Published:Updated:

`தரம் தாழ்த்தி விமர்சனம் செய்கிறார் தா. பாண்டியன்' - திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு!

`தரம் தாழ்த்தி விமர்சனம் செய்கிறார் தா. பாண்டியன்' - திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு!
`தரம் தாழ்த்தி விமர்சனம் செய்கிறார் தா. பாண்டியன்' - திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு உசிலம்பட்டியில் நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அபகரிக்க முயல்வதாக தா.பாண்டியன் குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், அமைச்சர் சீனிவாசன் வீட்டை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், திண்டுக்கல் சீனிவாசன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், ``உசிலம்பட்டியில் உள்ள தா.பாண்டியனுக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தை நான் அபகரிக்க முயல்வதாக என்மீது குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தப் பிரச்னை பாண்டியனுக்கும் அவரது உடன் பிறந்த தம்பி டி.எஸ்.ராஜன் இருவருக்குமிடையே உள்ள சொத்துப் பிரச்னை ஆகும். ராஜனின் மகன் ஜெபராஜ் என்னுடைய மருமகன் ஆவார். 

என் மகளுக்கும், பாண்டியனின் தம்பி மகன் ஜெபராஜுக்கும் 1995-ம் ஆண்டில் உசிலம்பட்டியில் திருமணம் நடைபெற்றது. பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெபராஜ் எனது மருமகன் என்று குறிப்பிட்டுள்ளாரே தவிர, தனது தம்பி மகன் எனக் குறிப்பிடவே இல்லை. பாண்டியனுக்கும் அவரது தம்பி ராஜனுக்கும் 2001-ம் ஆண்டு முதல் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பாண்டியன் தன் தம்பி ராஜன் குடும்பத்தாருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்ததையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் உள்நோக்கத்தோடு இத்தனை தகவலையும் மறைத்து நான் ஏதோ அவரது சொத்தை அபகரிப்பது போன்ற ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்துகிறார்.

பாண்டியன் குறிப்பிடும் இடத்தில் அவரின் தம்பி ராஜன் குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். நான் எந்த ஒரு காலகட்டத்திலும் இந்தப் பிரச்னையில் தலையிடவில்லை. யாரிடம் இருந்தும் சொத்தை அபகரிக்கும் நோக்கோடு செயல்பட்டதும் இல்லை. இது முழுக்க முழுக்க பாண்டியன் குடும்பத்தினர்களுக்கு இடையே உள்ள சட்டப் பிரச்னை. இதை அவரும் அவரது குடும்பத்தாரும் நீதிமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்ளட்டும். இந்தச் சொத்து பிரச்னை தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன், எனது வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிக்கை கொடுத்துள்ளார். 

பாண்டியனுக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்துப் பிரச்னையில் தலையிடும் முத்தரசன், என் வீட்டை முற்றுகையிட வருவதற்கு முன்பாக பாண்டியனிடம், இது அவர்களின் குடும்ப சொத்துப் பிரச்னையா? பாண்டியனுக்கும் அவரின் தம்பிக்கும் பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருவது உண்மையா? நீதிமன்றத்தில் பாண்டியனின் தம்பி ராஜனுக்குச் சாதகமான தீர்ப்பு ஏதேனும் வந்துள்ளதா? என்பதை எல்லாம் விசாரித்து விட்டு அதன் பிறகு, எனது வீட்டை முற்றுகையிடட்டும். 

முத்தரசன் போன்ற மூத்த அரசியல்வாதிகள் எதையும் தீர விசாரிக்காமல் எனது வீட்டை முற்றுகையிடுவோம் என அறிக்கை வெளியிடுவது எந்த வகையில் நியாயம்? பாண்டியன், ``நான் என் மருமகனுக்குத் தமிழ்நாட்டையே பட்டா போட்டுக் கொடுக்கட்டும்" என்று கூறியிருக்கிறார். மேற்கண்ட செய்திகளை மறைத்து, தரம் தாழ்த்தி விமர்சனம் செய்வது அவரது வயதுக்கும் அரசியல் முதிர்ச்சிக்கும் அழகல்ல. இத்தனை வருட அரசியல் வாழ்வில் நான் யார் சொத்துக்கும் ஆசைப்பட்டதுமில்லை.. அபகரித்ததும் இல்லை. இனிமேல் எப்போதும் செய்யப்போவதும் இல்லை' எனக் தெரிவித்துள்ளார்.