Published:Updated:

``தினகரனைத் தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்க்கப்படுவர்!" - அமைச்சர் தங்கமணி

புதுப்புது சிந்தனைகளோடு என்ன தொழில் செய்யலாம் என்பதைச் சிந்தித்து தொழில் தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்கும்போது அதிக லாபம் கிடைக்கும். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய அரசு தயாராக உள்ளது.

``தினகரனைத் தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்க்கப்படுவர்!" - அமைச்சர் தங்கமணி
``தினகரனைத் தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்க்கப்படுவர்!" - அமைச்சர் தங்கமணி

``அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர்த் தொகுதி எம்.எல்.ஏ-வுமான தினகரனைத் தவிர, அந்த அணியிலிருந்து யார் வந்தாலும் அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ளப்படுவர்" என்று கூறியுள்ளார், தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை  அமைச்சர் தங்கமணி.

நாமக்கல்லில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான, தமிழ்நாடு `உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019’ குறித்த விழிப்பு உணர்வு மற்றும் விளக்கக் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு புரிந்து உணர்வு ஒப்பந்த ஆணையை தொழில் முனைவோருக்கு வழங்கினர்.

அப்போது பேசிய சமூக நலன் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் சரோஜா, ``தொழில் தொடங்குவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள் நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பான முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் துறை முன்னேற்றத்துக்குத் தடையற்ற மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது முக்கியமான காரணமாகும். இளைஞர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து தொழில் தேடுபவர்களாக இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்குபவர்களாக உருவாக வேண்டும்" என்றார் .

அடுத்து பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, ``உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. புதிதாகத் தொழில் தொடங்குபவர்கள் மாவட்டத்தில் அதிக அளவில் நடைபெறும் தொழிலையே தொடங்காமல் எது தேவை என்பதைத் தெரிந்து, அந்தத் தொழிலைத் தொடங்க வேண்டும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சாயப்பட்டறை தொழிலைப் பாதுகாக்கும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நாமக்கல் மாவட்டத்துக்கு மட்டும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். 

இந்தத் திட்டத்துக்குச் சாயப்பட்டறை உரிமையாளர்கள், தங்கள் பங்காகச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் தேவையான நிலத்தை வழங்கினால், மத்திய அரசின் அனுமதி பெற்று தமிழக அரசு உடனடியாகச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கும். புதுப்புது சிந்தனைகளோடு என்ன தொழில் செய்யலாம் என்பதைச் சிந்தித்து தொழில் தொடங்க வேண்டும். அவ்வாறு தொடங்கும்போது அதிக லாபம் கிடைக்கும். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய அரசு தயாராக உள்ளது" என்றார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, ``கோடைக்காலத்தைச் சமாளிக்கும் வகையில், மூன்று மாதத்துக்கு மட்டுமே, தனியாரிடமிருந்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் நிர்ணயித்த யூனிட் ஒன்று, 5.50 ரூபாய் என்ற விலையிலிருந்து, 25 காசுகள் குறைத்தே, மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இது, வெளி மாநிலங்களை ஒப்பிடும்போது குறைவு. மத்திய அரசு, தற்போது அளிக்கும், 3,800 மெகாவாட்டிலிருந்து, தமிழகத்துக்குத் தரவேண்டிய, 6,300 மெகாவாட் மின்சாரத்தை, முழுவதுமாக அளித்தால், தனியாரிடம் கொள்முதல் செய்யவேண்டிய அவசியம் இல்லை. விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக, வரும் மூன்றாம் தேதி சென்னையில் பேச்சுவார்த்தை நடத்திச் சுமுக முடிவு எட்டப்படும். டாஸ்மாக் பார்களில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகப்படுத்த அனுமதியில்லை. ஏற்கெனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியபடி, டி.டி.வி.தினகரனைத் தவிர்த்து, அந்த அணியிலிருந்து யார் வந்தாலும், அ.தி.மு.க-வில் சேர்த்துக்கொள்ளப்படுவர்" என்றார்.