Published:Updated:

ஆங் சான் சூகி - மெளனத்தில் தொலைத்த மனசாட்சி!

ஆங் சான் சூகி - மெளனத்தில் தொலைத்த மனசாட்சி!
பிரீமியம் ஸ்டோரி
ஆங் சான் சூகி - மெளனத்தில் தொலைத்த மனசாட்சி!

ஆங் சான் சூகி - மெளனத்தில் தொலைத்த மனசாட்சி!

ஆங் சான் சூகி - மெளனத்தில் தொலைத்த மனசாட்சி!

ஆங் சான் சூகி - மெளனத்தில் தொலைத்த மனசாட்சி!

Published:Updated:
ஆங் சான் சூகி - மெளனத்தில் தொலைத்த மனசாட்சி!
பிரீமியம் ஸ்டோரி
ஆங் சான் சூகி - மெளனத்தில் தொலைத்த மனசாட்சி!

ம்பதாண்டுக்கால ராணுவ ஆட்சியின் முடிவில் முதல்முறையாக  2015-ன் இறுதியில் மியான்மரில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது மியான்மர் மாபெரும் அடிப்படை மாற்றங்களுக்குத் தயாரானது.
ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக், 80% இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியபோது மியான்மர் மக்கள் அதை ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ஒட்டுமொத்த தேசத்தையும் இரும்புப்பிடிக்குள் வைத்திருந்த ராணுவம் இப்போது கால் பங்கு இடத்தைப் பெற்று, தலையைக் குனிந்து, கைகளைக் கட்டிக்கொண்டு நாடாளுமன்றத்தில் ஓர் ஓரத்தில் அமர்ந்திருக்கிறது. இது ஜனநாயகத்தின் வெற்றி. ராணுவத் தலைமையை வீழ்த்தியிருக்கும் மக்களாட்சிக்குக் கிடைத்திருக்கும் வெற்றி. எங்கள் எல்லோருக்கும் இது ஒரு பெருமிதமான தருணம். இந்தப் பெருமிதத்தை எங்களுக்கு அளித்திருப்பவர் சூகி. உலக மக்களே, இனி நீங்கள் புதிய மியான்மரைச் சந்திப்பீர்கள்!

ஆங் சான் சூகி - மெளனத்தில் தொலைத்த மனசாட்சி!

மலர் சூடிய கூந்தலோடும் மெல்லிய புன்னகையோடும் சூகி கையசைத்தபோது பலர் தன்னிச்சையாகக் கண்கலங்கியது நிஜம். விறைப்பான சீருடை அணிந்த ஆண்களை மட்டுமே அதுவரை அதிகார பீடத்தில் கண்டுவந்த கண்களுக்குக் கனிவும் பணிவும்கூடிய ஒரு பெண்ணின் முகம் மிகப் பெரிய ஆறுதலையும் ஆசுவாசத்தையும் அளித்திருக்க வேண்டும். ஆம், சூகியின் குழந்தைகள் அயல்நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால் அவரால் அதிபராக முடியாதுதான். ஆனால், சூகியின் கட்சியே வென்றிருக்கிறது என்பதால் அவருடைய நளினமான கரங்களால் தேர்ந்தெடுக்கப்படுபவரே  ஆட்சியை நடத்தப்போகிறார். அந்த வகையில்  இனி நடக்கப்போவது சூகியின் ஆட்சிதான். தேச விடுதலைக்காக உயிரைக் கொடுத்த ஜெனரல் ஆங் சானின் மகள் அதிகாரத்தை வென்றெடுத்திருப்பது உத்வேகமூட்டும் ஒரு சரித்திர நிகழ்வு, இல்லையா?

இந்த நம்பிக்கையை உலக நாடுகள் பலவும் உற்சாகத்தோடு பகிர்ந்துகொண்டன. அமைதியின் அடையாளமாகவும் நற்பண்புகளின் உருவமாகவும் இருக்கும் சூகியின் தலைமை மியான்மரை வேறொரு தளத்துக்கு உயர்த்தும் என்றும் நல்வழிப்படுத்தும் என்றும் அவர்கள் நம்பினர். 1991-ம் ஆண்டே அமைதிக்கான நோபல்  பரிசு அவருக்கு வழங்கப்பட்டுவிட்டது என்றாலும் ராணுவக் கட்டுப்பாடுகள் காரணமாக இருபது ஆண்டுகள் கழிந்து 2012-ல்தான் அந்த விருதை சூகியால் பெற்றுக்கொள்ள முடிந்தது. தனது ஏற்புரையின்போது, ‘ஆதரவற்றவர்களுக்காகவும் வீடற்றவர்களுக்காகவும் நம்பிக்கையிழந்தவர்களுக்காகவும் நான் பாடுபடுவேன். அவர்களுக்கான தாயகமாக என் நாட்டை மாற்றிக் காட்டுவேன்’ என்று உணர்ச்சிபொங்க முழக்கமிட்டார் சூகி.

அதே 2012-ல்தான் மியான்மர் மிகப்பெரிய வகுப்புவாதக் கலவரத்தை எதிர்கொண்டது. ஒரு லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்களுடைய இருப்பிடங்களிலிருந்து பிடுங்கி வீசப்பட்டு உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற மோதல்களில் 200 ரோஹிங்கியாக்கள் கொல்லப்பட்டனர். இருந்தும் சூகியின் குரல் அவருடைய தொண்டையை விட்டு வெளியில் வரவேயில்லை. அதன்மூலம் தான் அளித்த உறுதிமொழியை அவரே நொறுக்கி வீசினார். லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும் மெல்ல மெல்ல இழக்க ஆரம்பித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆங் சான் சூகி - மெளனத்தில் தொலைத்த மனசாட்சி!

இன்று மாபெரும் பள்ளத்தாக்கை நோக்கி உருண்டு ஓடிக்கொண்டிருக்கிறார் சூகி. அவருக்கு அளிக்கப்பட்டிருந்த கௌரவக் குடியுரிமையைக் கனடா சமீபத்தில் ரத்து செய்துள்ளது. எங்கள் நாட்டின் ஆதரவை சூகி இழந்துவிட்டார் என்று மலேசியாவின் பிரதமர் அதிகாரபூர்வமாகவே அறிவித்துவிட்டார். ஐ.நா சபை உட்பட பல சர்வதேச அமைப்புகள் சூகியின் செயலற்ற தன்மையைக் கோபத்தோடும் வருத்தத்தோடும் விமர்சித்துள்ளன. ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமைப் போராளிகளுக்கு அளிக்கும் உயரிய அங்கீகாரமான ‘மனசாட்சியின் தூதர்’ என்னும் விருதை சூகிக்கு அளித்திருந்தது.  மிகுந்த ஏமாற்றத்துடன் அந்த விருதைச் சென்ற வாரம் ஆம்னெஸ்டி திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.

‘மக்களின் அடிப்படை விருப்பம் என்ன தெரியுமா? சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழவேண்டும் என்பதுதான். உலகிலுள்ள மூலை முடுக்குகளில் இருப்பவர்கள்கூட இப்படி வாழ்வதற்கான உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்.’ இவை சூகியின் சொற்கள்.  இந்த உரிமை ரோஹிங்கியாக்களுக்கு மறுக்கப்படுவதைக் கண்டபிறகும் அமைதியாக இருந்ததுதான் சூகியின் வீழ்ச்சிக்குக் காரணம். மியான்மரின் 53 மில்லியன் மக்கள் தொகையில் நான்கு சதவிகிதம் வகிக்கும் சிறு பொட்டலம்போல் இருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களைக் கைவிட்டதன்மூலம் ஜனநாயகத்தின் இதயத்தையும் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளையும் சிதறடித்திருக்கிறார் சூகி. 

இத்தனைக்கும் 9-ம் நூற்றாண்டு தொடங்கி ரோஹிங்கியாக்கள் மியான்மரில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். தொடக்கத்தில் இருந்தே மியான்மரின் மண்ணோடும் மக்களோடும் அவர்கள் ஒன்று கலந்துதான் இருந்தனர் என்றாலும், 90% பௌத்தர்கள் அவர்களை அந்நியர்களாகக் கருதுவதை நிறுத்திக்கொள்ள வேயில்லை. 2010-ல் தொடங்கிய இந்த வெறுப்பு ரோஹிங்கியாக்களுக்கு எதிரான வன்முறையாக வெடிக்க ஆரம்பித்தது. அப்போது சூகி எதிர்க்கட்சித் தலைவர். இந்த வெறுப்பு உற்பத்தியானதற்கு ராணுவத் தலைமைதான் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்று அப்போது சரியாகவே குற்றம்சாட்டினார் அவர். ‘சர்வாதிகார ஆட்சிக்கு உட்பட்டிருப்பதால் தான் நாம் இத்தகைய வேதனைகளைக் காணவேண்டியிருக்கிறது. மனித உரிமைகளையும்  ஜனநாயக விழுமியங்களையும் உயர்த்திப்பிடிக்கும் வரை இந்தச் சிக்கல் தீராது.’

ஆனால் ராணுவ ஆட்சி அகற்றப்பட்டு, சூகியின் கட்டுப்பாட்டின்கீழ் அந்நாடு வந்துசேர்ந்தபிறகும் தங்கள்மீதான தாக்குதல் நிறுத்தப்படாததைக் கண்டு ரோஹிங்கியாக்கள்  திகைத்து நின்றார்கள். மியான்மர் நிகழ்வுகள் இப்போது சர்வதேசக் கவனத்தை ஈர்த்திருந்தன என்பதால் உலகம் முழுதிலுமுள்ள ஜனநாயக ஆர்வலர்கள் சூகியின் செயல்களைப் (அல்லது செயலற்ற நிலையை) புரிந்துகொள்ள முடியாமல் தவித்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் ஏன் மனித உரிமைகள் தொடர்ச்சியாக மீறப்படுகின்றன? ஏன் குழந்தை குட்டிகளோடு, மூட்டை முடிச்சுகளோடு இரவோடு இரவாக ரோஹிங்கியா மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் அவர்களுடைய குடிசைகள் லும்பன் கும்பல்களால் கொளுத்தப்படுகின்றன? மியான்மர் ராணுவமும் தன் பங்குக்கு ஏன் ரோஹிங்கியாக்களைத் தேடித் தேடி வேட்டையாடுகிறது? ஒரு நாட்டின் ராணுவம் அந்நாட்டுக் குடிமக்கள்மீதே திருப்பப்படுவது என்ன மாதிரியான ஜனநாயகம்? முன்பு ராணுவத் தலைமைக்கு வீரர்கள் கட்டுப்பட்டுக்கிடந்தனர். இப்போது சூகியின் கரங்களில் அல்லவா அதிகாரம் குவிந்திருக்கிறது? எனில், ராணுவத்துக்கும் மக்களாட்சிக்கும் வேறுபாடே கிடையாதா? மியான்மர் மாறவேயில்லையா?

மாறியிருக்கிறது. ஆனால் எதிர்பாராத திசையில். சூகியின் வெற்றிக்குப் பிறகு ரோஹிங்கியாக்களின் நிலைமை முன்பைவிட மோசமடைந்திருக்கிறது. ஆகஸ்ட் 2017 தொடங்கி ஏழு லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேறி பங்களாதேஷில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். உங்கள் நாட்டில் நடைபெறுவது வெறும் வகுப்புவாதக் கலவரம்  அல்ல, மிகப்பெரிய இனவொழிப்பு என்கிறது ஐ.நா சபை. ரோஹிங்கியாக்கள்மீதான திட்டமிடப்பட்ட தாக்குதல்களைக் கண்டிக்க மறுப்பதோடு நில்லாமல், அவற்றை மூடிமறைக்கவும் முயல்கிறார் சூகி. இன்றைய தேதிவரை ஐ.நா ஊழியர்களைத் தன்னுடைய நாட்டுக்குள் அவர் அனுமதிக்கவில்லை.

‘சொல்லுங்கள், எங்களை ஏன் கைவிட்டீர் சூகி?’ - ரோஹிங்கியா முஸ்லிம் சமூகத்தின் இந்தக்  கேள்விக்கும் சூகியிடமிருந்து பதிலில்லை. பெரும்பான்மை பௌத்தர்களை அனுசரித்துப் போனால் போதும், அவர்களிடமிருந்து சிறுபான்மையினரைப் பாதுகாக்கவேண்டிய அவசியம் இல்லை என்று நீங்களும் அரசியல் கணக்கு போடுகிறீர்களா சூகி? ஓட்டு அரசியல் உங்களை இவ்வாறு உருமாற்றிவிட்டதா அல்லது இதுதான் உங்களுடைய நிஜமுகமா?

ஜனநாயகம், விடுதலை, நீதி ஆகிய விழுமியங்களை சூகி வெவ்வேறு காலங்களில் உயர்த்திப்பிடித்தது நிஜம். ஆனால் இவற்றையெல்லாம் ரோஹிங்கியாக்களுக்கும் நீட்டிக்க அவர் தயாராக இல்லை என்னும்போது அந்த விழுமியங்கள் அர்த்தமிழந்துபோகின்றன.  2013-ம் ஆண்டு பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘ரோஹிங்கியா முஸ்லிம்கள்மீதான வன்முறை அதிகரித்துவருகிறது என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. பௌத்தர்களுக்கும்கூடத்தான் பிரச்னைகள் இருக்கின்றன. அவர்களும்கூட வன்முறையை அனுபவிக்கிறார்கள். அவர்களும்கூட வீடுகளை இழந்திருக்கிறார்கள்’ என்று பாதிக்கப்பட்டவர்களையும் தவறிழைத்தவர்களையும் ஒரே தட்டில் நிறுத்தி  வாதிட்டிருக்கிறார் சூகி. ‘மியான்மர் மட்டுமல்ல, முழு உலகமும் முஸ்லிம்களின் அதிகாரத்தைக் கண்டு அஞ்சிக்கொண்டுதான் இருக்கிறது’ என்றும் அதே பேட்டியில் சொல்லியிருக்கிறார். ரோஹிங்கியாக்கள்மீது வன்முறையைப் பிரயோகிக்கும், அதை நியாயப்படுத்தும்  பௌத்தர்களின் வாதமும்கூட இதுவேதான் இல்லையா?

மொத்தத்தில் சூகியின் குரல் என்பது ஜனநாயகத்தின் குரலல்ல; பெரும்பான்மை வாதத்தின் குரல். ஆதிக்கசக்தியின் குரல். மறைந்திருக்கும் வெறுப்பு அரசியலின் குரல். அதனால்தான் அந்தக் குரல் தவிர்க்கவியலாத படிக்கு சிறுபான்மையினருக்கு எதிரானதாக ஒலிக்கிறது. அதனால்தான் அந்தக் குரல் முக்கியமான தருணங்களில் எல்லாம் ஒலிக்காமல் புதையுண்டு போகிறது. கால ஓட்டத்தில் இத்தகைய குரல்கள் சரிவைச் சந்திப்பதும் மறைந்து காணாமற்போவதும்கூடத் தவிர்க்கவியலாததுதான்.

மருதன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism