Published:Updated:

`திருவாரூர் தொகுதியில் காங்கிரஸ் முடிவு என்ன?’ - திருநாவுக்கரசர் தகவல்!

`திருவாரூர் தொகுதியில் காங்கிரஸ் முடிவு என்ன?’ - திருநாவுக்கரசர் தகவல்!
`திருவாரூர் தொகுதியில் காங்கிரஸ் முடிவு என்ன?’ - திருநாவுக்கரசர் தகவல்!

தி.மு.க-வின் முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவின் காரணமாக, திருவாரூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இங்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``திருவாரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகப் பணியாற்றி வந்த கருணாநிதியின் மறைவையொட்டி  திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகின்ற 28.1.2019 அன்று நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டது. ஆகவே இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை ஆதரிப்பது எனக் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான முகுல்வாஸ்னிக்வோடு ஆலோசித்தும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தியின் ஒப்புதலோடும் இவ்வறிவிப்பு வெளியிடப்படுகிறது.

எனவே, இத்தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரின் வெற்றிக்குத் திருவாரூர் தொகுதிக்குட்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து காங்கிரஸ் நிர்வாகிகளும் காங்கிரஸ் கட்சித் தோழர்களும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடையச் செய்ய அயராது தேர்தல் பணியாற்றிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.