Published:Updated:

படுக்கை அறையில் ரஃபேல் ரகசியம்... மோடியை மிரட்டுகிறாரா மனோகர் பாரிக்கர்?!

ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ரகசியங்கள் தனது படுக்கை அறையில் இருப்பதாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியதாக வெளியாகி உள்ள தகவலும், அது குறித்து வெளியாகி உள்ள ஆடியோவும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. 

படுக்கை அறையில் ரஃபேல் ரகசியம்... மோடியை மிரட்டுகிறாரா மனோகர் பாரிக்கர்?!
படுக்கை அறையில் ரஃபேல் ரகசியம்... மோடியை மிரட்டுகிறாரா மனோகர் பாரிக்கர்?!

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பதவிக்குரிய கடமைகளைச் சரிவர ஆற்ற முடியாத நிலை உள்ளது. இதனால், அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் மாநில பா.ஜனதாவுக்குள்ளேயே எழுந்துள்ள நிலையில், ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ரகசியங்கள் தனது படுக்கை அறையில் இருப்பதாக மனோகர் பாரிக்கர் கூறியதாக வெளியாகி உள்ள தகவல், அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

ரஃபேல் ஒப்பந்தமும் சர்ச்சையும் 

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தை முடிவடைவதற்குள் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில், 2014-ல் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவியேற்ற பின்னர், முந்தைய ஒப்பந்தத்துக்குப் பதிலாக புதிய விலையில் 36 ரஃபேல் ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய முடிவு செய்தது.

மன்மோகன் சிங் காலத்தில் செய்துகொள்ளப்பட இருந்த ஒப்பந்தத்தில் ஒரு விமானத்தின் விலை தோராயமாக சுமார் 600 கோடி ரூபாய் என இருந்தது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 2015-ம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் கீழ் ஒரு விமானத்தின் விலை தோராயமாக சுமார் 1,400 கோடி ரூபாய் என ஒப்புக்கொள்ளப்பட்டது. 

இது ஒருபுறம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விமானங்களின் பாகங்களை இந்தியாவில் பொருத்தும் வேலையை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டதும் கூடுதல் சர்ச்சைக்கு வித்திட்டது. இந்தப் போர் விமானத்தை டஸ்ஸோ ஏவியேஷன் நிறுவனம் உருவாக்கியது. இந்த ஒப்பந்தம் ஏற்படுவதற்கு சில நாள்களுக்கு முன்னதாக, அதாவது 2015, மார்ச் 28-ம் தேதி, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை உருவாக்கியது.

இதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவிலான ஊழல் நடைபெற்றிருப்பதாகப் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ``பாதுகாப்புத் துறையில் எந்தவோர் அனுபவமும் இல்லாத அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் டிபஃன்ஸ் நிறுவனத்துக்கு 30,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்காமல் அம்பானியின் நிறுவனத்துக்குக் கொடுத்தது ஏன்?" என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. 

இதைத் தொடர்ந்து இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. ரஃபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்துத் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, "ரஃபேல் ஒப்பந்தத்துக்கான செயல்முறைகளை சந்தேகிப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. இந்த ஒப்பந்தத்துக்குப் பின்பற்றப்பட்ட வழிமுறைகளிலும் சந்தேகத்துக்கு இடமான அம்சங்கள் இல்லை" என்று கூறி, விசாரணை கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.

மனோகர் பாரிக்கரிடம் ரஃபேல் ரகசியம்? 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ரஃபேல் விவகாரத்தில் மோடி அரசுக்கு நிம்மதி அளிப்பதாக இருந்த போதிலும் இந்த விவகாரம் அத்தனை எளிதில் அமுங்கிவிடுவதாக இல்லை. ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், ரஃபேல் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 14-ம் தேதி அளித்த தீர்ப்புக்கு எதிராக, இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ரகசியங்கள் தனது படுக்கை அறையில் இருப்பதாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியதாக வெளியாகி உள்ள தகவலும், அது குறித்து வெளியாகி உள்ள ஆடியோவும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. 

ஏற்கெனவே இந்த ஒப்பந்தம் தொடர்பாக அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகராக இருந்த மனோகர் பாரிக்கரிடம் கேட்கப்பட்டபோது, ஒப்பந்தம் குறித்து தன்னிடம் எதுவுமே கலந்து ஆலோசிக்கப்படவில்லை என்று விஷயத்தைப் போட்டுடைத்திருந்தார். இது தொடர்பாக ஆங்கிலச் செய்தி சேனல் ஒன்றுக்கு 2015, ஏப்ரலில்  அளித்திருந்த பேட்டியில், ``இது பிரதமர் மோடியின் முடிவு; எனவே எனக்கு இதில் வேறெந்த வேலையுமில்லை; மேலும், இது இரு நாட்டுத் தலைவர்கள் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவு. எனவே கருத்து எதுவும் சொல்ல முடியாது" என்று சொல்லி நழுவியிருந்தார்.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் பதவிக்குரிய கடமைகளைச் சரிவர ஆற்ற முடியாத நிலையிலிருக்கும் மனோகர் பாரிக்கருக்குப் பதிலாக, வேறு ஒருவரை முதல்வர் பதவியில் நியமிக்க வேண்டும் எனக் கட்சி மேலிடத்தைக் கோவா மாநில பா.ஜனதாவினரில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இது, பாரிக்கருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. தான் நன்றாகத்தான் இருப்பதாகக் கட்சி மேலிடத்துக்கும் பொதுமக்களுக்கும் உணர்த்துவதற்காக 4 மாத இடைவெளிக்குப் பின்னர் இன்று தலைமைச் செயலகம் வந்த பாரிக்கர், கோப்புகளைப் பார்வையிட்டுக் கையெழுத்திட்டார். மேலும் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார். 

இதனிடையே, கோவாவில் மூன்று நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பாரிக்கர் பொறுமையை இழந்து கத்தியதாகவும், அப்போது, ``ரஃபேல் ஒப்பந்தம் குறித்த பல ரகசியங்கள் எனக்குத் தெரியும். ரஃபேல் ஒப்பந்தக் கோப்பு நகல் என்னிடம் இருக்கிறது. அவை எனது வீட்டின் படுக்கை அறையில் இருக்கின்றன. எனவே, என்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முடியாது" என்று கூறியதாகத் தெரிகிறது. மேலும், பாரிக்கருடன் கோவா சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே பேசுவதும் ரகசியமாகக் கசிந்த ஆடியோ மூலம் தெரியவந்திருப்பதாகவும் கூறி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, செய்தியாளர்கள் மத்தியில் அது தொடர்பான ஆடியோ ஒன்றையும் போட்டுக் காட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுர்ஜேவாலா, ``இது உண்மையா என அறிந்துகொள்ள தேசம் விரும்புகிறது. மோசமான உடல் நிலை, முதல்வர் பதவியில் சரியாகச் செயல்படாதது ஆகியவற்றுக்கு இடையேயும் அவர் பதவியிலிருந்து நீக்கப்படாமல் இருப்பதற்கு, நாடாளுமன்றக் கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்றத்திடம் பிரதமர் மோடி தெரிவிக்க விரும்பாத மோசமான ரகசியங்கள் அவரிடம் இருப்பதுதான் காரணமா என இந்திய மக்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றனர். 

தம்மிடம் ரஃபேல் ஒப்பந்தம் குறித்த ரகசியங்கள் உள்ளன என்று பாரிக்கர் தெரிவித்தது உண்மையெனில், இது மிகவும் தீவிரமான பிரச்னையாகும். எனவே, கோவா அமைச்சரவைக் கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பாரிக்கர் இணையதளத்தில் தெளிவுபடுத்த வேண்டும். அவரிடம் ரஃபேல் ஒப்பந்தம் குறித்த என்னவிதமாக உள்ளது, அவற்றில் ரகசியங்கள் உள்ளனவா என்பது குறித்த கேள்விகளுக்கு விடையளிக்கப்பட வேண்டும்" என்றார்.

மோடிக்கான மிரட்டலா?

இந்த நிலையில், மனோகர் பாரிக்கரின் இந்த ஆடியோ விவகாரம் நாடாளுமன்றத்தில் இன்று பெரும் புயலைக் கிளப்பியது. மக்களவையில் இவ்விவகாரம் தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை எதிர்கொள்ள மோடி அரசு தயங்குவது ஏன் என்று கேள்வி எழுப்பியதோடு, நாடாளுமன்றத்துக்கு வர மோடிக்குத் தைரியம் இல்லை என்றும், அவர் தனது படுக்கையறையில் ஒளிந்துகொள்கிறார் என்றும், பாதுகாப்புத் துறை அமைச்சரோ அதிமுக எம்.பிக்களுக்குப் (அமளி ஏற்படுத்தி அவையை நடத்தவிடாமல் செய்வதால்) பின்னால் ஒளிந்துகொள்கிறார் என்றும் சாடினார். 

ஆனால், ராகுலின் குற்றச்சாட்டை மறுத்துப் பேசிய  நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ராகுல் காந்தி  பொய்களைத் திரும்பத் திரும்பக் கூறி வருவதாகக் கூறினார். 

இந்த நிலையில், ரஃபேல் ஒப்பந்தமும் அது தொடர்பான ரகசியம் தன்னிடம் இருப்பதாக மனோகர் பாரிக்கர் சொல்வதாக வெளியான ஆடியோவும், பா.ஜனதா மேலிடம் மற்றும் மோடிக்கான மிரட்டலாகவே பார்க்கப்படுகிறது. கூடவே, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த விவகாரம் மத்திய அரசுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுக்கும் என்பது நிச்சயமாகிவிட்டது.