Published:Updated:

தொகுதி மக்களுடன் புத்தாண்டு கொண்டாடிய தி.மு.க எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன்!

செ.சல்மான் பாரிஸ்
தொகுதி மக்களுடன் புத்தாண்டு கொண்டாடிய தி.மு.க எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன்!
தொகுதி மக்களுடன் புத்தாண்டு கொண்டாடிய தி.மு.க எம்.எல்.ஏ பழனிவேல் தியாகராஜன்!

மதுரை மத்திய தொகுதி தி.மு.க  எம்.எல்.ஏவான, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வித்தியாசமான அரசியல்வாதி. பொருளாதார நிபுணரான இவர் அமெரிக்காவிலுள்ள சிட்டி வங்கியில் தலைமை அதிகாரியாக செயல்பட்டு வந்தவர். நீதிக்கட்சி உருவானதில் முக்கிய பங்கு வகித்தவர் தாத்தா பி.டி.ராஜன்.  தி.மு.க ஆட்சியில் சபாநாயகராகவும், அறநிலையத்துறை  அமைச்சராகவும் பொறுப்பு வகித்த இவரின் தந்தை பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் திடீரென்று மரணமடைந்ததால்,  அவர்கள் குடும்பத்திலிருந்து தாமதமாக அரசியலுக்கு வந்தவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தி.மு.க-வின் தகவல் தொழில் நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக பொறுப்பு பெற்று தி.மு.கவை டெக்னாலஜிக்கு தகுந்தாற்போல் மாற்றி வருகிறார். தேர்தலுக்கு மட்டுமே மக்களை சந்திக்கும் மக்கள் பிரதிநிதிகள் இருக்கின்ற காலத்தில் தன் தொகுதி மக்கள் தங்கள் குறைகளை மெயில் மற்றும் வாட்ஸ்அப்  மூலமாகவும்,  அமைத்திருக்கும் புகார் பெட்டிகள் மூலமாகவும் தெரிவிக்க ஏற்பாடு செய்து,  கோரிக்கைகளை நிறைவேற்றி பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

இந்த நிலையில் 2019-ம் ஆண்டின் தொடக்க நாளை தொகுதி மக்களுடன் இணைந்து கொண்டாடினார். மக்களை நேரில் சந்தித்த அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, ஆங்கிலப் புத்தாண்டை  சிறப்பாக கொண்டாடினார். அது மட்டுமில்லாமல் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றவர், அதன் மீது நடவடிக்கை எடுத்திட உடனே ஏற்பாடு செய்தார். தொகுதியிலுள்ள இளைஞர்களோடு கலந்துரையாடி, குழந்தைகளுக்கு பெயர் சூட்டியும்,  பொதுமக்களோடு உரையாடியும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். இவருடன் அவருடைய மனைவியும், பிள்ளைகளும் கலந்துகொண்டதைப் பார்த்து தொகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.