மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.பி? - செந்தில்நாதன் (சிவகங்கை)

என்ன செய்தார் எம்.பி? - செந்தில்நாதன் (சிவகங்கை)
பிரீமியம் ஸ்டோரி
News
என்ன செய்தார் எம்.பி? - செந்தில்நாதன் (சிவகங்கை)

"தொகுதிவாசிகளை டெல்லிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றேன்"

#EnnaSeitharMP
#MyMPsScore

தேவகோட்டையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துகொண்டிருந்த செந்தில்நாதனுக்கு அரசியல் ஆசை தொற்றிக்கொண்டது. அப்போது, அ.தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருந்த சுப.கருப்பையா மூலம் கட்சிக்குள் காலடியெடுத்துவைத்தார் செந்தில்நாதன். மாவட்டச் செயலாளராக இருந்த உமாதேவன் மூலம் சுப.கருப்பையாவை வீழ்த்திவிட்டு, தேவகோட்டை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஆனார். பல மாதங்கள் கழித்து, உமாதேவனையும் வீழ்த்தியவர், மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடித்தார். அதன் பிறகு, செந்தில்நாதனுக்கு ஏறுமுகம்தான்.

தேவகோட்டை ஒன்றியத் தலைவர், பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத் தலைவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பி பதவி என்று செந்தில்நாதனின் கிராஃப் ஏறியது. ஆனால், சிவகங்கை தொகுதி வளர்ச்சி அடைந்ததா?

‘‘தொகுதியிலிருந்து யார் போன் போட்டாலும், உடனே எடுத்துப் பேசிவிடுவார் செந்தில்நாதன். கட்சிக்காரர்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்பார். ஆனால், தொகுதியில் குறிப்பிட்டுச் சொல்லும்படி வளர்ச்சிப் பணிகளை செய்யவில்லை’’ என எம்.பி பற்றி முன்னோட்டம் கொடுத்தார்கள் தொகுதி மக்கள். 

என்ன செய்தார் எம்.பி? - செந்தில்நாதன் (சிவகங்கை)

தொகுதியில் விவசாயம் பிரதானத் தொழில். கடந்த நான்கு ஆண்டுகளாகத் தண்ணீர் இல்லாமல் விவசாயம் பொய்த்துவிட்டது.  குடிதண்ணீர் பிரச்னை மோசமான நிலையில் இருக்கிறது. மானாமதுரையில் மண்பாண்டம் தொழில், இளையான்குடியில் தோல் பொருள்கள் உற்பத்தி, அரியக்குடியில் பித்தளைத் தொழில், செட்டிநாட்டுப் பாரம்பர்ய கலைப்பொருள்கள் விற்பனை, சிங்கம்புணரியில் கயிறு தொழில், திருப்புவனத்தில் தென்னை விவசாயம் என எல்லாமே முடங்கிக்கிடக்கின்றன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான குணசேகரனிடம் பேசினோம். ‘‘ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் என்று பிரபலமான தலைவர்கள் இங்கு எம்.பி-யாக இருந்துள்ளனர். ஆனாலும், தொகுதியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. தற்போதைய எம்.பி., தொகுதிக்காக எதையும் செய்ததாகத் தெரியவில்லை. புதிய திட்டங்களைக் கொண்டுவராதது மட்டுமல்ல, ஏற்கெனவே இருக்கும் திட்டங்களையும் முடக்கிவிடுகிறார்கள். தொழில் வாய்ப்புகள் இல்லாததால், இந்த மாவட்ட இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதற்காக, சிப்காட் அமைக்கும் திட்டம் இருந்தது. தி.மு.க ஆட்சியில் சிப்காட் அமைக்க நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியானது. அந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. செந்தில்நாதன் எம்.பி மட்டுமல்ல, ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளரும்கூட. அவர் அரசுக்கு அழுத்தம் கொடுத்து, சிப்காட் அமைக்க முயற்சி எடுத்திருக்கலாம். சிவகங்கையில் கிராபைட் தொழிற்சாலை இருந்தும், அதைச் சார்ந்த சிறுதொழில்கள் இல்லை. விவசாயத்துக்குத் தேவையான பாசன நீரைக் கொண்டுவரும் முயற்சியிலும் பெரிதாக எம்.பி ஈடுபாடு காட்டவில்லை. மத்திய அரசின் திட்டங்கள், மாநில அரசின் திட்டங்கள் என எதையுமே அவர் கொண்டுவரவில்லை’’ என்று புகார் பட்டியலை அடுக்கினார்.

தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கை மாறனிடம் கேட்டபோது, ‘‘தி.மு.க ஆட்சியில் மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தோம். ஆனால், ஒரு பொறியியல் கல்லூரியைக்கூட எம்.பி-யால் கொண்டுவர முடியவில்லை. இந்த மாவட்டத்தில், கிராபைட் வளம் நிறைந்துள்ளது. ஆனால், கிராபைட்  என்றாலே என்னவென்று தெரியாத ஒருவராக எம்.பி உள்ளார். காவிரி குடிநீர் இன்னும் முழுமையாக அனைத்து கிராமங்களுக்கும் போய்ச் சேரவில்லை. மதுரை-காரைக்குடி இணைப்பு ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான எந்த முயற்சியையும் அவர் செய்யவில்லை. லட்சக்கணக்கான ரூபாய் செலவில் மின்விளக்குகள் அமைத்துக்கொடுக்கிறார்தான். ஆனால், பல இடங்களில் அவை எரியவில்லை. மிகவும் பின்தங்கிய இந்தப் பகுதிக்கு பெரிய திட்டங்கள் எதையும் இந்த எம்.பி கொண்டுவரவில்லை’’ என்றார்.

அ.ம.மு.க-வைச் சேர்ந்த அர்ச்சுணன், ‘‘ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, மத்திய நறுமணப் பூங்கா திட்டத்தைக் கொண்டுவந்தார். நறுமணப் பொருள்கள் பட்டியலில் வரும் மிளகு, மல்லி, மிளகாய் உட்பட பல்வேறு பொருள்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவதற்காக இந்தப் பூங்கா ஏற்படுத்தப்பட்டது. குளிர்பதனக் கிடங்கு, தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம், அரவை இயந்திரங்கள் என அனைத்தும் அடங்கிய அருமையான திட்டம். அதற்காக, கட்டடங்கள் கட்டினார்கள். ஆனால், மிகப்பெரிய தொழில் வாய்ப்பை உருவாக்கும் இந்தத் திட்டம் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. அதற்கான முயற்சியை செந்தில்நாதன் முன்னெடுக்கவில்லை. மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக உள்ள சூழலைப் பயன்படுத்தி, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கலாம்’’ என்றார்.

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் பொதுச்செயலாளர் ஆதிமூலம், ‘‘விவசாயத்தை நம்பியுள்ள எங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. சிவகங்கை மாவட்டத்தில் எட்டு லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டுவந்தது. தற்போது, பாசனம் இல்லாததால் மூன்று லட்சம் டன்னாக அது சுருங்கிவிட்டது. இதற்குக் காரணமான பிரச்னைகளைக் களைவதற்கு எம்.பி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை’’ என்றார்.

மாவட்ட வேளாண் உற்பத்திக் குழுவைச் சேர்ந்த கணநாதன், ‘‘சிங்கம்புணரி, திருப்புவனம் பகுதிகளில் விளையும் தேங்காய் மகாராஷ்டிரத்துக்கு அனுப்பப்படுகிறது. மத்திய அரசின் கீழ் இயங்கும் தென்னை வளர்ச்சி வாரியம் மூலமாக தென்னை விவசாயிகளுக்கான சலுகைகள், உதவிகளை எம்.பி பெற்றுக்கொடுத்திருக்கலாம். ‘நீரா’ பானம் இறக்கலாம். ஆனால், அதற்கானப் பயிற்சிகள், விற்பனைக்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படுவதில்லை’’ என்றார்.

எம்.பி செந்தில்நாதனிடம் பேசினோம். “கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, என்னால் முடிந்தவரை பல பணிகளைத் தொகுதி மக்களுக்குச் செய்துள்ளேன். அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருப்பதால், மாநில அரசின் திட்டங்களையும் கேட்டு வாங்க முடிகிறது. காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், மாவட்டத்தின் பாசனப் பிரச்னை தீரும். இந்தத் திட்டத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான முயற்சியை எடுத்துவருகிறேன். நறுமணப் பூங்கா திட்டம் முடக்கப்படவில்லை. நறுமண வாரிய அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களுடன் அன்வர் ராஜா, கோபாலகிருஷ்ணன், சத்தியபாமா உள்ளிட்ட ஆறு எம்.பி-க்கள் பேசியிருக்கிறோம். கட்டடம் மட்டும் இருக்கிறது. தேவையான இயந்திரங்கள் உள்ளிட்ட சில வசதிகள் தேவைப்படுகின்றன. அவற்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துவருகிறோம். நறுமணப் பூங்கா விரைவில் பயன்பாட்டுக்கு வரும். நிலம் எடுப்பதற்கு விவசாயிகள்  எதிர்ப்புத் தெரிவித்ததால், சிப்காட் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. கிராபைட் சார்ந்த தொழிற்சாலைகளைக் கொண்டுவருவதற்காகப் பேசியிருக்கிறேன். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து, வெள்ளிக்கிழமைதோறும் குறைதீர்க்கும் கூட்டம் நடத்துகிறேன். அதில், சுமார் 300 பேர் வரை கலந்துக்கொண்டு தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வைப் பெறுகிறார்கள்.

தென்னை விவசாயிகளுக்காக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பதற்காக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். அதன் விளைவாக, தமிழகத்தின் முதல் நிறுவனம் அறந்தாங்கியில் அமைக்கப்பட்டுள்ளது. சாலை மற்றும் குடிநீர் வசதிகள், ஆழ்குழாய் கிணறுகள், மருத்துவமனைகள், உயர்கோபுர மின்விளக்குகள், பயணிகள் நிழற்குடைகள், குடிநீர்த் தொட்டிகள், கல்லூரிக் கட்டடங்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், திருமண மண்டபங்கள், கலையரங்கம் இவற்றுக்கெல்லாம் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறேன். தஞ்சாவூர் - சாயல்குடி சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தியுள்ளோம். காரைக்குடி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டமான காரைக்குடி - பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதைக்கு, போதிய நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தினேன். அதற்கான பணிகள் முடிந்து ரயில்சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை, வாரம் ஏழு நாள்களும் இயக்க வேண்டும் என்று ரயில்வேயிடம் வலியுறுத்தியுள்ளேன். அதுவும் பரிசீலனையில் உள்ளது. என்னை வாக்களித்து டெல்லிக்கு அனுப்பிய தொகுதி மக்களும் டெல்லியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, என் சொந்த செலவில் 850 பேரை டெல்லிக்கு அழைத்துச்சென்று சுற்றிக்காட்டியுள்ளேன். பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 71 பேருக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1.80 கோடி பெற்றுத் தந்திருக்கிறேன்’’ என்றார்.
உங்கள் தொகுதி எம்.பி பற்றி நீங்கள் கூற விரும்பும் கருத்துகளை https://www.vikatan.com/special/mpsreportcard/ என்ற விகடன் இணையதளப் பக்கத்தில் தெரிவிக்கலாம்.

- ஆர்.குமரேசன், தெ.பாலமுருகன்
ஓவியம்: கார்த்திகேயன் மேடி

என்ன செய்தார் எம்.பி? - செந்தில்நாதன் (சிவகங்கை)
என்ன செய்தார் எம்.பி? - செந்தில்நாதன் (சிவகங்கை)
என்ன செய்தார் எம்.பி? - செந்தில்நாதன் (சிவகங்கை)

எம்.பி ஆபீஸ் எப்படி இருக்கு?

தே
வகோட்டை, சிவகங்கை என இரு இடங்களில் எம்.பி அலுவலகங்கள் செயல்படுகின்றன. வட்டிக்கடை, ரியல் எஸ்டேட், எம்.பி அலுவலகம் என மூன்றும் தேவகோட்டையில் ஒரே அறையில் செயல்படுகின்றன. சிவகங்கையில் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரில் ஓர் அலுவலகம் அமைந்திருக்கிறது. கோமாளிபட்டி பஞ்சாயத்தில் இருக்கும் தென்னம்பட்டி கிராமத்தில் சுகாதாரமான குடிநீர் இல்லாததால், 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தென்னம்பட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்குமாறு கோரி மனு அளிக்க ஏற்பாடு செய்தோம். தென்னம்பட்டி மக்கள் அனைவரும் கையெழுத்துப் போட்டு கோரிக்கை மனுவை பதிவுத் தபாலில் எம்.பி அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தார்கள். அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டது என்று எம்.பி அலுவலகத்தில் கேட்டோம். ‘‘தென்னம்பட்டியில் ஆர்.ஓ வாட்டர் பிளான்ட் அமைக்க எம்.பி நிதியிலிருந்து மூன்று லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்கள்.

என்ன செய்தார் எம்.பி? - செந்தில்நாதன் (சிவகங்கை)
என்ன செய்தார் எம்.பி? - செந்தில்நாதன் (சிவகங்கை)