர் டாக்டர் வேணுகோபால். ‘எளிமையானவர், எளிதில் அணுகக்கூடியவர்’ என்ற பெயரால்தான், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளித்தார் ஜெயலலிதா. தனக்கு எதிராகப் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமாரை மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற சாதனையைப் படைத்தார் வேணுகோபால். தொடர்ந்து பத்தாண்டுகளாக எம்.பி-யாக இருக்கும் வேணுகோபால், திருவள்ளூருக்கு என்ன செய்திருக்கிறார்?
திருவள்ளூர் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் ஜெயபால்ராஜ், ‘‘திருவள்ளூரிலிருந்து தினசரி ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் ரயில்களில் வெளியூர் செல்கிறார்கள். ஆனால், எட்டு எக்ஸ்பிரஸ் ரயில்களைத் தவிர மீதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் எதுவும் இங்கே நிற்பதில்லை. மாவட்டத் தலைநகருக்கே இந்த அவலம். இதுகுறித்து எம்.பி-யிடம் பல தடவை கோரிக்கை வைத்துவிட்டோம். ஆனால் அதை, எம்.பி கண்டுகொள்ளவே இல்லை. இவ்வளவுக்கும் இவர் தேசிய ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனை கவுன்சில் உறுப்பினராக வேறு இருக்கிறார். அந்தப் பதவியால் என்ன பிரயோஜனம்?” என்று சலித்துகொண்டார்.

பொன்னேரி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான பொன்.ராஜா, ‘‘ஆங்கில மருத்துவம் படித்துள்ள டாக்டர் வேணுகோபாலுக்கு ஏழை மக்களின் சுகாதாரப் பிரச்னைகள் நன்கு தெரியும். கடந்த 10 ஆண்டுகளாக எம்.பி-யாக இருக்கும் அவர், இப்போதுதான் திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையைச் சற்று மேம்படுத்தியுள்ளார். ஆனால், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வசதிகள் இல்லை. பொன்னேரி சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பொன்னேரி மருத்துவமனைக்குப் போனால், சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும் போகுமாறு அலைக்கழிக்கிறார்கள். தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து மருத்துவமனைக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்க எந்த நடவடிக்கையும் எம்.பி எடுக்கவில்லை. புதிய மருத்துவ உபகரணங்களை வாங்கித்தரவில்லை. தேவையான அளவில் மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் உதவியாளர்களும் இல்லை. இதனால், மக்கள் படும் அவதிகள் கொஞ்சநஞ்சமல்ல” என்றார்.
திருவாலங்காடு தி.மு.க ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம், ‘‘கடம்பத்தூர் ஒன்றியத்தில் எம்.பி நிதியில் நடைபெற்ற அனைத்து வேலைகளிலும் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முறைகேடுகளைச் செய்துள்ளனர். திருவள்ளூர் தொகுதி முழுவதும் ஆளும்கட்சியின் அதிகார பலத்தில் இருப்பவர்களே அனைத்து அரசு ஒப்பந்தங்களையும் எடுக்கிறார்கள். தொகுதி எம்.பி-க்கும் அவர்களுக்கும் எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. ‘பசை’யான அந்த டீலிங்குகள் முடிந்த பின்பே ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. அதேசமயம், மக்களுக்குத் தேவையான திட்டப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் கொள்ளை லாபம் கிடைக்கும் வேலைகளுக்கு மட்டுமே டெண்டர் விடுகிறார்கள். திருவள்ளூர் அருகே உள்ள அதிகத்தூர் - கடம்பத்தூரை இணைக்கும் ஆற்றுப்பாலம் ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகளாக அந்தப் பணி கிடப்பில் உள்ளது. புகழ்பெற்ற திருவாலங்காடு சிவன் கோயில், பராமரிப்பின்றி உள்ளது. இதன் பிரமாண்டமான கோயில் தெப்பக்குளம் பாழடைந்து கிடக்கிறது. சென்னை மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வேண்டுதலுக்காக இங்கு வருகிறார்கள். கோயிலில் அடிப்படை வசதிகள், கோயிலுக்கு வருவதற்கான போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை’’ என்று வருத்தப்பட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ்பாபு, ‘‘பட்டாபிராம் ரயில்வே மேம்பாலப் பணி பாதியிலேயே நிற்கிறது. வேப்பம்பட்டில் உள்ள ரயில்வே மேம்பாலப் பணி நடந்தபோது, திருவள்ளூர் அரசு உதவி மக்கள் செய்தித் தொடர்பாளர் சதீஷ்பாபு குடும்பத்தினருக்குச் சொந்தமான இடத்தில் மேம்பாலம் கட்டப்படுவதாக இருந்தது. அப்போதைய அமைச்சர் பி.வி.ரமணா தலையீட்டால் பாலத்தின் வடிவத்தையே மாற்றி அமைக்க முடிவுசெய்தனர். இதுதொடர்பாக ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், பாலம் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாலம் முழுமை பெறாமல் அந்தரத்தில் தொங்குகிறது. ஆளும் கட்சியின் இந்தத் தலையீட்டை எம்.பி தட்டிக் கேட்கவே இல்லை. இதனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அவதிப்படுகின்றனர்” என்றார்.
சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஈக்காடு சங்கர், ‘‘திருவள்ளூர் தொகுதிக்குள் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் ஆகிய பகுதிகள் எல்லாம் தமிழகத்தில்தான் உள்ளனவா என்று சந்தேகமாக உள்ளது. இங்கெல்லாம் சுத்தமான குடிதண்ணீர், தரமான சாலை, மருத்துவ வசதிகள் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. ஏதேனும் விபத்து என்றால், சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்குத்தான் ஓட வேண்டும். இரண்டு தடவை எம்.பி-யாக இருக்கும் வேணுகோபாலுக்கு இதெல்லாம் தெரியும். ஆனாலும், பிரச்னைகளைத் தீர்க்க அவர் அக்கறை காட்டவில்லை. அ.தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர், நாடாளுமன்ற தேசிய ஊரக வளர்ச்சி நிலைக் குழுத் தலைவர், தேசிய ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் கவுன்சில் உறுப்பினர் என்று பல்வேறு முக்கியப் பதவிகளில் இருந்தாலும் உருப்படியாக ஒரு வேலையும் செய்யவில்லை. தேசிய ஊரக வளர்ச்சி குழுத் தலைவர் என்கிற பொறுப்பு சாதாரணமானது அல்ல; ஊரக வளர்ச்சிக்காக பல முன்னோடித் திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகின்றன. மத்திய அரசிடமிருந்து சிறப்பு நிதி பெற்று அவற்றை திருவள்ளூரில் செயல்படுத்தி முன்னோடித் தொகுதியாக மாற்றியிருக்கலாம். ஆனால், வெறும் பெருமைக்காக மட்டுமே பதவிகளைச் சுமந்துகொண்டிருக்கிறார் அவர்...” என்றார் கோபமாக!
‘‘என்னை மீண்டும் தேர்ந்தெடுத்தால், மாவட்டத் தலைநகரான திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி, கேந்திரிய வித்யாலயா பள்ளி, தொழில்நுட்பக் கல்லூரி கொண்டுவருவேன்’’ என்று தேர்தலில் வாக்குறுதி அளித்தார். ஆனால், இவற்றில் எதையும் அவர் கொண்டுவரவில்லை என்றார்கள் தொகுதி மக்கள்.
வேணுகோபால் தத்தெடுத்த திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள அருங்குளம் கிராமத்துக்குச் சென்றோம். தேசியத் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், அருங்குளம் கிராம விவசாயப் பொதுநலச் சங்கப் பிரமுகருமான நாககுமார், “எங்கள் கிராமத்தை எம்.பி தத்தெடுத்தபோது, ‘கழிவுநீர்க் கால்வாய், சாலை, சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து அருங்குளம் ஊராட்சியை மாவட்டத்திலேயே முதன்மை ஊராட்சியாக மாற்றுவேன்’ என்று சபதம் போட்டார். ஆனால், எங்கள் ஊரில் இருக்கும் துணைச் சுகாதார நிலையம் மூடப்பட்டுப் புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால், ஊரில் நோய்வாய்ப்பட்டால் திருவள்ளூர் அல்லது சென்னைக்குதான் செல்ல வேண்டியிருக்கிறது.
இந்தத் துணைச் சுகாதார நிலையத்தை ஆரம்பச் சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எம்.பி கண்டுகொள்ளவில்லை. கொசஸ்தலை ஆற்றிலிருந்து 12 கி.மீ-க்கு அப்பால் இருக்கும் திருத்தணி நகராட்சிக்குக் குடிதண்ணீர் கொண்டுபோகிறார்கள். ஆனால், அருகில் இருக்கும் எங்கள் ஊரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எங்கள் ஊருக்கு வர வேண்டிய தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி, அருகில் உள்ள பூனிமாங்காடு என்ற ஊருக்குப் போய்விட்டது’’ என்று புலம்பினார்.
இவை குறித்து வேணுகோபால் எம்.பி என்ன சொல்கிறார்? ‘‘நான் தத்தெடுத்த அருங்குளம் ஊராட்சியில் உள்ள பிரச்னைகள் எனது கவனத்துக்கு வந்துள்ளன. அவற்றை விரைவில் தீர்ப்பேன். திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சூப்பர் பாஸ்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்துவது குறித்து நான் பலமுறை டெல்லியில் ரயில்வே அமைச்சரைச் சந்தித்து மனு அளித்துள்ளேன். சென்னை ரயில்வே அதிகாரிகளிடமும் வலியுறுத்தியுள்ளேன். நெடுஞ்சாலைப் பணிகள், மேம்பாலப் பணிகள் குறித்து மத்திய அரசிடம் பேசியுள்ளேன். திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்குப் 100 படுக்கைகள் மற்றும் டயாலிஸிஸ் இயந்திரம், கழிவறைகள், குடிநீர் சுத்திகரிப்பு வசதி, கொசு மருந்து அடிக்கும் வாகனம் போன்ற வசதிகளைச் செய்துகொடுத்துள்ளேன். பொன்னேரி மருத்துவமனையிலும் டயாலிஸிஸ் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரயில்வே துறையிலும், ஆவடியில் உள்ள பாதுகாப்புத் தொழிற்சாலையில் தமிழர்களுக்கும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வருடத்துக்கு 45 மூன்று சக்கர மோட்டர் பைக்குகளை எம்.பி நிதியில் வழங்குகிறேன். தனியார் இடங்களில் இயங்கிவந்த 75 ரேசன் கடைகளுக்குச் சொந்தக் கட்டிடங்களை கட்டிக்கொடுத்துள்ளேன். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்து, இயற்கை எரிவாயுத் திட்டமான எல்.என்.ஜி-யை ரூ.5,200 கோடி மதிப்பில் எண்ணூரில் செயல்படுத்தியுள்ளேன். எம்.பி நிதியில் தொடங்கப்பட்ட வேலைகள் உள்ளூர் அரசியல் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டால், அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்? வேப்பம்பட்டு, பட்டாபிராம் மேம்பாலங்கள், கடம்பத்தூர் - அதிகத்தூர் ஆற்றுப்பாலம் ஆகிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த முயற்சி எடுத்துவருகிறேன். தொகுதியைச் சேர்ந்த அனைத்துப் பகுதியினரும் ரயில் மூலம் பெரம்பூரில் வந்து என்னைச் சந்திப்பதற்கு வசதியாக உள்ளது என்பதாலே. என் வீட்டில் அலுவலகம் வைத்துள்ளேன். நான் வெளியூர் சென்றாலோ, டெல்லி சென்றாலோ அலுவலகத்தில் என் உதவியாளர்கள் இருப்பார்கள்’’ என்றார். உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.
- எஸ்.முத்துகிருஷ்ணன்,
இரா. தேவேந்திரன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி



எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?
திருவள்ளூர் தொகுதியில் வேணுகோபாலுக்கு அலுவலகம் இல்லை. சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டு முகவரிக்குக் கோரிக்கை மனுக்களை அனுப்ப வைத்தோம். திருவள்ளூர் புட்லூர் ஜெனித் அனுப்பிய மனுவில், ‘மாவட்டத் தலைநகரில் அரசுக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி இல்லை. அவற்றைக் கொண்டுவர வேண்டும்’ என்று கேட்டிருந்தார். கடம்பத்தூர் ஸ்ரீதர் அனுப்பிய மனுவில், ‘திருவள்ளூர் வழியாகச் செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களும் திருவள்ளூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டிருந்தார். இராமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், ‘கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நல்ல தண்ணீர் கிணற்றை மூடிவிட்டனர். அதைப் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டுவந்தால் குடிநீர் தட்டுப்பாடு தீரும்’ என்று மனு அளித்தனர். இந்த மனுக்கள் எதற்குமே பதில் வரவில்லை. இதுபற்றி வேணுகோபாலிடம் கேட்டபோது, “அந்த மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளேன்’’ என்றார்.

